Monday, August 16, 2010

2. உணர்ச்சித் திறன்

SA மன்சூர் அலி M.A., B.Ed.,
ஒரு முது கலைப் பொறியியல் பட்டதாரி. மிக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர். தமது படிப்பில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர். ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் வேலைக்குச் சேர்கிறார் அவர். வகுப்பறைக்குள் செல்கிறார். அவருக்கு முதலாவது வகுப்பு அது. மிக நன்றாக பாடத்தைத் தயார் செய்து வந்திருக்கிறார். பாடம் நடத்தத் துவங்குகிறார். மாணவர்கள் அவரை சீண்டிப் பார்க்கின்றனர். கரும் பலகையில் எழுதிடத் திரும்பும் போதெல்லாம், ஓ...ஹொ! - என்று சத்தம். மாணவர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் மாணவர்கள் தானா? அல்லது ரவுடிகளா? என்று சத்தம் போடுகிறார். மயான அமைதி வகுப்பில். மறுபடியும் கரும் பலகையின் பக்கம் அவர் திரும்ப மீண்டும் ஓ...ஹொ! மீண்டும் அவர் திட்ட மீண்டும் அமைதி. பாடத்தைத் தொடர முடியவில்லை!
அவருடைய இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?
அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டார்!  இது ஏன்? சிந்தியுங்கள்!
ஒரு மிக மிகத் திறமை வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர். ஆயிரக் கணக்கான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தவர். சிக்கலான பல கேஸ்களை இலாகவமாகக் கையாள்பவர். ஆனால் - அவருடைய மனைவி அவருடன் வாழ இயலாது என்று தனியே போய் விட்டார். பாவம். ஹோட்டலில் தான் அவருக்கு தினமும் சாப்பாடு! இது ஏன்? சிந்தியுங்கள்!
பெற்றோர் - புத்தாண்டு விழா ஒன்றுக்காக வெளியூர் சென்றிட மகளை அழைக்கின்றனர். மகள் வர மறுக்கிறார். தந்தை தன் மனைவியைத் திட்டுகிறார்: "எல்லாம் நீ கொடுத்த செல்லம் தான்!" அவ்வளவு தான் நடந்தது. ஆனால் பிறகு? அந்த மகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி. இத்தனைக்கும் அவர் ஒரு கல்லூரி மாணவி! இது ஏன்? சிந்தியுங்கள்!
நமது உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளும் உணர்ச்சிகளும் வலிமை மிக்க மனித வளங்கள் ஆகும். அவை ஆக்கவும் வல்லவை. அழிக்கவும் வல்லவை. இவை நமது உள்ளம் சம்பந்தப் பட்டதால் - இவைகளை நாம் உளவியல் மனித வளங்கள் (
psychological human resources) என்று அழைக்கலாம். அன்பு, இரக்கம், பாசம், விருப்பம், ஆர்வம், உற்சாக, மகிழ்ச்சி, கவலை, கோபம், வெறுப்பு, பயம், - போன்றவை நமது உள்ளத்தில் இயல்பாய் எழுகின்ற உணர்வுகள் ஆகும்.
நமது உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அவசியமும் ஒரு மதிப்பும் இருக்கிறது. சான்றாக - கோப உணர்வு - தீமைகளை எதிர்த்துப் போராட மனிதனுக்கு அவசியம். இரக்க உணர்வு - ஏழைகளுக்கு உதவிட மனிதனைத் தூண்டுகிறது. உணர்வுகளே அற்ற வாழ்க்கை - உயிரோட்டமுள்ள வாழ்க்கையாக இருக்க முடியாது.
ஆனால் நமது உணர்வுகளுக்கு ஒரு அழுத்தம் கொடுக்கப் படும் போது அது உணர்ச்சியாக மாறி விடுகிறது.
Intensive feeling leads to emotion! அந்த உணர்ச்சிகள் கட்டுப் படுத்தப் படாவிட்டால் - மனிதன் தனது இயல்பான நிலையை இழந்து விடுகிறான். மிருகமாக மாறி விடுகிறான். அது போலவே உணர்வுக்கும் (feeling) சிந்தனைக்கும் (thinking) ஒரு பெரிய வேறுபாடு உண்டு. நாம் மனதால் ஒன்றை உணர்வதற்கும், அறிவைக் கொண்டு ஒன்றை சிந்திப்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. எல்லார்க்கும் எல்லாமும் வேண்டும்! யாரும் பட்டினி கிடந்து விடக் கூடாது - இவை எல்லாம் நல்ல சிந்தனைகளே. ஆனால் மனிதனை "செயல்" களத்தில் இறக்கி விடுவது மனிதனின் உணர்வுகளே! நமது பையிலிந்து பணத்தை வெளியே எடுத்துக் கொடுக்க வைப்பது "இரக்கம்" என்ற உணர்வே. எவ்வளவு கொடுக்கலாம் - என்று கணக்குப் போடுவது சிந்தனை. தம்மிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வீட்டுக்கு பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்வது உணர்ச்சியின் உந்துதல்! பொதுவாக மனிதன் எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் சிந்திக்கவே செய்கிறான். ஆனால் மனிதன் உணர்ச்சி வசப் படும்போது அவன் சிந்தனை தடைபடுகிறது. எனவே அந்த தருணத்தில் அவனால் அறிவு பூர்வமாக செயல் பட முடிவதில்லை.
ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வது எவ்வளவு உண்மை!
பதறிய காரியம் சிதறி விடும் என்பதும், பதறாத காரியம் சிதறாது என்பதும் - எப்படிப் பட்ட உண்மைகள்!
மனிதன் பல காரணங்களினால் உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்டு விடுகின்றான்.
ஒருவரால் திட்டப் படும் போது, ஒருவரின் தன்மானம் பறிக்கப் படும் போது, ஒருவர் நினைத்தது நிறைவேறாத போது, ஒருவர் தோல்வி அடைந்து விட்டால், தனது பேச்சைக் கேட்டு நடக்க வேண்டியவர்கள் - தன் சொல்லை மீறி நடக்கும் போது - இவ்வாறு - மனிதன் பல உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் படுகின்றான். விளைவுகள் என்ன?
கோப உணர்ச்சியில் - ஒருவரை அடித்து விடுகிறான் மனிதன். கொலை கூட செய்து விடுகின்றான். டீவீ பார்ப்பதில் தகறாறு. அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி. இது பத்திரிகை செய்தி.
டீவி பார்க்க அனுமதிக்கவில்லை. சிறுமி தற்கொலை. இதுவும் பத்திரிகை செய்தி.
ஆசிரியர் திட்டினார். மாணவி தற்கொலை.
கணித ஆசிரியர் "வீட்டுப் பாடம் போட்டு வரவில்லை என்றால் நீ உயிருடன் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான்" என்று திட்டினார். நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து கால்களை முறித்துக் கொண்டான் ஒரு ஒன்பதாவது வகுப்பு மாணவ்ன்.
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது - தற்கொலையில் தீர்வு தேடும் தேர்ச்சி பெறாத மாணவ - மாணவிகள்.
அது போலவே - பய உணர்ச்சியால் உந்தப் பட்டு தனது மகளையே சுட்டு விட்டு - பின் கதறிக் கொண்டு மறுத்துவ மனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடிய தந்தையைப் பற்றியும் படிக்கின்றோம்.
எனவே உணர்ச்சிகளால் மனிதன் சூழப்படும்போது - சற்றே அவன் நிதானித்துச் செயல் பட வேண்டியுள்ளது. இந்த நிதானத்தைத தான்
Emotional Intelligence உணர்ச்சித் திறன் என்று அழைக்கிறார்கள். இன்றைய நவீன உலகில் இது குறித்து அதிகம் அதிகம் பேசப் படுகிறது. ஒரு நிர்வாகத்தின் பல் வேறு மட்டங்களில் பணியாற்றக் கூடியவர்களுக்கு உணர்ச்சித் திறன் பயிற்சி அளிக்கப் படுகிறது. முன்பெல்லாம் - ஒரு பணிக்குத் தேர்வு செய்திட அவனது அறிவுத் திறன் Intelligence மற்றும் அதனுடைய அளவீடாகிய IQ - அளவு கோளாக எடுத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் இன்று IQ வுடன் EQ வும் சேர்த்து கவனிக்கப் படுகிறது. அது என்ன EQ (Emotional Quotient) என்கிறீர்களா? அது தான் உணர்ச்சித் திறனுக்கான அளவீடு. இதற்கென்ன அவசியம்? ஒருவர் எப்படிப் பட்ட அறிவாளியாக் இருந்தாலும் சரியே, யார் தனக்குள் எழுகின்ற உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் "திறமையாகக்" கையாள்கிறார்களோ அவர்களே - பணியிடத்தில், குடும்ப வாழ்க்கையில், சமூக உறவில் வெற்றி பெறுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன!
எனவே நமக்குத் தேவை - அறிவும் உணர்வும் கை கோர்த்துச் செல்கின்ற நடு நிலையான ஒரு பாதையே. எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த உணர்ச்சிகளை, எந்த அளவுக்கு வெளிப் படுத்திட வேண்டுமோ - அந்த அளவுக்கு மட்டும் வெளிப் படுத்தி - விவேகமாக நடந்து கொள்ளும் பக்குவம். அதாவது - Maturity!
கணவன் இறந்து விடுகிறான். ஓ என ஒப்பாரி வைத்துக் கதறி அழுகிறாள் ஒரு மனைவி. ஆனால் இன்னொரு பெண். படித்தவர். பக்குவப் பட்டவர். கணவன் அகால மரணம் அடைந்து விடுகிறான். உறவினர்கள் வந்து குவிகிறார்கள். பாசம் மிக்க கணவன் தான். உணர்ச்சிகளை வெளிக் கொட்டலாம் தான். ஆனால் அவள் அழவில்லை. அமைதியாகவும் சோகமாகவும் அமர்ந்திருக்கிறாள் - அவ்வளவு தான்! இது தான் அந்த பக்குவம்! ஆனால் எல்லா நேரங்களிலும் எல்லார்க்கும் இது சாத்தியப் படுவதில்லை!
நாம் இதனை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அணுகுவோம். இஸ்லாம் - அடிப்படையிலேயே - சிந்தனையின் பக்கமும் அறிவின் பக்கமும் அழைப்பு விடுக்கின்ற மார்க்கமாகும். சிந்திப்பவர்களை இறைவன் பாராட்டுகிறான். சிந்திக்க மறுக்கின்றவர்களைக் கடிந்தும் கொள்கின்றான். இக்ரஃ என்று திருமறையின் முதல் வசனத்தை இறக்கி வைக்கின்றான். நாம் சிந்தித்து செயல்படுவதையே இறைவன் பெரிதும் விரும்புகிறான்.
அதே நேரத்தில் பல உணர்வுகளுக்குச் சொந்தக் காரர்களாகவும் தான் நம்மை இறைவன் படைத்துள்ளான். அன்பு (முஹப்பத்), நேசம் (மவத்தத்) போன்ற சொற்கள் திருக் குர் ஆனில் பல தடவைகள் பயன் படுத்தப் பட்டுள்ளன. இறைவனே கருணையாளனாகவும் (ரஹ்மான்), அன்புள்ளவனாகவும் (ரஹீம்) தான் இருக்கின்றான்.
எனவே அறிவும் உணர்வும் - இஸ்லாத்தில் எப்படி கை கோர்த்துச் செயல் படுகின்றன என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக இப்பகுதியில் பார்ப்போம்.
முதலில் மனதில் ஆழமாக இதனைப் பதிய வையுங்கள்.
எந்த ஒரு உணர்வாக இருந்தாலும் அது நம்மை ஒரு செயலுக்குத் தூண்டி விடுவதாகவே இருக்கும். இந்தத் தூண்டலின் அடிப்படையில் நாம் செயல் பட வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிப்பது நமது சிந்தனையும் அறிவும். சிந்தனை அனுமதித்தால் செயல் படுகிறோம். இல்லாவிட்டால் தூண்டலைத் தவிர்த்து விடுகிறோம்.
ஆனால் நாம் உணர்ச்சி வசப் பட்டு விட்டால் அந்த உணர்ச்சிகள் உடனடியான செயல்பாட்டிற்கு நம்மைத் தூண்டி விட்டு விடும். இந்தத் தூண்டல் மிக வலிமையானது. உடனடியானது. இதற்குக் காரணம் நமது "ஹார்மோன்களே". இந்த ஹார்மோன் தூண்டுதல் நமது மூளையின் "அறிவு ரீதியாக ஆய்வு செய்து முடிவு செய்திடும்" பகுதிகளைச் (
cognitive centres) செயலற்றதாக ஆக்கி விடுகிறது. அந்த தருணத்தில் நாம் அந்தத் தூண்டுதலுக்கு இலக்காகி செயல் படத் தொடங்கினால் அந்தச் செயல் அறிவுடையதாக அமையாது. இந்த அடிப்படையில் நாம் மேலே எடுத்துக் காட்டிய சம்பவங்களை மீண்டும் சிந்தியுங்கள். எல்லாம் புரியும். எனவே அந்தத் தருணங்களில் - நமது செயல்களை ஒரே ஒரு வினாடி - தாமதித்து விட்டால் போதும். நமது அறிவு வேலை செய்யத் தொடங்கி விடும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அந்த ஒரு வினாடி தாமதம் கூட நமக்கு சாத்தியப் படுவதில்லை. அதனை சாத்தியப் படுத்தும் தாரக மந்திரம் தான் - குர் ஆன் எடுத்துச் சொல்லும் "சப்ர்" (sabr) என்றால் வியப்பாக இருக்கிறது இல்லையா? இவ்வளவு காலம் நாம் சப்ர் என்றால் பொறுமை என்று சாதாரணமாகப் பொருள் கொண்டு விட்டோம். அன்று! சப்ர் என்பது மிக ஆழமான பல பொருள்களை உள்ளடக்கிய ஒரு சொல். நாம் அனைவரும் மிக ஆழமாக ஆய்வு செய்திட வேண்டிய ஒரு சொல்! அதன் ஒரே ஒரு அம்சம் தான் உணர்ச்சி வசப் படும் போது - உடன் நிதானத்துக்கு வருதலைக் குறிப்பதாகும்.
இந்த நபி மொழியைப் பாருங்கள்:
மண்ணறை ஒன்றின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடந்து சென்ற போது "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!" என்றார்கள். அதற்கு அப்பெண், " என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை" என்று - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அவர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கு காவலாளிகள் எவருமில்லை - "நான் உங்களை யாரென அறியவில்லை" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினாள். "பொறுமை என்பது, அதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே கைகொள்வது தான்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நபி மொழி ஆதார நூல்: புகாரி) நபி மொழியில் "இன்னமஸ் ஸப்ரு இன்தஸ் ஸத்மதில் ஊலா" என்று வருகிறது. ஸத்மத் என்ற சொல்லை பொதுவாக துன்பம் என்று மொழி பெயர்க்கிறார்கள்; ஆனால் அது போதாது. ஏனெனில் ஸத்மத் என்பதற்கு ஆங்கிலத்தில் - push, thrust, jolt, shock, blow, stroke, upset, commotion, psychic shock, obstacle, difficulty என்றெல்லாம் மொழி பெயர்க்கப் படுகிறது. இதனை வைத்துப் பார்க்கும்போது நபியவர்கள் சொன்ன செய்தியின் ஆழம் நமக்குப் புலப்படுகிறது. நமக்கு மனத்தளவில் ஏதேனும் ஒரு அதிர்ச்சி ஏற்படும்போது உடனேயே உணர்ச்சிகளின் கொந்தளிப்புகளுக்கு நாம் ஆளாகி விடுகின்றோம். ஆனால் - அதே சமயத்திலேயே - நம்மிடம் பொறுமையை எதிர்பார்க்கிறான் இறைவன். அந்த சமயத்தில் சற்று நிதானித்து - நமது "சிந்தனைக்கு" இடம் கொடுத்து விடுவோமேயானால் நமது செயல்கள் எதுவும் அறிவுக்குப் புறம்பாக அமையாது. இந்தத் திறமையைத் தான் உணர்ச்சித் திறன் என்கிறார்கள். இந்த உணர்ச்சித் திறன் நமது வெற்றிக்கு மிக அவசியம். இத்தகைய உணர்ச்சித் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியுமா?
பிறகு விரிவாக - இன்ஷா அல்லாஹ்!

Source : http://counselormansoor.com/index.php?option=com_content&view=article&id=87:2-&catid=10:feeling&Itemid=14

No comments: