Thursday, July 8, 2010

சென்னையில் 65 மாடி கட்டிடம்?


தமிழக முதல்வர் கருணாநிதியின் 40 ஆண்டுகளுக்கு முந்தைய கனவுத்திட்டமான சென்னைக் கடற்கரையில் 65 மாடிக் கட்டிடம் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக சுற்றுலாத் துறை ஆய்வு செய்து வருகிறது.

1970-ம் ஆண்டுகளில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது சென்னை நகரத்தை சிங்கார லோகமாக்க வேண்டும் என்ற வகையில் பல திட்டங்களை தீட்டியிருந்தார். கூவத்தில் படகு விடுவது என்பது போன்று கடற்கரையில் 65 மாடி கட்டிடம் ஒன்றை கட்ட திட்டமிட்டார். அந்த 65 மாடி கட்டிடம் தென்கிழக்கு ஆசியாவிலே மிக உயரமான கட்டிடம் என்று கூறும் வகையில் 820 அடி உயரத்தில் கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார்.

முதல்-அமைச்சரின் இந்த கனவு திட்டத்தை 1971-ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டது. அப்போது இந்த கட்டிடத்திற்கு 14 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. மும்பையைச் சேர்ந்த தமிழரான சி.எஸ்.கே.ராஜ் என்ற கட்டிடக் கலை நிபுணர் இந்த கட்டிடத்திற்கு வடிவமைத்தார்.

மெரினா கடற்கரையில் லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்திற்குள் இதற்காக 61/2 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த 65 மாடி கட்டிடத்தை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் கட்டுவது எனவும், இந்த கட்டிடத்தின் 65-வது மாடியில் சுழலும் ஓட்டலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. நீச்சல் குளம், உல்லாச கடை தெரு என்று ஒரு சிறுநகரமாகவே இதை அமைக்க முடிவு செய்தார்கள்.

இந்த கட்டிடத்தில் எல்.ஐ.சி., ஏர்-இந்தியா, இண்டியன் ஏர்லைன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்பட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் அமைக்கவும், சூரிய வெப்பம் தாக்காத வகையில் கண்ணாடி சுவர்களும், தரைகளும் அமைந்த மாநாட்டு மண்டபம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மற்றும் பல்வேறு வகையான சிறப்புகளையும் இந்த கட்டிடம் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று அப்போது முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்பாடு செய்தார். ஆனால், அவரது கனவு நனவாகவில்லை.

இந்த திட்டம் நிறைவேறுவதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும் நிலையில் அரசு கவிழ்க்கப்பட்டது. அடுத்து வந்த ஆளுநர் ஆட்சியிலும், தொடர்ந்து வந்த எம்.ஜி.ஆர்.ஆட்சியிலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி யோசிக்கவில்லை. எனவே, அந்த திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

இப்போது அந்த கட்டிடக் கலை நிபுணர் சி.எஸ்.கே.ராஜ் 85 வயதானவராக இருக்கிறார். அவர் இந்த திட்டத்தை மீண்டும் நிறைவேற்றுவதில் மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறார். எல்லோருக்கும் கடிதம் எழுதி வருகிறார். எனவே, இந்த திட்டத்தை மீண்டும் எடுத்து நிறைவேற்றலாமா என்று சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஆய்வு நடத்தி வருகிறது.

சமீபத்தில் இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சுற்றுலாத்துறை செயலர் வெ.இறையன்பு கவனத்திற்கு கொண்டு வந்தார். முதல்-அமைச்சர் கருணாநிதி நிறைவேற்ற அதிகம் ஆசைப்பட்ட திட்டங்கள் இரண்டு. ஒன்று கூவத்தை சுத்தம் செய்து அதில் படகு விடுவது, மற்றொன்று இதுவரை எங்கும் இல்லாத அளவுக்கு 65 மாடி கட்டிடம் சென்னையில் கட்டுவது ஆகும்.

முதல் திட்டமான கூவத்தில் படகு விடுவதை மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். 2-வது திட்டமான 65 மாடி கட்டிடம் கட்டும் திட்டம் மீண்டும் உயிர்பெற சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த தகவலை கேள்விப்பட்ட சுற்றுலாத்துறை செயலர் வெ.இறையன்பு இதுதொடர்பான பழைய விவரங்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த திட்டத்தை அரசு உதவியோடு சுற்றுலா வளர்ச்சி கழகம் உடனடியாக தொடங்க எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்து வருகிறார்.

No comments: