Wednesday, December 9, 2009

தடிச்ச ஒதட்டுக்காரி


தடிச்ச ஒதட்டுக்காரி
தாராள மனசுக்காரி
படிச்ச புத்திசாலி
பழக்கத்தில் கெட்டிக்காரி

முடிச்ச மனப்பிணைப்பை
முடிஞ்சதுன்னு சொல்லிப்புட்டா
வடிஞ்ச கண்ணுக்குள்ள
வாய்க்கால வெட்டிப்புட்டா

இடிஞ்சித் தூளானேன்
இடியாப்ப நூலானேன்
ஒடிஞ்ச மனசோட
ஒப்பாரி பாடுகிறேன்

விடிஞ்ச பொழுதோடும்
விடியாமத் தவிக்கிறேன்
மடிஞ்ச உசிரோட
மயாணம் நடக்கிறேன்

படிஞ்ச கூந்தலிலே
முடிஞ்சி வெச்சிருந்தாள்
நொடிஞ்சு போனவனை
நிமித்திப் பாத்திருந்தாள்

கடிஞ்சு ஒருசொல்லைக்
கனவுலயும் சொன்னதில்லை
ஒடஞ்சி ஒருநாளும்
ஓரநகம் கீறவில்லை

அடைஞ்ச சுகமெல்லாம்
ஆட்டிவச்சுப் பாக்குதடீ
ஒடஞ்ச கண்ணாடியா
ஒம்மொகத்தைக் காட்டுதடீ

செடிக்குப் பூவாட்டம்
சித்தாளு நடையாட்டம்
கடையும் மோருக்குள்ள
கூத்தாடும் நுரையாட்டம்

மடிக்குள் பூவாட்டம்
மத்திமீன் குழம்பாட்டம்
நடுவான நெஞ்சுக்குள்ள
நாளெல்லாம் வாழ்ந்தவளே

பிடிச்சது பிடிச்சதுதான்
பிடிக்காமப் போவாது
கடிச்சது கடிச்சதுதான்
காதல்கனி மாறாது

துடிக்குது மனமயிலு
தூங்காத பூங்குயிலு
வடிக்குது விழியருவி
வத்தாத செங்குருதி

ஒடஞ்சது ஒம்மனசு
ஒடஞ்சது ஒங்கனவு
ஒடஞ்சது ஒன்னுசுரு
உன்னைநீ காப்பாத்துடீ


நன்றி : http://anbudanbuhari.blogspot.com/

No comments: