Sunday, October 4, 2009

எழுந்து கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும், விழுந்து கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்!

அஜீஸ் நிஸாருத்தீன்
[ இந்தியா முழுவதும் பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் அதிகமிருந்தாலும், முழுமையான மார்க்க கல்வி முஸ்லிம்களை சென்றடையாமல் இருக்கிறது. இன்னும் சென்னையிலும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌ள்ளிவாச‌ல்க‌ளிலும் ஜூம் ஆ தொழுகைக்கு பின் ம‌த‌ர‌ஸா க‌ட்டுவ‌த‌ற்கு வாச‌லில் துண்டை விரித்து கையேந்தும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்க‌ள்.
பள்ளிவாசல்கள் சமுதாயத்தின் மத்திய நிலையங்கள் என்று மார் தட்டுவோர் கூட அதை ஒரு சுலோகமாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். பாடசாலைகளையும் பள்ளிவாசல்களையும் ஒரே கண்ணால் பார்க்காமல் ஓரவஞ்சனையோடு பார்க்கவே பழகிவிட்டார்கள்.
அறிவு இல்லாத ஆன்மீகம் மிகவும் பயங்கரமானது. அது நஞ்சை விடக் கொடியது. அறிவில்லாத வாழ்க்கை விஷத்தோடு விளையாடுவதற்கு ஒப்பானதாகும். ]
பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்து கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது. தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள்.
பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக் கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும் தொழுகைக்கு ஆள் இல்லாவிட்டாலும் பள்ளிவாசல்கள் மட்டும் பெரிதாக கட்டப்படுகின்றன. காலாலகாலமாய் ஒரு பள்ளிவாசலின் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்க்ள் பல பள்ளிவாசல்களாய் பிரிந்தும் நிற்கிறார்கள். கொள்கை ரீதியலான் பிரிவினை கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறது.
பள்ளிவாசல்கள் இப்படி எழுந்து வரும்போது முஸ்லிம் பாடசாலைகள் பின்தங்கியே நிற்கின்றன. கல்வி தொடர்பான முஸ்லிம்களின் வரலாறு கசப்பானதாகவே இருந்து வருகிறது. காலா காலமாய் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள்.  பாடசாலைகள் கீழே விழுந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்கள் மேலே மேலே எழுந்துக்கொண்டிருக்கின்றன.
பள்ளிவாசல்கள் சமுதாயத்தின் மத்திய நிலையங்கள் என்று மார் தட்டுவோர் கூட அதை ஒரு சுலோகமாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். பாடசாலைகளையும் பள்ளிவாசல்களையும் ஒரே கண்ணால் பார்க்காமல் ஓரவஞ்சனையோடு பார்க்கவே பழகிவிட்டார்கள்.
முஸ்லிம் சமூகத்தில் பள்ளிவாசலும், பாடசாலையும் இரண்டு துருவங்களாக இருந்து வருகின்றன. இந்த முரண்பாடான நிலை சமூகத்தில் அறிவில்லாதோர் ஆள்பலத்தை அதிகரிக்கச் செய்கிறது. அறிவீனத்தை தமக்கு சாதகமாக்கும் இந்த முயற்சி திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சர்வதேச சதியாகும். அந்தச் சதிக்கு வெளிநாட்டுப்பணம் இஸ்லாமிய இயக்கங்களினூடாக இரைக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.
அறிவின்றி வளரும் ஆன்மிகம் சமூகத்தில் பிரச்சினைகளையும், பிளவுகளையும் தோற்றுவித்து வருகிறது. இது எங்களுக்கு வேதனையைத் தந்தாலும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. மக்கள்  தொகைக்கு ஏற்ப பாடசாலைகள் அதிகரிக்கப்படாதது பாரிய குறையாக இருக்கிறது. முஸ்லிம் பாடசாலைகளின் பற்றாக்குறையால் அல்லது பௌதிக வளப்பற்றாக்குறையால் கல்வி பெற மாற்று மத பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
மாற்று மத பாடசாலைகளில் முஸ்லிம் மாணவ மாணவிகள் கலாசார ரீதியிலான பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். சில மாற்று மத பாடசாலைகள் முஸ்லிம் மாணவர்களை முற்றாக நிராகரித்தும் வருகின்றன. மறுபுறம் அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப பாடசாலைகள் அபிவிருத்தியடையாத நிலையும், இருக்கின்ற பாடசாலைகள் குறைந்த பௌதிக வளங்களை கொண்டிருப்பதுவும் இந்த பின்னடைவிற்கான முக்கிய காரணங்களாகும்.
சமூகத்தின் இரண்டு கண்களாக பள்ளிவாசல்களும், பாடசாலைகளும் கணிக்கப்பட வேண்டியுள்ளன. ஆனால் சமுதாயம் பள்ளிவாசல்களை மட்டும் கட்டிப்போட்டு அழகு பார்க்கின்ற கைங்கரியத்தையே கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறது.
இரண்டு கண்களில் ஒன்று மிளிர்ந்துக்கொண்டும் ஒன்று குருடாகிக் கொண்டும் செல்கிறது. வெளிநாட்டுப் பணம் கூட பள்ளிவாசல்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணத்தை கொண்டு வந்து கொட்டும் தஃவா இயங்கங்கள் கல்விப் பிரச்சினைகளை, பாடசாலை பிரச்சினைகளை அவர்கள் முன்வைக்கும் போது கல்வியை உயிர்ப்பிப்பது என்னவோ மாற்று மத விவகாரம் போல் நினைத்து முகம் சுளித்து நழுவி வருகின்றன.

''பிள்ளைகளுக்கு ஒழுங்காக படிக்க வகுப்பறைகள் இல்லை உதவி செய்யுங்கள்'' என்று இந்த இயக்கங்களிடம் கேட்டால்,  ''தொழுகை அறை ஒன்று கட்டித்தரட்டுமா? ''என்று பதில் தருகிறார்கள். பசிக்கு உணவு கேட்கும் போது உங்கள் தலைக்கு அணிய ஒரு தொப்பி தரட்டுமா? என்று கேட்பது போல் இவர்களின் பதில் இருக்கிறது. உங்கள் பாடசாலை பிரச்சினையை நாங்கள் பலருக்கு அறிவித்திருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று! உம்மத்தின் பிரச்சினையை அவர்கள் பொறுப்பேற்காது, கல்விப் பிரச்சினை என்ன பெரிய பிரச்சினையா என்பது போல் அதை எங்களது பிரச்சினையாக்கி காலத்தை மெதுவாக கடத்துகிறார்கள்.  முஸலிம் உம்மத்தின் உண்மையான பிரச்சினைகளை ஓரம்தள்ளிவிட்டு வேறு ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு வேலை பார்க்கும் இவர்கள் ஒரு விபரீதத்தோடு விளையாடுகிறார்கள்.
இதை வாசிக்கும் உங்களுக்கு பொறுப்புள்ளவர்களாய் காட்டிக்கொள்ளும் இவர்கள், மூடர்களைப் போல் பதில தருகிறார்களா? என்று நீங்களே யோசிக்கலாம். மூடனைப்போல் பதில் தருவதற்கு உண்மையில் அவர்கள் மூடர்கள் அல்லர். கல்வி, பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி விழி பிதுங்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்களே முஸ்லிம்கள் ! உண்மையில் அவர்கள்தான் மூடர்கள்.
இந்த இயக்கவாதிகள் படு புத்திசாலிகள் ! காரணம் முஸ்லிம் சமுதாயம் கல்வி கற்றால், கல்வியில் முன்னேற்றம் கண்டால், பொருளாதார வளர்ச்சி கண்டால்... இஸ்லாத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நடாத்தும் இவர்களின் போலி தத்துவங்கள் தவிடுபொடியாகும். இவர்களது தலைமையகங்கள் பெட்டிப் படுக்கைகளோடு தத்தமது நாட்டுப் புறங்களுக்கு நாடு கடத்தப்படும் என்று யதார்த்தத்தைப் புரிந்துதான் இவர்க்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை புரம்தள்ளி, கல்விக்கு கரம் கொடுக்காத இந்த ஈனச் செயலை செய்து வருகிறார்கள்.
இந்த இயக்கங்களுக்காக அந்நிய சக்திகளின் ஆசிர்வாதத்தோடு அரபுகளின் கோடிக்கணக்கான கருப்புப் பணம் (வங்கிகள் ஊடாக மட்டுமல்ல) கொழும்பில் வந்து கொட்டப்படுகிறது. இவற்றால் கொழும்பு மக்களுக்கு ஒரு துரும்பும் கிடைப்பதில்லை. தத்தமது இயக்கம் ஆதிக்கஞ் செலுத்தும் ஊர்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டுமே இது செலவிடப்படுவதாக குற்றம் சாட்டவும் படுகிறது. கொழும்பு முஸ்லிம்கள் கல்வி, பொருளாதார பிரச்சினைகளுக்காக கையேந்தி நிற்கிறார்கள். அவர்களைக் கவனிக்க யாருமே இல்லை.
பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் அல்லல் படுகின்றார்கள். முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாட்டால் அந்நிய மத பாடசாலைகளுக்கு செல்லும் பிள்ளைகளும், பெற்றோரும் முஸ்லிம் ஆடை அணிந்து வரக் கூடாது என்று அச்சுறுத்தப்படுகிறார்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிழலில் குர்ஆனின் ஆட்சியை நிலை நிறுத்த கனவு காணும் கொள்கைவாதிகளோ, விரல் ஆட்டும் சுன்னத்தைக் கூட விடமாட்டோம் போராடி மரணிப்போம் என்று வீராப்பு பேசுகின்ற புரட்சிவாதிகளோ ஷரீஆ உடைக்காக தனது கல்வி உரிமை பறிக்கப்பட்டு முலையில் முடங்கிக் கிடக்கும் பிஞ்சு உள்ளங்களுக்காக பேச முன்வரவில்லை. இப்படி பல சம்பவங்கள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றது.
முஸ்லிம் என்றே ஒரே காரணத்திற்காக கல்வி மறுக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கின்றார்கள் என்றால் அதற்கு யார் பொறுப்பு? இஸ்லாமிய அகீதாவையும், ஆட்சியையும், சமூக அமைப்பையும் பற்றி கதறிக்கொண்டிருப்பவர்களால் ஏன் இவற்றை கண்டுகொள்ள முடியாமல் இருக்கிறது. ஷிர்க்கையும், பித்அத்தையும் வேரறுக்க வந்தோரால் இதனை எப்படி பார்த்தக்கொண்டிருக்க முடிகிறது.
முஸ்லிம்களுக்கு ஒழுங்கான பாடசாலைகள் இருந்தால் அந்நிய மத பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதே! அந்நிய பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகளை பலத்த உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவது இப்போது அதிகரித்து வருகிறது.
முஸ்லிம் பாடசாலைகளின் தரத்தையும் வளங்களையும் அதிகரிக்க இந்த இயக்கங்கள் எதுவுமே செய்யத் தயாராக இல்லை. முஸ்லிம் சமூகத்தின் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல் இந்த இயக்கங்கள் முரண்டு பிடிக்கின்றன. பள்ளிவாசல்கள் கட்டுவதும், கிணறு வெட்டுவதும், உழ்ஹிய்யா கொடுப்பதும் மட்டும் தான் உயரிய பணிகள் என்ற மனப்பாங்கை இவை மெது மெதுவாக மக்கள் மனங்களில் பதித்தும் வருகின்றன.
இஸ்லாம் வேண்டி நிற்கும் அடிப்படை கல்வி, பொருளாதார செயற்பாடுகளிலிருந்து முஸ்லிம் உம்மத்தை வேறுபக்கம் திசை திருப்பும் இந்த வெளிநாட்டு பணத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? பாடசாலைகளை முற்றாக நிராகரித்து விட்டு பள்ளிவாசல்களை கட்டும், மாடுகளை வெட்டும், கிணறுகளை வெட்டும் இந்த இயக்கங்களின் செயற்பாடுகளின் அந்தரங்கம் என்ன?

சிந்தித்துப்பாருங்கள்!
உண்மையில் கல்வியின் எழுச்சி ஒரு சமுதாயத்தின் எழுச்சியாகும், அந்த எழுச்சியின் ஆணி வேர் தான் பாடசாலைகள், கல்விக் கூடங்கள். ஒரு சமுதாயத்தின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்றால் இந்த சமுதாயத்தின் கல்வி சார்ந்த செயற்பாடுகளை பாடசாலைகளை செயலிழக்கச் செய்ய வேண்டும் பலமிழக்கச் செய்ய வேண்டும்.
கல்விக் கூடங்கள், பாடசாலைகள் அறிவை வளர்க்க துணை செய்கின்றதன. பள்ளிவாசல்கள் ஆன்மிகத்தை வளர்க்க துணை செய்கின்றன. இவை இரண்டும் சரி சமமாக செயற்பட்டால்தான் சமுதாயத்தால் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
பள்ளிவாசலினதும் பாடசாலையினதும் இந்த சமநிலையை சீர் குலைக்கும் சதியாகத் தான் இந்த இயக்கங்களின் செயற்பாடுகளை பார்க்க முடிகிறது.  ''பள்ளிவாசல்களை மட்டும் கட்டுவோம்'' அல்லது ''உழ்ஹிய்யா மட்டும் தான் கொடுப்போம் பாடசாலைக்கு தருவதற்கு எம்மிடம் பணம் இல்லை'' என்ற செயற்பாடுகளைப் பார்க்க முடிகிறது.
பள்ளிவாசல்கள் அதிகமாக கட்டப்பட்டிருந்த போதும், ஆன்மீக ரீதியிலான வழிகாட்டல் சமூகத்திற்கு கிடைக்கவில்லை. இன்று முஸ்லிம் இளைஞர்கள் அதிகமானோர் பல குற்றச்செயல்களுக்காக அகப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒழுங்கான கல்வியறிவு இவர்களுக்கு கிடைக்காததே இதற்குரிய காரணமாகும். கொழும்பில் குற்றச் செயல்களுக்கு பெயர்போன ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறியிருக்கிறது. இந்த பயங்கர நிலையிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமாக இருந்தால் கல்வி ரீதியிலான ஒரு எழுச்சி அவசியமாகின்றது. கல்வி ரீதியிலான பிரச்சினைகள் ஆராயப்பட்டு துரித பரிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த அழிவில் நின்றும் மீட்டெடுக்க துரித வேலைத்திட்டம் அவசியமாகிறது.
ஆனால் இது நடைபெறுகிறதா? சமுதாயத்தின் பின்னடைவை கருத்தரங்குகளின் தலைப்புகளாக வைத்து வெளிநாடடு காசு பறிக்கும் கைங்கரியங்களாக மடடும்தானே நாம் இதனைப் பார்க்கிறோம்?
பள்ளிவாசல்கள் அதிகரிக்க அதிகரிக்க சிறைச்சாலைகளுக்கு செல்வோர் தொகை எப்படி அதிகரிக்கிறது? சிறை செல்வோர் தொகை குறைய வேண்டுமே? வைத்தியர்களும், வைத்திய சேவைகளும் அதிகரிக்க அதிகரிக்க நோயாளர்களும் அதிகரிக்கின்றார்கள் நோய்களும் அதிகரிக்கின்றன. இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒரு தொழில் நுட்ப கோளாரே இந்த சமூகத்தில் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.
பள்ளிவாசல்கள் கட்டிய அதேயளவு பாடசாலைகள், கல்விக் கூடங்கள் கட்டியிருந்தால் நிச்சயம் இதில் மாற்றம் நிகழ்நதே இருக்கும். ஆன்மீக, அறிவியல் வழிகாட்டல் சமமாக கிடைத்திருக்கும்.
30 வருடங்களுக்கு பிறகு பள்ளிவாசல்களில் இடநெருக்கடி வருமென்றா இப்போது பள்ளிவாசல் கட்டுகிறீர்கள்? கல்வி கற்க பாடசாலைகள் இல்லாமல் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்களே அவர்களைப் பற்றி ஏன் வாய்திறக்க உங்களால் முடிவதில்லை. இந்தியா முழுவதும் பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் அதிகமிருந்தாலும், முழுமையான மார்க்க கல்வி முஸ்லிம்களை சென்றடையாமல் இருக்கிறது. இன்னும் சென்னையிலும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌ள்ளிவாச‌ல்க‌ளிலும் ஜூம் ஆ தொழுகைக்கு பின் ம‌த‌ர‌ஸா க‌ட்டுவ‌த‌ற்கு வாச‌லில் துண்டை விரித்து கையேந்தும் ஹ‌ழ்ர‌த்துக‌ள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்க‌ள்.
பள்ளிவாசல் மட்டுமே கட்டும் இந்த கலாசாரம் விபரீதத்தைத் தான் விதைத்து வருகிறது. அதனால்தான் பள்ளிவாசல் எழுகின்ற அதேவேளை பாடசாலை விழுந்துக்கொண்டிருக்கிறது. கல்வித்தரம் விழுகிறது. வெறுமனே பள்ளிவாசல்கள் அதிகரிக்கப்படுவதால் மட்டும் சமுதாயம் சீர்பெறுவதில்லை என்ற உண்மையை இதிலிருந்து விளங்க முடிகிறது. ஒருவன் மனிதனாக வாழ்வதற்கு அவனுக்கு அறிவும் ஆன்மீகமும் அவசியம். அவனுக்குரிய அறிவிற்கான , கல்விக்கான அத்தனை வாசல்களையும் அடைத்து விட்டு வெறுமனே பள்ளிவாசல்களை மட்டும் கட்டிப்போடுவதால் ஓர் ஒப்பற்ற சமுதாயம் எப்படி உருவாகும்?
இநத உண்மையை இஸ்லாத்தின் எதிரிகள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். இந்த எதிரிகளின் மறைமுக வழிகாட்டலிலும், பண உதவியிலும் இயங்கும் இந்த இயக்கங்கள் முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திடும் வேலைத்திட்டங்களுக்கு ஒரு போதும் உதவப்போவதுமில்லை.
கல்வி அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள், வறுமை ஒழிப்பு, வீடமைப்பு, தொழில் வாய்ப்பு, அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற அத்தியாவசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதை மறுத்தும், இருட்டடிப்பு செய்தும் வருவதிலிருந்து இவை தெளிவாக தெரிகின்றன.
மாறாக, முஸ்லிம்களின் பிரச்சினைகளை வேறுபக்கம் திசைதிருப்பிவிட்டு பள்ளிவாசல்கள் கட்டுவதிலும், உழ்ஹிய்யா பகிர்வதிலும் உள்ள மர்மம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு தளத்தை உருவாக்குதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
அறிவு இல்லாத ஆன்மீகம் மிகவும் பயங்கரமானது. அது நஞ்சை விடக் கொடியது. அறிவில்லாத வாழ்க்கை விஷத்தோடு விளையாடுவதற்கு ஒப்பானதாகும். இன்றைய ஆப்கானிஸ்தான் அதற்கு சிறந்த உதாரணம். அறிவில்லாத ஆன்மிக வாதிகளை எந்த நாசகார சக்தியாலும் இலகுவாக இயக்க முடியும். ஆப்கான் தாலிபான்களை போஷித்து வளர்த்த அமெரிக்கா அதன் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு இந்த அறிவில்லாத ஆன்மிகத்தை ஆயுதமாக பாவித்தது. இன்று அமெரிக்கா முஸ்லிம் நாடுகள் மீது நடாத்தும் அனைத்து கொடுமைகளுக்கும் ஆப்கான் காரணமானது. அடிப்படையானது.
அமெரிக்காவிற்கும் அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் தேவை நான் மேலே கூறிய அறிவில்லாத ஆன்மீகம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், அரபு மன்னராட்சி்ககும் தம் அரசியலை சீராக கொண்டு செல்ல இந்த அறிவில்லாத ஆன்மீகம் உறுதுணையாய் இருக்கிறது. எனவேதான் கல்வி நிராகரிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் மட்டும் உயிராக்கப்படுகின்றன. அறிவில்லாத ஆன்மீகத்திற்கு உரமூட்டப்படுகின்றது. தஃவா என்ற போர்வையில் கல்விக்கு எதிராக ஒரு மௌனமான சதி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
எனவே அறிவில்லாத சமுதாயம் ஒன்றை நிர்மாணிக்கும் செயல்திட்டத்தை இஸ்லாத்தின் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்காக இந்த இயக்கங்கள் செய்து வருகின்றன. அதற்காகவே பள்ளிவாசல் மட்டும் கட்ட பணம் வருகிறது. மாடு அறுக்க மட்டும் பணம் வருகிறது. ஸக்காத் பெயரளவில் நிறைவேற்றப்படுகிறது. பாடசாலைகள் முற்றாக நிராகரிக்கப்படுகின்றன. இந்த கசப்பான உண்மையை புத்திஜீவிகளால்(?) புரிந்துக் கொள்ளமுடியாமல் இருப்பதுவும் ஒரு புதிராகத்தான் இருக்கிறது.
சிலவேளை ... வயிற்றுப் பசியை அடக்கிக் கொண்டு இவர்கள் இஸ்லாத்திற்காக எழுந்து நின்றால், சொந்த உழைப்பில் உண்டு அல்லாஹ்வின் தீனை என் சொந்த உழைப்பில், சொந்த பணத்தில் மேலோங்கச் செய்வேன் என்று எழுந்து நின்றால்...

வெளிநாட்டுப் பணத்த வீசியெறிந்து விட்டு அல்லாஹ்வினதும், அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தை மட்டும் வைத்தே தஃவா செய்வோம் என்று எழுந்து நின்றால்... முஸ்லிம் உம்மத்தின் பிரச்சினைகனை ஒழுங்காக புரியும் பாக்கியத்ததை அல்லாஹ் நிச்சயம் இவர்களுக்குக் கொடுப்பான்.
நான் மேலே பதித்தவை சமுதாயம் எதிர் நோக்கிக்கொண்டிருக்கும் சவால்கள். இந்த இயக்கங்கள் பள்ளிவாசல்களோடு சேர்த்து பாடசாலைகளையும் கட்ட வேண்டும் ! பாடசாலை மற்றும் முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க அரபுகளின் சதகா ஸக்காத பணத்தை இவர்கள் கொண்டு வந்து கொட்ட வேண்டும். மாடு அறுக்க கோடிக்கணக்காய் கொடுக்கும் அரபுகள் பாடசாலைக் கட்டுவதற்கு ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்?
இதில் ஒரு மர்மம் மறைந்திருப்பது உங்களுக்குப் புரிகிறதா?அந்தப் பணம் உண்மையில் முஸ்லிம்களின் பணமல்ல. முஸ்லிம்களின் பணம் என்ற் போர்வையில் முஸ்லிம்களை திசை திருப்ப இலங்கைக்கு வரும் எதிரிகளின் பணம் என்பதை மட்டும் புரிந்துக்கொள்ள முடியும். இந்த எதிரிகளின் வேலைத்திட்டத்திற்கு செயல்திட்டம் வகுக்கும் தரகர்களாக தான் இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன.
இந்த இயக்கங்களுக்கு பணம் வழங்கும் அரபு உளவு நிறுவன எஜமானர்கள் அமெரிக்காவின் நண்பர்களான இருக்கின்றார்கள். அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்து முஸ்லிம்களை கொலை செய்வதற்கு அமெரிக்காவிற்கு பக்கபலமாக இந்த அரபு எஜமானர்கள் இருக்கின்றார்கள்.
இந்த அரபுகளுக்கு முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் இரக்கம் இருக்கிறதா? அப்படியிருந்திருந்தால் முஸ்லிம்களை கொல்லும் அமெரிக்க விமானங்களை தமது அரபு பூமியில் தரையிறக்கி அவற்றிற்கு இலவசமாக எண்ணெய் வழங்கியிருப்பார்களா?
இஸ்ரேலோடு கைகுலுக்கும் அமெரிக்க கைகளை இந்த அரபுகளால் பற்றத்தான் முடியுமா? ஈராக்கில் பள்ளிவாசல்களை குண்டு போட்டு தகர்க்கும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் அரபுகள் இலங்கையில் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவி புரிகிறார்கள்.
ஒரு இடத்தில் அல்லாஹ்வின் இல்லங்களை உடைக்க உதவி புரிகிறார்கள். இன்னுமொரு இடத்தில் அல்லாஹ்வின் இல்லங்களை அமைக்க உதவி புரிகிறார்கள். இது வேடிக்கையாக இல்லையா? இது முரண்பாடாக இல்லையா?
எத்தியோபியா சோமாலியாவில் பட்டினியில் முஸ்லிம்கள் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் இறக்கும் போது பார்த்துக்கொண்டு சுவர்க்க வாழ்வை அனுபவிக்கும் அரபு எஜமானர்கள் உழ்ஹிய்யா இறைச்சிக்கான மாடுகளுக்கான பணத்தை எத்தியோபியா சோமாலியாவிற்கு அனுப்பாமல் இலங்கைக்கு அனுப்புகிறார்கள். (இது இலங்கையில் பௌத்த முஸ்லிம் உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்த அமெரிக்க அரபு உளவு நிறுவனங்கள் வகுத்துள்ள ஒரு வியூகம் )
அது அமெரிக்க நிற வெறியால் பாதிக்கப்பட்டு மரணத்தருவாயில் இருக்கும் கறுப்பு மனிதனுக்கு உதவக்கூடாது என்ற அமெரிக்க கொள்கைக்கு ஆதரவான அரபு நிலைப்பாட்டை வெளிச்சமிட்டு காட்டுகிறது. எனவே அரபு உளவு நிறுவனங்களின் பணத்தால் இந்த இயக்கங்கள் பெறும் உதவியால் எழுந்து வரும் பள்ளிவாசல்களின் பின்னணியில் ஒரு சமுதாயத்தின் எதிர்காலம் புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஹிஜாப் அணிந்து பாடசாலை வரக் கூடாது என்ற தடையால் பாதையில் வைத்து தனது ஹிஜாபை கழற்றி பைக்குள் திணித்து , நீண்ட காற்சட்டையை முழங்கால் தெரிய மடிக்கும் அவலம் வருவதை தடுக்க முடியாமல் உள்ளது. பாடசாலைக்கு பக்கத்தில் வசித்தும் மாற்று மத பாடசாலை என்ற காரணத்திற்காக வாசல் மூடப்பட்டு அவமானப்படும் அவலத்தைப் போக்க முடியாமல் உள்ளது.
இந்த அவலம் பற்றி, இஸ்லாத்தைக் காப்பதற்காகவே செயற்படுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் இயக்கங்களை நிலை என்ன?
இஸ்லாத்தை மறந்து விட்டு, இயக்கத்தை வளர்க்கும் சிந்தனையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த இயக்கங்கள் பணம் வழங்கும் எஜமானர்களை திருப்திப் படுத்தும் நயவஞ்சகத்தனத்திலிருந்து மீண்டு... இஸ்லாத்தை வளர்த்து அல்லாஹ்வை மட்டும் திருப்தி படுத்தும் உயரிய பணிக்காக எழுந்து வரவேண்டும்.
அவகாசம் நிறையவே இருக்கிறது....!

நன்றி:   badrkalam.blogspot.com


No comments: