Sunday, July 3, 2011

இறுதி வரை யாரோ !


இறுதி  வரை என்ற வார்த்தை பல காரணங்களுக்காக   பயன்படுத்தப் பட்டாலும் இறப்புதான்   இறுதி என்று நாம் எண்ணுகின்றோம் . இதய‌ம் துடி‌க்கவில்லை, செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போனது ‌‌அதனால்  மரண‌‌ம். அந்த இறப்பும்,மரணமும்  இறுதி இல்லை என நம்புவதும் உண்டு. மறுலோகம் என்பர் மார்க்கம் பேசுபவர் .அதை நம்பாதவர் இயற்கை என்பர் .
மடிதல் என்று கிடையாது உரு மாறுகின்றது. இலை விழுந்தால் எரு ,  அவ்வளவுதான் .  ஏன் இறப்புக்கு நாம் பயப்படுகின்றோம் .  வாழ்வே மாயம்,  பின்  ஏன் இத்தனை விளையாட்டு. தேவை தான் !உலகம் உருள்வதுபோல் மனித வாழ்வும் மற்ற பிறவும் உருள்வதற்காக.பால் உணர்வால் உலகம் உருள்கின்றதா?  அதற்கு பணம், அதிகாரம், புகழ் தேவையா !
 பட்டாமணியார் வீட்டில் இறப்பு விழுந்தால் ஆயிரம் பேர்.
பட்டாமணியார் இறந்தால்  பத்து பேர்.   இது அறிந்த உண்மை .
என்ன ஆனது பணமும், புகழும், அதிகாரமும் .
உன்னுடன் வருவது யார் ?
அன்றே பட்டினத்தாரின் கவிதை மனித வாழ்வினை அறிய வைத்தது .
“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”
இப்பொழுது பாமரனும் விளங்க காலமெல்லாம்  பேசப்படும்   கவிஞர் கண்ணதாசன் பாடல்
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)


  ஒரு மனிதன் இறந்துவிட்டால் "மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன.  நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை."(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி)

  ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்” என்று நபி அவர்கள் கூறினார்கள்.
  
   நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ”அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்” என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் ‘அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ ”அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ)

     உபரியான தான தர்மங்களை அது செல்வமாகவோ அல்லது தானிய வர்க்கமாகவோ அல்லது அசைவற்ற பொருளாகவோ இருந்தால் முதலில் மனைவி, மக்கள் உறவினர், அண்டைவீட்டார் என ஆரம்பித்து தான தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! என்று நபி அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

   ” பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”
     - பட்டினத்தார்.
நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயர் கொடுத்தவனாகிய இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக..! (ஹதீஸ்-புகாரீ. பாகம் 11. பக்கம் 113.)

No comments: