Thursday, October 29, 2009

பத்து வயசில...

பத்து வயசில எண்டு தொடங்கி சொல்ல வந்த விஷயம் அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசிலைப் பற்றித்தான். இப்ப எனக்குப் பத்து வயசில நடந்த நிகழ்வுகளில ஒண்டு ரெண்டைத் தவிர எல்லாமே மறந்து போச்சு. அறியாத வயசு, பால்மணம் மாறாத அந்தப் பால்குடி வயசில நடக்கிற சோதினையைப் பற்றித்தான் சொல்லப் போறன். சோதினை நடக்கிறதொண்டும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதுக்கு நடக்கிற ஆயத்தங்களும் ஆரவாரங்களும்தான் ஏனெண்டு எனக்கு இன்னும் புரியேல்ல, சரியா விளங்கேல்ல.

அஞ்சாம் ஆண்டுப் புலமைப் பரிசில் சோதினை வைக்கிறதுக்கு காரணம் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேலே எடுக்கின்ற வறிய மாணவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து படிப்பதற்காக சிறு தொகை நிதியை பரிசிலாக வழங்குவதாகும். இதுக்காகத்தான் அரசாங்கம் இந்தச் சோதினையையே ஆரம்பிச்சதெண்டு சொல்லுறாங்கள். அப்பிடியெண்டா அதுக்காக ஏனிந்த ஆரவாரங்கள்? சோதினை தொடங்கப் பட்டதன் நோக்கம் இப்ப பலருக்குத் தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் நல்லாத் தெரியும் இதில நல்ல புள்ளியெடுத்தால் பெரிய பள்ளிக்கூடங்கள் என்று சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களுக்கான ஆறாம் ஆண்டு அனுமதியை வாங்கலாம். அதை விட பெற்றார் நெஞ்சை நிமித்திக் கொண்டு தன்னோட வேலை செய்யுறாக்களுக்கு கேக் குடுக்கலாம். சித்தியடையத் தவறிய மற்றப் பிள்ளைகளின்ர பெற்றாரை நக்கலடிக்கலாம். ஆக மொத்தத்தில பெற்றார் தங்கட சுய மரியாதைக்காகப் பிள்ளைகளின்ர பெறுபேற்றைப் பயன்படுத்தினம்.

அஞ்சாம் ஆண்டெண்டால் பிள்ளைக்குப் பத்து வயசு. காலமை நாலு மணிக்கு எழும்ப வேணும். அதுக்கெண்டு விழிப்பூட்டும் கடிகாரங்கள் வீட்டில விழிப்பா இயங்கும். பிள்ளை உறக்கத்தின் இனிமையை மேலும் அனுபவிக்கப் புரண்டு படுத்தால் அம்மா மாறி அப்பா மாறி சத்தம் போடுவினம். பிள்ளை அரைகுறை மனசோட எழும்பி படிக்கிறதுக்கு மேசையில இருந்தா பாவம் பிள்ளைக்கு நித்திரை வெறி இன்னும் முறிஞ்சிருக்காது. புத்தகம் தலைகீழாக் கிடக்குதோ எண்டதையே பிரித்தறிய முடியாத நித்திரைக் கலக்கத்தில தூங்கி விழும் (துலாப் போடும் - ஊர் வழக்கு). காலம வெள்ளண இதமான குளிர் இன்னும் மெத்தையத்தான் ஞாபகப்படுத்தும். சிலவேளை சுடச் சுட தேத்தண்ணி வரும். அதைக் குடிச்சிட்டுக் கொஞ்சம் படிச்சாலும்  அது முடிய பள்ளிக்கூடம், முடிஞ்சு வர சாப்பாட்டை அவசரமா முடிச்சுட்டு தனியார் வகுப்பு. சொன்னா நம்ப மாட்டியள் கன பிள்ளைகளின்ர காலமை மத்தியானச் சாப்பாடுகள் காருக்குள்ளேயே நடக்குது.(என்ன கொடுமையோ?) முடிஞ்சு வர வீட்டில பிரத்தியேக வகுப்புகள். கொஞ்ச நேரம் சாப்பாடு. பிறகு படிப்பு. பதினொரு மணிக்குத் தான் பிள்ளைக்குப் படுக்கிறதுக்கு அனுமதி. (எனக்கு இவ்வளவத்தையும் எழுதவே களைச்சுப் போச்சு, நித்திரை தூங்குது)

பிரத்தியேக வகுப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேணும். முதல்ல எத்தினை ஆசிரியர்களை ஒழுங்கு படுத்திறதெண்டதிலேயே போட்டி. பக்கத்து வீட்டில அல்லது கூட வேலை செய்யுறவை ரெண்டு பேரை வச்சுப் படிப்பிக்கினம் எண்டா நான் மூண்டு பேரை ஒழுங்கு படுத்த வேணும். சரி அதுதான் போச்சுதெண்டா வாத்திமாருக்குள்ளேயே திறமான வாத்திமாரை பிடிக்க வேணும். அவர் தனக்கு நேரமில்லை,  இடைக்கிட வரமாட்டன் எண்டு சொன்னாலும் பரவாயில்லை. ஏனெண்டா வெளியில ஆரும் கேட்டா இன்னார் படிப்பிக்கினம் எண்டு சொல்லிக் கொள்ளலாம்தானே. அதை விட ஆசிரியருக்கு குடுக்கிற சம்பளத்திலையும் போட்டி ஆர் கூடக் குடுக்கிறதெண்டு. பிரத்தியேக வகுப்புச் சொல்லிக் குடுக்கப் போகும் நண்பன் ஒருவன் சொன்னான், தான் சில வேளை மனச்சாட்சியாக குறஞ்ச காசு வாங்கினாலும் சில பெற்றோர் சொல்லுவினமாம் உங்களுக்கு கூடக் காசு தந்தாத்தான் நீங்கள் படிப்பிக்கிறது பிள்ளைக்கு ஏறுமெண்டு. என்ன கண்டுபிடிப்போ? என்னத்தைச் செய்தென்ன? பிள்ளையெல்லா படிக்கவேணும்,  பிள்ளையெல்லோ சோதினை எழுத வேணும். எப்பத்தான் இது பெற்றாருக்கு விளங்கப் போகுதோ? ஏன் எதுக்காக படிக்கிறன் எண்டு தெரியாமலே பிள்ளை வதைபடுது - வாய் திறந்து தான் படும் வேதனையை வெளியில சொல்ல முடியாத வயசில.

இப்போது புலமைப் பரிசில் பரீட்சையெல்லாம் உயர்தரதப் பரீட்சையின் நிலைக்கு ஒப்பாக வைத்து நோக்கப்படுகின்றது. அதாவது வாழ்வா சாவாப் போராட்டம் போல. உயர்தரத்தில் தவறினால் பல்கலைக்கழக அனுமதியில்லை. ஐந்தாம் ஆண்டில் தவறினால் உயர் பாடசாலை அனுமதியில்லை. இப்போதெல்லாம் சாதாரண தரத்திற்கு மதிப்பே இல்லை. புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்கள் உயர்தரக் காலங்களில் பிரகாசிப்பதில்லை என்ற பொதுவான அவதானிப்புகள் இருந்த போதும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஆரவாரம், எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை.

முதலாவதாக சிறு வயதுப் பிள்ளைகள் தங்களுக்கான சுதந்திரங்களைத் தொலைத்துவிட்டு பரீட்சை என்ற போர்வையில் கொடுமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஓய்வே இல்லாமல், பொழுது போக்குகளே இல்லாமல் படிப்பு என்னும் நிலை களையப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் சுய கெளரவம் இந்தப் பரீட்சையின் பெறுபேற்றிலேயே தங்கியிருக்கிறது என்ற எண்ணம் களையப்பட  வேண்டும். இவ்வெண்ணம் தோற்றம் பெறுவதற்கான முழுமுதற்காரணம் உயர் பாடசாலைகளுக்கான அனுமதி இப்பெறுபேற்றிலேயே தங்கியிருத்தலாகும். இதற்கு அரசாங்கம் இப்பரீட்சையின் நோக்கம்  வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதுதான் என்றால் இப்பரீட்சையின் பெறுபேற்றை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் (உயர் பாடசாலைகளின் அனுமதிக்காக அல்ல).

உயர் பாடசாலைகள் தங்களுடைய அனுமதிக்காக தனித்தனி பரீட்சைகள் வைத்து மாணவர்களைத் தெரிவு செய்யலாம். அப்பரீட்சைக்கு விரும்பியவர்களைத் தோற்றுவதற்கு அனுமதிக்கலாம். அதே போல உயர் பாடசாலை அனுமதியானது ஆறாம் தரத்துடன் நின்று விடாது அதற்குப் பிறகான ஒவ்வொரு வருடமும் வெளி மாணவர்களிடம் பரீட்சை வைத்தோ அல்லது மீண்டும் ஒன்பதாம் தரத்தில் பரீட்சை வைத்தோ அனுமதியை வழங்கலாம். ஏனெனில் ஆறாம் தரத்தில் சித்தியெய்தத் தவறியவன் ஒன்பதாம் தரத்தில் அதே நிலையில்தான் இருப்பான் என்று எதிர்வு கூற முடியாது. இவ்வாறு செய்வதனால் உயர் பாடசாலைகளுக்கான போட்டிகள் குறைவடையும், பெற்றோர் இந்த முறை தப்பினால் அடுத்த முறை என்ற மன நிலையில் பிள்ளைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பார்கள். பிள்ளைக்கு ஓய்வும் அமைதியான கல்வியும் கிடைக்கும். புலமைப் பரிசில் பரீட்சையின் உண்மையான நோக்கமாகிய வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் என்பது அதிக எண்ணிக்கையான வறிய மாணவர்களுக்குச் சென்றடைய வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களும் ஊக்கமாக கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். சமுதாய வளர்ச்சிக்கு இது வித்தாகும்.

நன்றி!/thaaimadi

No comments: