Thursday, April 22, 2010

''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' இன்னும் எத்தனை காலத்திற்கு?!

''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' இன்னும் எத்தனை காலத்திற்கு?!     

[ கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள். படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும். மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும். எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.

இன்றைக்கு பெண்கள் இல்லாத துறை உண்டா? மண்ணிலிருந்து விண்ணிற்கும், அலுவலரிலிருந்து ஆய்வாளர் வரையிலும், நிதியிலிருந்து நீதித் துறை வரையிலும் என்று சகல துறைகளிலும் முகம் காட்டுகின்றனர்! அதிகாரங்களில் தலைமைப் பதவிக்கும் வந்தனர்; ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பிரகாசிக்கின்றனர்; நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்தனர்; ஆட்சியைப் பிடித்தனர்; அப்படி ஆட்சியில் அமர்ந்தாலும், அவர்களால் அங்காவது பெண்கள சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முற்றிலுமாக களைந்தார்களா? களைய முடிந்ததா? என்ற கேள்விகள் ஒரு புறம் வலுவாக எழுந்தாலும் அடி நாளில் அவர்கள் மனங்களில் ''எங்களாலும் முடியும்'' என்ற விதை இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை!.]

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் மனித வளத்தைப் பொறுத்தே அமையும். மனித சக்தி வளர்ந்த நாட்டிலும், வளர்ந்து வருகின்ற நாட்டிலும் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது? வளர்ந்த நாட்டில் இல்லாத மனித இனப் பாகுபாடு வளர்ந்து வருகின்ற மற்றும் பின் தங்கிய நாடுகளில் இருப்பதைக் காண்கிறோம். மனித இனத்தில் பாகுபாடு காட்டுவதென்பது மனித சக்திக்குத் தடையாக அமையும். அத்துடன் அது சமூக வளர்ச்சியையும் பாதிக்கும். ஆண் இனத்தவர்கள் பெண் இனத்தின் ஆற்றலையும், செயல்பாடுகளையும் அங்கீகரிக்காமல் இருத்தல், நசுக்குதல், போன்ற செயலில் ஈடுபட்டு ஒரு இனத்தின் சுய முகமே நசுங்கிப் போயிற்று.
''அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?'' என்று ''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' என முகவரி சொல்லி வைத்தோம். ஆண்கள் துணையில்லாமல் பெண்களால் நிமிர முடியாது என முடக்கி வைத்தோம். இது இன்று நேற்று நடப்பதல்ல; பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்ற அவலம் இது!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், இதர தீங்கிழைப்புகளுமான குற்றங்கள் இந்தியக் காவல் துறைப் பதிவேடுகளில் வருடம் தோறும் சராசரியாக பதிவாவது மட்டும் எட்டு லட்சத்து 88 ஆயிரத்து 695 ஆகும். சர்வதேச அளவில் பில்லியன் கணக்கில் பெண்கள் தொடர்பான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. அறிவு வளர்ந்திருக்கிறது; அறிவியல் வளர்ந்திருக்கிறது; தாயாய், தாரமாய், சகோதரியாய் பெண்களை பகுத்தறிந்து போற்றும் பண்பு மட்டும் இன்னும்.. .நம்மிடம்?!
இன்றைக்கு பெண்கள் இல்லாத துறை உண்டா? மண்ணிலிருந்து விண்ணிற்கும், அலுவலரிலிருந்து ஆய்வாளர் வரையிலும், நிதியிலிருந்து நீதித் துறை வரையிலும் என்று சகல துறைகளிலும் முகம் காட்டுகின்றனர்! அதிகாரங்களில் தலைமைப் பதவிக்கும் வந்தனர்; ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பிரகாசிக்கின்றனர்; நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்தனர்; ஆட்சியைப் பிடித்தனர்; அப்படி ஆட்சியில் அமர்ந்தாலும், அவர்களால் அங்காவது பெண்கள சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முற்றிலுமாக களைந்தார்களா? களைய முடிந்ததா? என்ற கேள்விகள் ஒரு புறம் வலுவாக எழுந்தாலும் அடி நாளில் அவர்கள் மனங்களில் ''எங்களாலும் முடியும்'' என்ற விதை இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை!

பெண்களுக்கு எதிரி பெண்களே!

"சிசு பிறந்ததும், பெண் எனத் தெரிந்ததும் நெல்லோ எருக்கம்பாலோ கொடுத்துக் கொன்று விடும் உசிலம்பட்டிக் கொடுமை; கணவன், மாமனார், மாமியார் சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு பெண்ணை சமையலறையில் எரித்து விட்டு, ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என்று காவல் துறைப் பதிவேடுகளில் மாறும் அவலம்; சமூகத்திற்கு அரணாக, வேலியாக இருக்க வேண்டிய காவல் நிலையங்களே கற்பழிப்பு மையங்களாகின்ற கொடூரம்- இவைகளெல்லாம் குக்கிராமத்திலிருந்து பெரு நகரம் வரை அன்றாடம் நடைபெறும் செய்திகளாகிப் போய்விட்டன.

நாட்காட்டிகள் கிழிபடுகிற ஒவ்வொருநாளும் பெண்கள் கிழிபடுகிற, வதைபடுகிற, சிதைபடுகிற, சின்னா பின்னப்படுகிற செய்திகள் நாளிதழ்களில் இடம் பெறாத நாளுண்டா? ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம்; சம ஊதியம் உலகில் பெரும்பாலான நாடுகளில் இன்றைக்கும் கூட கிடையாது.
"இளம் பெண் ஒருத்தி உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்து கொண்டு எவ்வித அச்சமுமின்றி நள்ளிரவில் தன்னந்தனியாக வெளியே சென்று பத்திரமாக வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிற நிலை என்று ஏற்படுகிறதோ, அன்று தான் நாடு உண்மையான விடுதலை அடைந்ததாக அர்த்தம்" என்றார் காந்திஜி.

இஸ்லாமியப்பார்வை:

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்பது இஸ்லாமியக் கொள்கையல்ல. இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.
''மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு.

ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர்.

மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.

மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர்.
இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ -97)

இதில் மூன்றாவதாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதை மறுபடியும் பாருங்கள்;
''தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து,

அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து,

அவளுக்குக் கல்வியைக் கற்பித்து,

அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து

அவளை மணந்து கொண்டவர்.''

அடிமைப்பெண்ணுக்கு ஒழுக்கப்பயிற்சி அளிப்பதோடு மட்டுமில்லாமல் - அதுவும் அந்த பயிற்சியை அழகுறச் செய்து,

அத்துடன் அப்பெண்ணுக்கு கல்வியையும் கற்பித்துக்கொடுத்து; அதையும் கூட அழகுற கற்பித்துக்கொடுத்து...

அத்துடன் விட்டார்களா...! அடிமைத்தனத்திலிருந்து அப்பெண்ணை விடுவித்து...

மணந்து கொள்ளவும் சொல்கின்றார்களே!

ஸுப்ஹானல்லாஹ்!
இந்த நூற்றாண்டில் கூட பெண்களுக்கு- அதுவும் அடிமைப்பெண்களுக்கு, இது போன்று ஆதரவாக சொல்லக்கூடிய ஒருவரைக் காணமுடியுமா? சொல்லுங்கள்!

கல்வி இல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாக ஏமாற்றப்படுகிறார்கள். படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும். மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இவை பேருதவியாக இருக்கும். எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை! மாறாக ஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.
''கணவனுக்கு சமைத்துப்போடுவது மனைவியின் கடமை'' என்று இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை நினைவில் கொள்க. ஆகவே ''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' என்பது இஸ்லாமிய கண்ணோட்டம் அல்ல. ஆனால் அதனை முஸ்லீம்கள் கெட்டியாக பிடித்திருப்பது அவர்களது அறியாமையே!

நன்றி : www.nidur.info

No comments: