Wednesday, October 6, 2010

குடிநீர் கிணற்றைக் காணவில்லை - உயர் நீதிமன்றத்தில் விநோத வழக்கு

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றைக் காணவில்லை என்றும், அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விநோத வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் தனது வக்கீல் ஏ.காஜாமுகைதீன் மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னுப்பட்டியில் 39 சென்டு இடத்தில் பொதுகுடிநீர் கிணறு இருந்து வந்தது. இதை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டி உள்ளனர். அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் அதே நபர்கள் 49 சென்டு வண்டி பாதையாகிய பொது நடைபாதையை ஆக்கிரமிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த சட்டவிரோத செயலை மறைப்பதற்காக, அதிகாரிகள் துணையுடன் வருவாய் ஆவணங்களை திருத்த முயன்று வருகின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பொது குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். பொது குடிநீர் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொது பாதையை மக்கள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் பயன்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்று நடித்து இருப்பார். நகைச்சுவைக்காக அந்த காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையிலேயே ஒரு கிராமத்தில் குடிநீர் கிணற்றை காணவில்லை என்றும், அதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 ----------------------------------------------------------------------------------------------------------------


No comments: