Friday, October 16, 2009

இஸ்லாமியச் சட்டம்(5)

அன்பளிப்பு ஓர் அலசல்

சொத்து கைமாறும் முறைகள்

ஒரு வியாபாரத்தில் பங்குதாரராக இருந்த ஒருவர், அந்த வியாபார சொத்துக்களில் ஒரு பகுதியை மற்றொருவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அன்பளிப்புப் பெற்றவர் வியாபாரத்தில் டெபாசிட் செய்தவராகக் கருதப்பட்டு, அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். அன்பளிப்பு கொடுத்தவரின் கணக்கில் செலவில் எழுதப்படும். இது போன்ற அன்பளிப்புகளில் அனுபவிக்கும் உரிமை உடனடியாக வழங்கப்பட வில்லை என்பதற்காக அன்பளிப்பு செல்லுபடியாகாமல் போய்விடாது (AIR 1964 - Madras239)
பொதுவாக பதிவு செய்த பத்திரத்தின் மூலம் அன்பளிப்பு கொடுக்கும் போது, அன்பளிப்பு பெறுபவிடமிருந்து பத்திரத்தைக் கொடுத்து விட்டாலே அன்பளிப்பு செல்லுபடியாகிவிடும். ஆனால் சில நிபந்தனைகளை உள்ளடக்கியதாக அன்பளிப்பு பத்திரம் அமைந்திருக்க வேண்டும். அன்பளிப்பு கொடுத்தவர் உண்மையாகவே அனுபவ பாத்தியதை வழங்கிவிட்டார் என்பதை சாட்சிகள் கொண்டு நிரூபிக்க வேண்டும். (AIR 1955 - Madras 600) ஒரு முஸ்லிம் கணவன் தன் மனைவிக்கு வாடகைக்கு விடப்பட்ட வீடு ஒன்றை அன்பளிப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், தான் உயிரோடு இருக்கும் வரை வாடகை வருமானத்தை தானே பெற்றுக் கொள்வதாகவும், நகரசபை வரிகளையும் தானே கட்டிவிடுவதாகவும் பத்திரத்தில் எழுதினார். பெயரளவில் அனுபவ உரிமையை மனைவிக்கு கொடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்போது அன்பளிப்பு செல்லாது. (AIR 1950 - Madras 761)

முஸ்லிம் சட்டப்படி அன்பளிப்பு செல்ல வேண்டுமானால் மூன்று முக்கிய நிபந்தனைகள் உண்டு

1. அன்பளிப்பு கொடுப்பவர் அதைத் தெரிவிக்க வேண்டும்.

2. நேரடியாகவோ மறைமுகமாகவோ அன்பளிப்பு பெறுபவர் அதை ஏற்றுக் கொள்ள ¼ண்டும்.
3. அன்பளிப்பு கொடுப்பவர் பெறுபவருக்கு அனுபவிக்கும் உரிமையை வழங்கிவிட வேண்டும்.

அன்பளிப்பு பத்திரத்தை அளிப்பதனால் மட்டும் அன்பளிப்பு செல்லும் என்று கூற முடியாது. அனுபவிக்கும் உரிமையை வழங்குவது முக்கியம். எந்த விதத்தில் இந்த உரிமையை வழங்க வேண்டும் என முஸ்லிம் சட்டத்தில் விவரிக்கப்படவில்லை. எனினும் அனுபவிக்கும் உரிமை வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பளிப்பு கொடுத்தவரும் வாங்கியவரும் அன்பளிக்கப்பட்ட வீட்டிலேயே குடியிருந்தால், கொடுத்தவர் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்பது அவசியமில்லை. அன்பளிப்பு பெற்றவர் வீட்டின் அனுபவ பாத்தியதையைப் பெற்றிருக்கிறார் என்பதற்கான அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டால் போதும்.
ஒரு முஸ்லிம் தானும், தன் மகனும் குடியிருக்கும் வீட்டை, மகனுக்கே அன்பளிப்பாகக் கொடுத்தார். தானும் தன் மனைவியும் உயிரோடு இருக்கும் வரை அந்த வீட்டில் குடியிருக்கும் உரிமை உண்டு எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில், அன்பளிப்பு கொடுத்தவர் உயிரோடு இருக்கும் வரை, அன்பளிப்பு கொடுத்தவர் உயிரோடு இருக்கும் வரை, அன்பளிப்பு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. (AIR 1956 - Tiruvangore - Cochin 268) அன்பளிப்பு கொடுத்தவரும், வாங்கியவரும் அன்பளிப்பு வீட்டில், பத்திரம் பதிவதற்கு முன்னால் சேர்ந்து குடியிருப்பது போல் இருந்து வந்தால், அன்பளிப்பு பெற்றவர் அனுபவிக்கும் உரிமையை வாங்கிவிட்டாரா, இல்லையா என்பதை அறிய ஒரு வழி உண்டு. முனிசிபல் Š பஞ்சாயத்து வரி, ரசீதுகள், பட்டா ஆகியவை மாறியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அன்பளிப்பு கொடுத்தவரே வரிகட்டியிருந்தால் அன்பளிப்பு செல்லாது. (AIR 1955 - NUC (ACE) 3568) முன்பு கூறிய மூன்று நிபந்தனைகள் சரியாக இருந்தால் போதும்; அன்பளிப்பு செல்லுபடியாகிவிடும். பத்திரம் எழுதித்தான் அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

அன்பளிப்பு கொடுத்தவரும் பெற்றவரும் கொடுத்தவரின் ஆயுள் முடியும் வரை சேர்ந்தே அனுபவிப்பது என எழுதியிருந்தால், அது செல்லாது (197PC - 97) / ஒருவர் தன் சொத்துக்களை பலருக்கு அன்பளிப்பு என எழுதி, தன் ஆயுள் வரை அந்த சொத்துக்களின் வருமானத்தை அடையவும், அடமானம் வைக்கவும் உரிமையை வைத்துக் கொண்டு தன் மறைவுக்குப் பிறகு மற்றவர்களுக்குச் சேர வேண்டும் என எழுதியிருந்தால் அதுவும் செல்லாது. (1959 - Kerala L.R.445) ஆனால் வக்ஃபுக்காக சொத்துக்களை அன்பளிப்புச் செய்யும் போது அனுபவிக்கும் பாத்தியதையை உடனுக்குடன் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஹனபி, ஷாபி ஆகிய இரு பிரிவுகளிலும் இதே சட்டம்தான் (AIR 1955 - NUC Madras 3165)


அன்பளிப்பு ஓர் அலசல் - 4

பொசின் - அனுபவிக்கும் உரிமை
அன்பளிப்பு சம்பந்தப்பட்ட எந்த வழக்கானாலும், ஒரு முஸ்லிம் அன்பளிப்பு செய்திருந்தால், அன்பளிப்பு பெற்ற நபர் அனுபவிக்கும் பாத்தியதையை எடுத்துக் கொண்டாரா, இல்லையா என்பதைத்தான் முதலில் கவனிக்கப்படும். ஆனால், சில சமயங்களில் அன்பளிப்பு கொடுத்தவரும், பெற்றவரும் ஒரே இடத்தில் Š அன்பளிப்பு கொடுக்கப்பட்ட இடத்தில் வசிக்கலாம். அப்போது அனுபவிக்கும் உரிமை கைமாறியது பற்றி மிகவும் விழிப்புடன் பரிசீலிக்கப்படும். இருவரும் ஒரே இல்லத்தில் வசித்து வருவதை வைத்து பாத்தியதை கைமாறவில்லை என்றும் கூறிவிட முடியாது. வீடு அன்பளிக்கப்பட்ட பிறகு, அதைப் பெற்றவர் வீட்டு வரி முழுவதையும் கட்டி வருகிறாரா என்பது முக்கியம்.அன்பளிப்பு கொடுத்த ஒரு முஸ்லிம் சீமாட்டி, அன்பளிப்புப் பத்திரம் பதிவான பிறகும் அதே வீட்டில் ஓர் அறையில் குடியிருந்ததால், அந்த வீட்டிலிருந்து வெளியேறி மறுபடியும் அங்கே குடிவரவேண்டும் என்பது அவசியமில்லை என ஒரு வழக்கின் தீர்ப்பாயிற்று. (1965 Š எல்.ஜே.519)

மற்றொரு வழக்கில், ஒரு வீட்டில் பாதிப்பகுதி ஒருவருக்கும், மற்ற பாதி இன்னொருவருக்கும் சொந்தமாக இருந்தது. அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டும் இருந்தது. இருவரில் ஒருவர் தன் பங்கை மற்றவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். இப்போது அந்த வீடு முழுவதும் அன்பளிப்புப் பெற்றவருக்கே சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நகரசபைப் பதிவேட்டிலும் அன்பளிப்பு பெற்றவரின் பெயரிலேயே வீடு இருந்தது. இவ்வழக்கில் அனுபவிக்கும் பாத்தியதை மாறாவிட்டாலும் அன்பளிப்பு செல்லும் என்று தீர்ப்பானது. (1956 ஆந்திரா டபிள்யூ.ஆர்.771) ஆனால், 1958 ஆந்திரா 7851 என்ற மற்றொரு வழக்கில் இதற்கு மாறான தீர்ப்பு வெளியானது.

ஒரு முஸ்லிம் தன் வீட்டைத் தன் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் அன்பளித்து விட்டதாகவும், அனுபவிக்கும் உரிமையையும் அளித்து விட்டதாகவும் அன்பளிப்பு பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பத்திரம் பதிவான பிறகு அதே வீட்டில் அனைவரும் சேர்ந்தே குடியிருந்து வந்தனர். இந்த அன்பளிப்பு செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. (1962 ஜே.கே)

ஒரு முஸ்லிம் அடமானம் வைக்கப்பட்ட தன் சொத்தை, தனது மைனர் பெண் குழந்தைக்கு அன்பளிப்பாக வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார். அன்பளிப்பு பத்திரம் பதிவான பிறகு, ரெவின்யூ ரிகார்டுகளில் மைனர் பெண் குழந்தையின் பேரிலேயே அந்தச் சொத்து கைமாறிவிட்டதாகக் குறிப்பிட்டார். பத்திரம் பதிவான ஓராண்டுக்குள் அடமானம் வைக்கப்பட்ட அந்தச் சொத்தை மீட்டுத் தருவதாக அதே பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த அன்பளிப்பும் செல்லும் எனத் தீர்ப்பாயிற்று. (1955 கேரளா எல்.டி.865)

ஒரு முஸ்லிம் சீமாட்டி தான் குடியிருக்கும் வீட்டை தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு அன்பளித்தார். மகன் மைனர். பின்னர் அதே வீட்டில் இருவரும் குடியிருந்தனர். எனினும், இந்த அன்பளிப்பு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. காரணம், முஸ்லிம் சட்டப்படி மைனருக்கு அன்பளிப்பு கொடுத்தால் பொருள் கைமாற வேண்டும் என்பது அவசியமில்லை.(1959 எம்.பி.225)

அடமானம் வைக்கப்பட்ட சொத்தை அன்பளிப்பாகக் கொடுக்கும் போது, அந்த சொத்திலிருந்து வருகின்ற வருமானத்தை கடன் கொடுத்தவரே பெற்று வருவதால், அனுபவிக்கும் உரிமையை அன்பளிப்பு பெற்றவரிடம் ஒப்படைக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே, அந்தச் சொத்தின் உரிமையாளராக அன்பளிப்பு பெற்றவரை ஆக்கிவிட்டால், அதுவே போதும். (1959 எம்.பி.225, 226)

ஒரு முஸ்லிம் தாய் தன்னுடைய ஐந்து மகள்களுடனும், ஒரு மகனுடனும் ஒரு வீட்டில் குடியிருந்தாள். பின்னர் அந்த வீட்டை தன் மகனுக்கு மட்டும் அன்பளிப்பதாகப் பத்திரம் பதிந்தாள். ஆனாலும், அதே வீட்டில் அனைவரும் சேர்ந்தே குடியிருந்து வந்தனர். அன்பளிப்பு கொடுத்த பிறகு, அன்பளிப்பு கொடுத்த அந்த அம்மையார் வீட்டிலிருந்து வெளியேறவில்லை என்பதற்காக, அனுபவிக்கும் உரிமை கைமாறவில்லை என்று கூற முடியாது. இதே போல, பெண்மக்களை விடுத்து, ஆண்மகனுக்கு மட்டுமே வீட்டைக் கொடுத்துவிட்டார் என்பதற்காக அன்பளிப்பு செல்லாது என்று கூறவும் முடியாது. (1964 எம்.எஸ்.369 (310, 311) 77 எம்.எஸ்.எல்.டபிள்யூ.65 (1964).

மாமியார் தன் மருமகளுக்கு செட்டில்மென்ட் மூலம் அன்பளிப்பு செய்த சொத்தில் அனுபவிக்கும் பாத்தியதை மருமகளின் கணவனிடம் இருந்தது. கணவனிடம் இருந்தால், மனைவியிடம் இருப்பது போலத்தான் என்று கருதப்பட்டு, அன்பளிப்பு செல்லும் என்று தீர்ப்பாயிற்று. (1959 சென்னை 630)

ஒரு முஸ்லிம் கணவர் தன் மனைவிக்கு ஒரு சொத்தை அன்பளித்தார். ஆனால், அன்பளிக்கப்பட்ட வீட்டில் இருவரும் குடியிருந்து வந்தனர். அல்லது வீட்டு வாடகையை கணவரே வசூலித்து வந்தார். இதனால் அன்பளிப்பு செல்லாமல் போய்விடாது.

அன்பளிப்பு கொடுத்த பிறகு ரெவின்யூ பதிவேடுகளில் மனைவியின் பெயரில் சொத்தை மாற்றும்படி கணவன் விண்ணப்பத்திருந்தாலே, அனுபவிக்கும் உரிமை மாறிவிட்டதாகத் தான் பொருள். (1963 பட்னா 229) (230, 231)

நிபந்தனையுடன் அன்பளிப்பு

நிபந்தனையுடன் அன்பளிப்பு கொடுக்கப்பட்டால், நிபந்தனை செல்லாது; ஆனால், அன்பளிப்பு செல்லுபடியாகிவிடும்.

'இந்த வீடு உன்னுடையது; நீ உயிரோடு இருக்கும் வரை இதை நீ அனுபவித்துக் கொள்ளலாம். நீ இறந்த பிறகு அது மீண்டும் என்னுடையதாகிவிடும்' இப்படி எழுதி ஒருவர் அன்பளிப்பு கொடுத்தால், அன்பளிப்பு செல்லும். ஆனால், நிபந்தனை செல்லாது.

-நீடூர், A.M. சயீத்
Source :Nidur.info

No comments: