Wednesday, October 6, 2010

நீர்மை கொண்ட நீடுர் பதிவர் - சந்திப்பு



                                                by    கிளியனூர் இஸ்மத்

                                             முஹம்மது அலி ஜின்னாஹ்


விடுமுறையை விழுங்கிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியாச்சு...முப்பது தினங்களில் கிடைத்த அனுபவங்கள் நிறையவே இருக்கு.
தென்மாநில சுற்றுலாவைப்பற்றி தொடர்எழுதவேண்டும் மனம்தொட்டதை மனதில் பட்டதை எழுதவேண்டும்.

நாட்குறிப்பில் எழுதிய காலத்தில் கூட நிகழ்வுகளை முழுமையாக எழுதமுடியாமல் எழுத்துக்கு வறுமை இருந்தது ஆனால் இன்று இணையதளத்தில் இலவசமாக கிடைத்திருக்கும் வலையில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் எழுதலாம் ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் நாட்குறிப்பில் எழுதிய சுதந்திரம் வலையில் இல்லை எழுதுபவர்களுக்கு பர்தா தேவைப்படுகிறது.

பேனா நண்பர்களாக அறிமுகமானவர்களை சந்திக்கும் போது எற்படக்கூடிய அலாதி இன்று பதிவர்களை சந்திக்கும்போது இல்லை என்று ஒரு பதிவர் சொன்னார். அவர் சந்தித்த பதிவர் அப்படி ஆனால் எனக்கு அது நேர்மாற்றம். பதிவராக இருந்தாலும் அதிபராக இருந்தாலும் விரல்களைப் போல்தான் மனிதர்கள்.

இந்த விடுமுறையில் ஒரே ஒரு பதிவரை மட்டும் நான் துபாய் புறப்படுவதற்கு முதல் நாள் எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவலில் நீடுரை நோக்கிச் சென்றேன்.(எனது பக்கத்து ஊர்)

எனது நண்பரின் மகளுக்கு அன்று நீடுரில் திருமணம் நிகழ்ச்சி அதில் கலந்துக் கொள்வதற்கு முன் 70 வயதைக் கடந்த முஹம்மது அலி ஜின்னாஹ் (நீடுர் சீசன்) என்ற பழுத்த ஞானப்பழத்தை சந்திக்க காலை 11 மணிக்கு அவர் இல்லம் வந்தேன்.

(தமிழக இஸ்லாமியர்கள் அறிந்த காலம்சென்ற சிந்தனைச் செல்வர் நீடுர் அட்வகேட் சையது அவர்களின் அன்புச் சகோதரர் தான் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்)

வழக்கம்போல் அழைப்பு மணி..

வெள்ளை நிற ஆடையில் வெண்மை சிரிப்புடன் நரைத்த முடி என்றாலும் நிமிர்ந்த இராணுவச் சிப்பாயைப்போல் பளிச்சிட்ட முஹம்மது அலி ஜின்னாஹ் என்னைக் கண்டு யார் என்று கேட்பார் என எதிர்பார்த்தேன் அவரோ அடையாளங்கண்டு வாங்கோ என்று உற்சாகத்துடன் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

சிறிய வரவேற்பரையில் அமரப்போன என்னை உள்ளே வாங்க என பெரிய வரவேற்பறைக்கு அழைத்து அமரச்செய்து கூச்சப்படவேண்டாம் எனக்கூறிக் கொண்டே தனது அன்புநிறைந்த துணைவியாரிடம் என்னை ஞாபகமூட்டினார்.(ஏற்கனவே சொல்லி வைத்துள்ளார்)

என்னைக் கண்டதில் அவருக்கு அளப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதை அவருடைய பரபரப்பில் காணமுடிந்தது.குடிப்பதற்கு டீ அல்லது காபி அல்லது சர்பத் எதுவேண்டுமோ சொல்லுங்க என்று உரிமையோடு கேட்டுக்கொண்டார் சர்பத் என்றதும் டீ அல்லது காபி வேண்டும் என்றாலும் கேளுங்க கூச்சப்படாதீங்க என்று கேட்டுக் கொண்டார்.

அவருடைய பேரக்குழந்தை துருதுருவென அங்கும் இங்கும் விளையாடிக்கொண்டிருந்தார்.பொருட்களை எடுத்து உரியவர்களிடம் கொடுப்பதில் திறமைவாய்ந்தவராக காணப்பட்டார்.

உரையாடினோம் அவருடைய பேச்சில் இந்திய மூத்த தலைவர்களைப் பற்றிய செய்திகள் நிறைந்திருந்தது.இத்தனை வயசிலும் இவ்வளவு விசயங்களை ஞாபத்தில் வைத்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.பல நாடுகளுக்கு சென்றுவந்தவர்.ஆங்கில புலமை நிறைந்தவர்.

தனது படுக்கையறையில் வைத்து கணினியை செயல்படுத்திக் கொண்டிருப்பதை காணமுடிந்தது.கணினிக்கு முன் இருந்த நாற்காழியின் கைப்பிடியில் தலையணைகள் கட்டப்படிருந்ததை வைத்து அதிகமாக இணையதளத்தில் வலம்வருவதை கிரகிக்க முடிந்தது.

வயதாகிவிட்டால் பலர் தங்கள் வாழ்க்கை முடிந்தே விட்டது என்ற கவலையில் பல நோய்களோடு படுத்த படுக்கையில் இருக்கும் பலருக்கு எழுபது வயசிலும் சுறுசுறுப்புடனும் தன்னார்வத்துடன் இளைஞர்களுடன் சரிசமாக பழகிவரும் மதிப்பிற்குரிய முஹம்மது அலி ஜின்னாஹ் பெரியவர்களுக்கு முன்னுதாரணமானவர்.

எனது கட்டுரைகளைப்பற்றி கூறினார் நிறைய அறிவுரைகள் கூறுவார் என எதிர்பார்த்தேன் அவரோ என்னை பேசவைத்து இரசித்துக் கொண்டிருந்தார்.
தத்துவத்தின் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கூறினேன்.

எந்த தேவைகளுக்குமே அதிகமாக செல்லாதவர் தனதூரில் நடக்கும் எனது நண்பரின் மகளார் திருமணத்திற்கு அழைப்பு இருந்தும் செல்வதற்கு மனமின்றி இருந்தவர் என்வருகையால் நானும் வருகிறேன் என காரில் செல்ல கூப்பிட நான் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளேன் எனக்கூறியதும் அதிலே போகலாம் என என்னுடன் வந்தார்.அவருடைய இந்த அனுசரனை எனக்குள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

நாளை துபாய் புறப்படுகிறேன் என்றதும் வருத்தப்பட்டார்.சில தினங்களுக்கு முன்னாடியே நாம் சந்தித்திருக்க வேண்டும் நிறைய நேரங்களை சிலவழித்திருக்க வேண்டும் என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.

எனக்கும் அதே ஆதாங்கம் தான் ஆனால் பத்து தினங்கள் தென்மாநில சுற்றுலாவில் கழிந்துவிட்டதினால் நாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என விளக்கமளித்தேன்.

வயது வித்தியாசமின்றி தனது மகன் வயதையொத்த என்னிடம் அவர் வெளிப்படுத்திய பண்பை, அன்பை எண்ணும்போது ஒரு குருவைச் சந்தித்த திருப்தி ஏற்பட்டது.துபாய் சென்றதும் எனது பையனுடன் தொடர்புவைத்துக் கொள்ளுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்.எனது தந்தைக்கு சமமான முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்.

இணையத்தில் முகப்புத்தகத்தில் வலம் வருவதும் வலைப்பூக்களை தொடங்கி பலரின் நல்ல பதிவுகளை அவர்களின் அனுமதிப்பெற்று தனது வலையில் மறுபதிவு செய்வதும் இவரின் வழமையாக இருக்கிறது. தன்னால் டைப் செய்யமுடியவில்லை என்னிடம் நிறைய கதைகள் இருக்கிறது டைப் செய்யமுடிந்தால் கதைகளை நிறைய பதிவுச் செய்வேன் என முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள் கூறினார்.

இந்த மூத்த பதிவரை சந்தித்ததில் மனம் மகிழ்ச்சியடைந்தது.இவரின் வயதிலும் சுறுசுறுப்புடன் வலம்வர வேண்டும் என்ற உரத்தை உள்ளத்தில் பதியவிட்டேன்.

எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அவருக்கு என்றென்றும் வழங்க இறைஞ்சுகிறேன்.

என்னை சந்தித்த பாதிப்பு அவரின் இமெயில் வரிகளில் காணமுடிந்தது.

இது பதிவரை பார்த்துவிட்டு வந்த பிரிவு அல்ல
இரு உள்ளங்களுக்குள் எற்பட்ட உறவு.!

                    Source : http://kismath.blogspot.com/2010/07/blog-post.html

No comments: