Wednesday, December 9, 2009

அப்பா


அப்பா

இந்த ஒற்றை சொல்லில்தான் எத்தனை பெரிய பெருமையும்,அர்த்தமும் அடங்கியிருக்கிறது.

நம்மில் அநேகம் பேருக்கு அப்பா இப்போது உயிருடன் இருக்கிறார் அல்லது சிலருடைய அப்பா இறைவனடி சேர்ந்திருப்பார்.

ஆனால் எல்லோருடைய அப்பாவும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டியாக,ஆசானாக,முன் மாதிரியாக இருந்திருப்பார் அல்லது இப்போதும் இருக்கிறார்.

சிலருடைய அப்பாக்கள் மட்டும் முன்கோபியாக, குடிகாரனாக,வேலை செய்யாமல் சோம்பேறியாக இருக்கலாம்.இருப்பினும் அந்த நல்ல உள்ளங்களுக்குள் தன் மகனை பற்றிய,மகளை பற்றிய கனவுகள் மட்டும் உயர்ந்ததாக இருக்கும்.

ஒருவேளை அப்பா சமுதாயத்தில் உயர்ந்தவராக இருப்பின் தன் வாரிசு தன்னை விட  உயர்ந்தவனாக இருக்க வேண்டுமென ஆசைப்படுவார் அல்லது சமுதாயத்தில் தாழ்ந்தவனாக இருப்பின்,தன்னை போல் தன் வாரிசும் பெரிய குடிகாரனாக, சோம்பேறியாக இருக்க வேண்டுமென நினைக்க மாட்டார்.

"நான் தான் இப்படி உருப்படாம போயிட்டேன்..ஆனா என் பையன்/பொண்ணு நல்லா படிச்சி பெரிய ஆளா வருணும்"ன்னு நினைப்பாங்க.

அதுக்கு பேர்தான் அப்பா பாசம்.

தான் எவ்ளோ கஷ்டபட்டாலும் தன் பிள்ளைகள் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிற அப்பாக்கள் தான் நிறைய இருப்பாங்களே தவிர தன் பிள்ளை கெட்டு போகணும்ன்னு நினைக்கிற கெட்ட அப்பாக்களா யாரும் இருக்க மாட்டாங்க.

என் அப்பாவை பற்றி எனக்கு காலேஜ் போகும்வரை நல்ல அபிப்பிராயம் இல்லைன்னு தான் சொல்வேன்.இத்தனைக்கும் என் அப்பாவுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இருந்ததில்லை.

ஊர்ல எல்லாரும் மதிக்கிற நல்ல ஆசிரியராக இருந்தார்.பள்ளியில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும் பல மாணவர்கள் இன்றும் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து செல்வார்கள்.

இப்படிப்பட்ட நல்ல அப்பாவை எனக்கு ஏன் காலேஜ் போகும்வரை பிடிக்கவில்லை?

பல காரணங்கள் இருந்திருக்கின்றன.

1) பள்ளிக்கு போகும்போது என் தோழன் தினமும் 5 ரூபாய் கொண்டு வந்து எல்லோருக்கும் தின்பண்டம் வாங்கி கொடுப்பான்.அவன்தான் என் பள்ளி கதாநாயகன்.
நானும் என் அப்பாவை காசு கேட்டால் தராமல் அதற்கு சரியான காரணம் கேட்பார்.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

2) பள்ளி விடுமுறையில் எல்லா பசங்களும் உறவினர்கள் வீட்டுக்கு போயிட்டு வந்து கதை கதையாக சொல்வார்கள்.நான்,என் தம்பிகள் மட்டும் வீட்லயே இருப்போம்.எங்காச்சும் வெளிய போகலாம்ன்னு கேட்டா இந்த விடுமுறையில் அடுத்த வகுப்புக்கு தேவையான பாடங்களை படிக்க சொல்லிடுவார். அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

3) பிறந்து வளர்ந்தது கிராமம்தான் என்றாலும் ஆங்கில நாளிதழ்களை வாங்கி படிக்கச் சொல்லிடுவார்,அதோடு மற்றுமின்றி ஒரு நோட்புக்கில் எழுதுவும் சொல்வார்.மற்ற பிள்ளைகளோ பஜார் கடைகள்,கோவில்கள்,மடம் இப்படி சுற்றிவிட்டு வருவார்கள்.நான் கேட்டால் இந்த ஆங்கில நாளிதழ் படித்து விட்டு பிறகு சுற்றிவிட்டு வா என்பார்.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

4) பத்தாவது படிக்கும்போது உடன் படிக்கும் மாணவர்கள் சினிமாக்கு செல்ல முடிவு பண்ணி என்னையும் வரச்சொல்லி கேட்பார்கள்.அப்பாவிடம் கேட்டால் அமைதியாக ஜெயகாந்தன்,கல்கி புத்தகங்களை கொடுப்பார்.எதுவும் பேசாமல் அதை படிக்க வேண்டியிருக்கும்.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

5) +2 முடித்தவுடன் கிராமம் என்பதால் பாதி பேர் போலீஸ்,ஆர்மி,கழனி என்று போய்  விட்டார்கள்.நானும்,என் நெருங்கிய நண்பர்களும் பி.காம் படிக்கலாம் என்று முடிவு செய்தோம்.வீட்டில் இதை பற்றி பேசும்போது அப்பா சொன்னார். +2 முடித்து  பி.காம்தான் படிக்கணும்ன்னு இல்லை.தொழில் நுட்பமும் படிக்கலாம்.அதுவும் கணினி துறை இப்போது நன்றாக உள்ளது.அதை பற்றி யோசித்து விட்டு சொல்லென்று சொன்னார்.வேண்டா வெறுப்பாக டிப்ளமோ சேர்ந்தேன்.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

6) காலேஜ் சேர்ந்து ஒரு ஆண்டு ஆனபோது என் கல்லூரியில் படிக்கும்,என் கிராமத்தை சேர்ந்த நண்பனின் வீட்டில் புதிதாக கார் வாங்கினார்கள்.மாதம் இரண்டுமுறை அவன் அப்பா பக்கத்து் டவுனில் இருக்கும் எங்கள் கல்லூரிக்கு காரில் அவனை அழைத்து வருவார்.நானும் அதே ஊர் என்பதால் என்னையும் காரில் கூட்டிவருவார்.அவன் கார் வாங்கிய பெருமையில் இருப்பான்.நானோ வருத்தமுடன் இருப்பேன்.ஒரு நாள் கோபத்தில் அப்பாவை கார் வாங்க சொல்லி சண்டை போட்டேன்.
அப்போதும் கோவப்படாமல் அமைதியாக இருந்து ஒரு வாரம் கழித்து மெஜஸ்டிக் ஸ்கூட்டர் வாங்கி வந்துவிட்டார்.அதுவும் லோன் போட்டு.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

இப்படி பல 'அதனாக்களால்' எங்க அப்பாவை எனக்கு பிடிக்காமல் போனது அப்போது.

காலேஜ் முடித்து சென்னை/பெங்களூர் என்று மாறி மாறி வேலை செய்து பல வருடங்கள் போராடி இன்று வெளிநாட்டில் கை நிறைய சம்பாதிக்கும் நான் விடுமுறையில் ஊருக்கு செல்ல நேர்ந்தது.

நண்பர்களை பார்க்கும் ஆவலில் என் கிராமத்தை சுற்றி வந்தேன்.

பள்ளிக்கு தினமும் 5 ரூபாயுடன் வந்த பள்ளி நண்பன் ஒரு பெட்டிகடை வைத்து,கடையில் வியாபாரம் இல்லாததால் ராணி வார இதழை புரட்டிக்கொண்டு இருந்தான்.

பள்ளி முடித்தும் பாஜார், கோவில், மடம் என்று சுற்றி கொண்டுஇருந்த பள்ளி நண்பர்கள் சிலர் என்று அதே தோழமையுடன் கூட்டாக சேர்ந்து ஒரு நிதி நிறுவனம் நடத்தி கொண்டுஇருக்கிறார்கள் நிதியே இல்லாமல்.(ஆனால் சாயங்காலம் அந்த நிதி நிறுவனத்தில் குடி,சிகரட்,சீட்டு உண்டு.)

சரி..நம்ம கார் வைத்திருந்த நண்பனாவது எதாச்சும் பெரிய வேலையில் இருப்பானா என்று நண்பர்களை விசாரித்தால்."அட போப்பா..அவன் பிஸினஸ் பண்ணறேன்னு அவங்க அப்பா சொத்தை மொத்தம் காலி பண்ணிட்டு எங்கயோ ஓடி போய்ட்டான்" கேட்கும்போதே மனசு ரொம்ப வலித்தது.

இன்னும் சில பேர் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி கொண்டுஇருந்தார்கள்.எங்களுடன் படித்த ஒரு சிலர் தான் ஊரைவிட்டு
வெளியில் வந்து முன்னேறி இருந்தார்கள்.

எல்லா நண்பர்களிடமும் மனம் விட்டு பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.

அப்பா அமைதியாக தூங்கி கொண்டு இருந்தார்.

என் சிறு வயதிலேயே அவர் சின்ன சின்ன விஷயத்தைகூட எவ்வளவு அழகாக சொல்லி கொடுத்திருக்கிறார் என்று நினைத்ததும் உடம்பு சிலிர்த்தது.

அப்பாவை இப்போது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 



நன்றி http://poongundran2010.blogspot.com

No comments: