Sunday, October 25, 2009

தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு


நாள் நட்சத்திரம் பார்க்காமல்,
ஜாதகக் குறிப்பையும் புரட்டாமல்,
மணம் முடித்தன
சுக்கிலமும் சுரோணிதமும்!

இரண்டும் ஒன்றாய் இணைவு கொள்ள
இதயமாய் துடித்தேன் நான்!

குழாய் மூலம்
வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவது போல
நேரத்துக்கு நேரம்
எனக்கு சோறு பாய்ச்சினார்கள்!

பேரில் பனி இருந்தாலும்
இந்த குடத்துக்குள்
குளிரில்லை!
நீரில் நான் மிதப்பதால்,
தண்ணீர் பஞ்சம்
எனக்கில்லை!!

இடத்தகராறு நிலத்தகராறு
நான் செய்யாமல்,
கிடைத்த இடத்தில்
குந்திக் கொள்வேன்!
திட உணவு உண்ணாவிட்டாலும்,
சத்துக்களை உறிஞ்ச மட்டும்
முந்திக் கொள்வேன்!!

தடைச்சுவராய் தோள்சுவர்கள்,
தாண்டிடுவேன் ஒரு நாள் நான்!

விடைதருவேன் கருவறைக்கு
வியனுலகைக் கண்டிடவே!!

கோபமென்றாலும் குஷியென்றாலும்
விடுவேன் ஒரு உதை!
என் உதைக்கு
மனிதவதைத் தடுப்பு சட்டத்தில்
தண்டனை தர வழியில்லை
என்பதால்,
தைரியமாகச் சொல்கிறேன் இதை!!

அம்மா!
நீ தூங்கும் போது
உனக்கே தெரியாமல்
மெல்ல எனைத் தடவிக் கொடுக்கும்
அப்பாவின் செய்கையை,
நீ அறிவாயா?!

கொஞ்சம் குறைவாக
சாப்பிடேன் அம்மா!!
இல்லாவிட்டால்,
என்னை எல்லாரும்
குண்டு பாப்பா என்பார்கள்!!

ஐயோ, என்ன இது?
என்னை என்னமோ
ஊடுருவிப் போகுது?!
ஓ!!
ஸ்கேன் பார்க்கிறாயா நீ!!

போம்மா,
நான் பையனா பொண்ணானு
காட்ட மாட்டேன்,
எனக்கு வெட்கமா இருக்கு!!

நான் நல்லா
வளர்ந்திட்டேன் அம்மா!
உள்ளே ஒரே இட நெருக்கடி!!

உதைத்துக் காட்டுகிறேன் பாரு,
அப்ப புரிஞ்சுக்குவ
என் பலத்தை!

போரடிக்கு அம்மா!
நான்
கதவைத் தட்டிக் கிட்டே
இருக்கிறேன்!

வெளியே வர நான் ரெடி!
நீ எப்ப
கதவைத் திறக்கப் போகிறாய்?!

-சுமஜ்லா.
.source:http://sumazla.blogspot.com"
நன்றி!

No comments: