Friday, July 30, 2010

தங்கத் தமிழ்நாடு, இனி பிளாட்டின நாடு!


‘பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காது!’, ‘பொன்னா விளையுற பூமி’, ‘பொற்கால ஆட்சி’ – பொன் எனப்படும் தங்கம் நம் மொழியின் சொலவடைகளில் உயர்ந்த இடத்தை எப்போதுமே பிடித்திருக்கிறது. தங்கத்தைவிட உயர்ந்த விஷயம் ஏதுமுண்டா என்ற கேள்வியை கேட்டுவிட்டு பதிலை நாம் எதிர்ப்பார்ப்பதில்லை. ஏனெனில் இந்தியர்கள் தங்கத்தின் காதலர்கள். தங்கம்தான் நமக்கு எல்லாவற்றிலும் உசத்தி. பெண்கள் அணியும் தாலியில் தொடங்கி, ஆண்கள் அணியும் மோதிரம் வரையிலும் எல்லாமே தங்கமயம்.

தங்கத்தைவிட விலையுயர்ந்த இன்னொரு உலோகம் இருக்கிறது என்று சொன்னால் நம்மால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அது பிளாட்டினம். உலகமே பிளாட்டின நகைகளை அணிய ஆவலோடு அலையும்போது, நாம் மட்டும் இன்னமும் தங்கமே தங்கம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உளவியல்ரீதியாகப் பார்க்கப் போனால் வெள்ளியை ஒத்த நிறம் கொண்ட பிளாட்டினத்தைவிட, செம்மஞ்சளாக ஜொலிஜொலிக்கும் தங்கத்தையே நாம் அதிகம் விரும்புகிறோம். ஆனால் இதற்காக பிளாட்டினத்தின் உயர்தன்மையை மறுத்துவிட முடியாது. ஏனெனில் தங்கத்தைவிட பிளாட்டினம் 30 மடங்கு அரிய உலோகம்.

கனிமவளங்களின் அடிப்படையிலேயே ஒருநாட்டின் மதிப்பு உயரும். எல்லா வளங்களும் பெருமளவு கொண்ட இந்தியாவில் பிளாட்டினம் மிகக்குறைந்த அளவில் – ஒரிஸ்ஸாவில் மட்டும் – இதுவரை கிடைத்துக் கொண்டிருந்தது. நம் பிளாட்டினத் தேவையை பூர்த்திச் செய்ய அயல்நாடுகளில் இருந்து கோடிக்கணக்காக செலவழித்து இறக்குமதி செய்துக் கொண்டிருந்தோம். இப்போது பிளாட்டினம் தமிழகத்திலும் பெருமளவில் கிடைக்கும் என்பதை இந்திய புவியியல் துறை உறுதி செய்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக தங்கம் விளைந்து கொண்டிருந்த கோலார் தங்கவயல் மூடப்பட்ட சோகத்தை இனி நாம் மறந்து கொண்டாடலாம்.

சரி, பிளாட்டினம் என்பது என்ன?

Pt என்ற வேதியியல் குறியீடு கொண்ட ஒரு தனிமம். தங்கத்தைப் போலவே வளையக்கூடிய, நெளியக்கூடிய தன்மை கொண்டது என்பதால், எவ்வடிவத்திலும் வார்க்க முடியும். மின்கருவிகளில் உறுதியான மின்னிணைப்பை தரக்கூடிய மின்முனைகளாகவும் இதை பயன்படுத்தலாம். கார்களின் சைலன்ஸர்களில் இருந்து வெளிவரக்கூடிய கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றின் நச்சுத்தன்மையை குறைக்கவும் பிளாட்டினம் உதவும். வெளிர்சாம்பல் நிறம் கொண்ட பிளாட்டினம் எளிதில் அரிக்கப்படாத ஒரு உலோகம். நகைகள் தவிர்த்து, வெப்பநிலையை அளக்கப் பயன்படும் மின்தடை வெப்பமானிகளில் இதை பயன்படுத்தலாம். சில வேதியியல் ஆராய்ச்சிகளில் வினையூக்கியாக செயல்படுத்தலாம்.

பிளாட்டினத்தின் வரலாறு என்ன?

இரும்பு, தங்கம் போன்று பிளாட்டினத்துக்கு நீண்ட, நெடிய வரலாறு இருப்பதாக தெரியவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு முன்பாகவே அங்கிருந்த பழங்குடியினர் பிளாட்டினத்தைப் பற்றி அறிந்திருப்பதாக தகவல் உண்டு. 1557ல்தான் பிளாட்டினம் என்ற உலோகத்தைப் பற்றி இத்தாலியரான ஜூலியஸ் சீஸர் ஸ்காலிகர் என்பவர் எழுதுகிறார். பனாமா, மெக்ஸிகோ ஆகிய இடங்களில் அப்போது பிளாட்டினம் கிடைத்தது என்பதையும், ஆனால் அதை உருக்கமுடியாத நிலை இருப்பதாகவும் அவர் எழுதியிருந்தார்.

இப்போது உலகளவில் பிளாட்டினத்தின் பெருமளவு தேவையைப் பூர்த்தி செய்யும் நாடாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது. கனடாவும், ரஷ்யாவும் அடுத்தடுத்த இடத்தைப் பெறுகின்றன.

தமிழகத்தில் எங்கே கிடைக்கிறது?

இந்திய புவியியல் துறை கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் இண்டு இடுக்கு விடாமல் தோண்டி, துருவி பிளாட்டினத்தை தேடிக் கொண்டிருந்தது. நீண்டதேடுதலுக்குப் பின் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி (கருங்கல்பட்டி, செட்டியாம்பாளையம், தாசமபாளையம் பகுதிகள் உட்பட), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (மல்லநாயக்கம்பாளையம், காரப்பாடி, சோலவனூர் பகுதிகள் உட்பட) ஆகிய பகுதிகளில் கணிசமான அளவில் பிளாட்டினம் இருப்பதற்கான அடிப்படை ஆதாரங்களை கண்டறிந்திருக்கிறார்கள்.

சுமார் 30 மீட்டர்கள் ஆழத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் பிளாட்டினம் இருப்பதை உறுதி செய்திருந்தாலும், 200 முதல் 300 மீட்டர் அளவிலான ஆழத்தில் நடத்தப்படும் சோதனைகளில்தான் எந்தளவு தரம் மற்றும் அளவில் இங்கே சுரங்கம் தோண்டி பிளாட்டினம் எடுக்க முடியும் என்பதை துல்லியமாக அறியமுடியும். ஆயினும் இப்போதைய கண்டுபிடிப்பே கூட மிக முக்கியமானதாக இந்திய கனிமவள வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதற்கட்ட சோதனை முடிவுகளின் படி பார்க்கப்போனால் பிளாட்டினம் உற்பத்தியில் மற்ற நாடுகளை இந்தியா ஓரங்கட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று புவியியல் அறிஞர்கள் யூகிக்கிறார்கள்.

இவ்வளவு ஆண்டுகளாக கனிமம் என்றாலே அதிகபட்சமாக கிரானைட்தான் என்றளவில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) விஷயத்தைக் கேள்விப்பட்டு சுறுசுறுப்பு ஆகியிருக்கிறது. “தமிழ்நாட்டுக்கு இது ஒரு வரப்பிரசாதம்” என்று புளகாங்கிதப்படுகிறார் டாமின் தலைவரான மணிவாசன். முதல்வர் முன்னிலையில் டாமின் அதிகாரிகள், இந்திய புவியியல் துறையோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் உடனடியாக கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதுவரை புவியியல் துறை வெளிநாட்டு நிறுவனங்களோடு மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. முதல் தடவையாக ஒரு மாநில அரசின் கனிம நிறுவனத்தோடு ஒப்பந்தமிடுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய புவியியல் துறை மேற்கொள்ள வேண்டிய மேலதிக ஆய்வுகளுக்கு டாமின் உதவும். பிளாட்டினம் எடுக்கப்படுவதின் மூலமாக கிடைக்கும் வருமானம் மொத்தமும் தமிழ்நாட்டையே சாரும். பாறைகளில் இருந்து பிளாட்டினம் பிரித்தெடுக்கப் படுவதற்கான ஒரு தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்படுகிறது. கனிமவளத் தொழிற்சாலை இரண்டு பகுதிகளுக்கு சேர்த்து ஒன்றாக நடக்குமா அல்லது தனித்தனி தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா என்பது பற்றியெல்லாம் இன்னமும் திட்டமிடப்படவில்லை.

புதியதாக தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தாராளமாக கிடைக்கும். எடுக்கப்படும் பிளாட்டினம் மற்றும் அதன் குடும்ப தனிமங்களின் வருவாய் ஒட்டுமொத்தமாக மாநில அரசுக்கு கிடைக்குமென்பதால் மாநிலமும் வளம்பெறும். சுரங்கம் தோண்டப்படும் நிலைக்கு முன்பாக இன்னமும் ஏராளமான ஆய்வுகள் பாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

வெட்டியெடுக்கப்படும் பிளாட்டினத்தைக் காண மக்கள் மட்டுமல்ல, மாநிலமே ஆவலாக காத்திருக்கிறது!

(நன்றி : புதிய தலைமுறை) 

நன்றிhttp://www.luckylookonline.com/2010/07/blog-post_29.html

No comments: