Wednesday, March 24, 2010

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…

kid

மொட்டை மாடியில் மாலை வேளையில் வெறுமனே காற்று வாங்க செல்லும் போது பார்க்க முடியும் நகரத்து மொட்டை மாடிகள் ஒவ்வொன்றிலும் சாப்பாடு உண்ணச் சொல்லிக் குழந்தைகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் தாய்மார்களை.
 குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே ! மூன்று கண்ணன் வரான் சாப்பிடு என பயமுறுத்தியோ, சாக்லேட் வாங்கித் தரேன் சாப்பிடு என சொல்லி ஆசைகாட்டியோ எப்படியேனும் நாலுவாய் சாப்பிடால் போதும் என அல்லாடும் மனது அன்னையர்க்கே உரியது.
 குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.


1.
 குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
 2

சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.
 3
 இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.
 4
 குறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும்.
 5
 அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும்.
 வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.
  
6
 இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
 7
 பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.
  
8
 குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
 9
 ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.
 10
 குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.
 சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். நான் கழுவிய காரெட் இது – என்பது போன்ற மன ரீதியான தொடர்பு ஏற்படும்.
 இவற்றில் உங்களுக்கு வசதியான, பிடித்தமான சில வழிகளை முயன்று பாருங்கள். உங்கள் உணவூட்டும் வேலை எளிதாகக் கூடும்.

நன்றி :http://xavi.wordpress.com/2009/04/15/kid_food/ 

No comments: