Friday, July 29, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3


* அமீரகத்திலிருந்து எனது நண்பர்களில் சிலர் தாயகத்திற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். அப்படி வந்தவர்களில் இலக்கிய நண்பர் ராஜகிரியைச் சேர்ந்த அண்ணன் அப்துல்கதீம் அவர்கள்.

அமீரகக் கவிஞர் பேரவையை பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் உதவி தலைவரும் இல்மு அமைப்பின் தலைவருமாவார்கள்.

இவர் தற்போழுது தஞ்சையில் வசித்து வருகிறார்கள் நான் தாயகம் வந்ததும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.. அவசியம் தஞ்சைக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டார்கள்… திருச்சி செல்லும் வழியில் உங்களை சந்திக்கிறேன் என்றேன்… அவர்களும் ஆர்வத்துடன் இருக்க திருச்சி செல்ல நான் திட்டமிட்டிருந்த நேரம் மாறிப்போனதால் போகும் வழியில் கதீம் அண்ணனை சந்திக்க முடியவில்லை என்று அவர்களிடம் தொலைபேசியில் கூறிக் கொண்டேன்..

திருச்சியிலிருந்து திரும்ப வரும்போது அவசியம் வாருங்கள் என்றார் சரி என்று கூறினேன தவிர வரும்போதும் சந்திக்க முடியவில்லை… வாய்பிருந்தால் இன்னொருமுறை சந்திக்கலாம் என்றேன் அதற்கு அவகாசம் இல்லை அண்ணன் ஸ்டேட் புறப்பட்டு விட்டார்கள் எப்படியும் திரும்ப வரும்போது துபாயில சந்திக்கலாம்… ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதில் இந்தியாவைவிட துபாய் சிறந்தது எப்படியும் சந்தித்துவிடுலாம்…!

சந்திக்க முடியாமல் போனதிற்கு காரணம் கீழே படிக்கும்போது விளங்கிக் கொள்வீர்கள்…

* எனது துணைவியார் மற்றும் குழந்தைகள் துபாயிலிருந்து இரவு 11 மணிக்கு மிஹின்லங்கா விமானத்தில் புறப்படுவதற்கு துபாய் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். அவர்களுடன் எனது துணைவியாரின் தோழி குடும்பமும் மற்றும் எனது மைத்துனரும் படைசூழ சென்றுள்ளார்கள்.

இரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 5.00 மணிக்கு தான் புறப்படும் என்று கூற ஆர்வத்துடன் வந்த என் துணைவியார் டென்சன் ஆகிவிட்டார். இந்த மாதிரியான விமானத்தில் ஏன் டிக்கேட் போடுறீங்க என்று கோபப்பட்டுக் கொண்டார்.


என்ன செய்வது இப்படி ஐந்து மணிநேரம் பழி வாங்கும் என்று யாருக்கு தெரியும் இந்த சுனக்கத்தால் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது என்று எண்ணிக் கொள்ள வேண்டும்…
கொண்டு வந்த சாமான்கள் அனைத்தையும் லக்கேஜில் போட்டுவிட்டு கையில் போடிங் கொடுத்தும் இரவு சாப்பாடும் கொடுத்து உள்ளார்கள்.

எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு விமான நிலையம் வர சொன்னபடி அதிகாலை ஐந்துமணிக்கு இலங்கையை நோக்கி விமானம் புறப்பட்டிருக்கிறது அது வரையில் நான் உறங்கவில்லை… அதிகாலை மூன்று மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு எங்கள் ஊரிலிருந்து காரில் புறப்பட்டால் சரியாக மூனரை மணி நேரத்தில் விமான நிலையம் சென்றடைந்துவிடலாம்… துபாயிலிருந்து தாமதமாக புறப்பட்டதால் காலை எட்டு மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டோம்…


தஞ்சையிலிருந்து திருச்சிக்கு பல வருடங்களாக ரோடு போட்டுக் கொண்டிருந்தார்கள் அதனால் பல டிராபிக் கஸ்டங்களை அனுபவித்தவர்கள் ஏராளமானவர்கள். பட்ட கஸ்டத்திற்கு விடிவுகாலம் பிறந்தாமாதிரி புதிய ரோடு மிக அருமையாக அகலமாக அழகாக அமைத்திருக்கிறார்கள்.

செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிக கவனமாக செல்ல வேண்டும் அலட்சியமாக ஓட்டக்கூடியவர்களால் விபத்துக்களும் நடக்கிறது.

திருச்சி புதிய ஏர்போர்ட் மிக அழகாகவே இருந்தது உறவினர்களை அழைத்து வருவதற்கு செல்லக்கூடியவர்கள் அமர்வதற்கு இருக்கைள் அங்கு போடப்படாமல் இருப்பது விமான நிலைய அழகை அசிங்கப்படுத்துவதைப் போன்று இருக்கிறது.

எவ்வளவு தூரத்திலிருந்தெல்லாம் வருகிறார்கள் வருகிறவர்கள் குடும்பம் நடத்துவதற்கு அங்கு வீடு வேண்டாம் அட்லிஸ்ட் உட்காருவதற்கு இருக்கை போடுவதற்கு அந்த நிர்வாகம் ஏன் யோசனை செய்கிறது என்பது தெரியவில்லை… இது தான் நமது இந்தியா!

திருச்சிக்கு எட்டு மணிக்கு இலங்கையிலிருந்து வரவேண்டிய மிஹின்லங்கா மதியம் ஒரு மணிக்கு வந்து சேர்ந்தது விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியேறி விட்டார்கள் எங்க ஊட்டுகாரங்கள காணும் ஒரு வழியாக தாமதமாக வந்து சேர்ந்தாங்க லக்கேஜ் வருவதற்கு தாமதமாம்… வந்ததுமே நலமெல்லாம் விசாரிக்கவில்லை தாமதமாக வந்ததினால் அந்த விமானத்தைப் பற்றி கடுமையான விமர்சனம் எனது மகள்கள் செய்தனர்.
தாமதமாக வந்ததினால் ஒரு அனுபவத்தை பெற்றுவிட்டீர்கள் என்றேன்…


• நீடுரில் நடைபெற்ற கண்ணியமிக்க சகோதரர் நாசர் இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்தேன் எத்தனையோ திருமணங்கள் அந்த குடும்பத்தில் நடந்திருக்கிறது ஆனால் இந்த திருமணம் என்னை மிகவும் கவர்ந்தது. மாப்பிள்ளையின் தந்தை செல்வம் கொழித்தவராக இருந்தாலும் அவரிடம் எளிமை இருந்தது… மணமேடையில் மாப்பிள்ளையை அமரவைத்து அண்ணல் நபிகளின் பெயரில் அழகிய மனம் கவரும் அரபு புகழ்பாடல்களான (புர்தா ஷரீப்) கோரசாக பாடியவிதம் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கவர்ந்தது. மர்கஸ் கார்டன் என்ற கேரள அமைப்பினர் அண்ணல் நபிகளின் மீது கொண்டிருக்கும் நேசத்தினை அவர்கள் பாடிய பாடல்களில் வெளிப்பட்டது.


இதை இரசித்துக் கொண்டிருந்த எனக்கு பசி இல்லை நீண்ட நேரம் அவர்கள் பாடிய புர்தா ஷரீபில் லயித்திருந்தேன்… இறுதியாக அந்த குழுவினரை சந்தித்து எனது வாழ்த்துக்களை சமர்பித்தேன் மறக்காமல் மாப்பிள்ளையின் தந்தையை சந்தித்து எனது மன நிறைவை வெளிப்படித்தினேன்… அண்ணல் நபிகள் (ஸல் அலை) அவர்களை எந்த தருணத்திலும் அதிகமதிகம் நேசிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டும்…!

• திருமண நிகழ்வுகளில் சில இலக்கியவாதிகளின் சந்திப்பு நிகழ்ந்தது அதில் நீடுரில் முனைவர் அய்யுப் அவர்களை சந்தித்தேன் மயிலாடுதுறை வரலாற்று நூலை வழங்கினார்கள். அவர் நடத்தும் கேட்ரீங் கல்லூரிக்கு வரும்படி பணித்தார்கள்.

• உலக பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ரபியுத்தீனையும் அந்நிகழ்ச்சியில் சந்தித்தேன்… அமீரகத்தில் இயங்கும் எங்கள் வானலை வளர் தமிழில் அமைப்பை நினைவுக் கூர்ந்தார்கள்.

• கும்பகோணத்தில் எனது நண்பர் துபாய் ஈமான் அமைப்பின் ஆடிட்டரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவருமான திருவிடச்சேரி எஸ்.எம்.பாருக் அவர்களின் மச்சான்-தங்கை குடும்ப திருமண நிகழ்வுக்கு எனது துணைவியாருடன் சென்றிருந்தேன். அந்த நிகழ்வுக்கு அமீரகத்தில் பிரபலமான நண்பர் குத்தாலம் அசரப்அலியும் வருகைப்புரிந்திருந்தார். முக்கியஸ்தர்கள் பிரபலமானவர்கள் என கூட்டம் நிறைந்திருந்தது. நான் செல்லக்கூடிய நேரத்தில் நிக்காஹ் நடந்துக் கொண்டிருந்தது அதன் பிறகே பாரூக் அண்ணனை சந்தித்துக் கொண்டேன் நான் வந்ததில் மிக்க சந்தோசமடைந்தார்கள்.. அமீரக நண்பர்களை தாயகத்தில் அவர்கள் வீட்டு தேவைகளில் சந்திப்பது தனி அலாதிதான்…

• நகரங்களில் நடக்கக் கூடிய திருமணங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. அழைப்பாளர்களுடன் அழைக்காதவர்களும் உள்ளே புகுந்துவிடுகிறார்கள். விரைவில் அழைப்பிதழுடன் சாப்பாட்டு கூப்பனும் இனி வரும் காலங்களில் கொடுக்கப்படலாம்.

• மயிலாடுதுறையில் வசித்துவரும் அண்ணன் கவிஞர் கிளியனூர் அஜீஸ் அவர்களை சந்திக்க ஒரு மலை பொழுதில் சென்றிருந்தேன். சிறிது நேரத்திற்கு முன்பாகதான் காயல்பட்டினத்திலிருந்து வந்தேன் இலக்கிய மாநாட்டிற்கு சென்றிருந்தேன் என்றார்கள். மூன்று தினங்கள் நடைபெற்ற அந்த நிகழ்விற்கு இலங்கையிலிருந்து இருநூறு பேருக்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் கப்பலில் வந்ததாக கூறினார்கள்.. அதுமட்டுமல்ல எனது நண்பர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வந்ததாக அவர் கூறியதும் நான் பெரிதும் கைசேதப்பட்டேன். மூத்த இலக்கியவாதிகள் பங்குக் கொண்ட இந்த நிகழ்வின் அழைப்பிதழ் எனக்கு கிடைக்காமல் போனது மிகவும் வருத்தத்திற்குரியதாகவே இருந்தது.

• இந்தமுறை கோடைமழையை நன்றாக அனுபவிக்கும் பாக்கியத்தை தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் பகல் முழுவதும் அதிக வெப்பம் இருந்தாலும் மாலை நேரங்களில் மேகங்கள் திரண்டு மழையை பொழிந்து பூமியின் தாகத்தை தீர்த்து வைத்தது. ஆனால் அவ்வபோது தடைப்படும் மின்சாரத்தின் போக்கு பலருக்கு சம்சாரத்தின் போக்கை நினைவுப்படுத்தியது.
Source : http://kismath.blogspot.com/2011/07/3.html

No comments: