Saturday, August 20, 2011

இமயமலையில் பாபாவைச் சந்திக்காமல் ரஜினி ஏன் சிகிட்சைக்குச் சிங்கப்பூர் சென்றார்?


"இலவசங்கள் இனி இல்லை" என்று ஏறக்குறைய முடிவெடுத்திருக்கும் முதல்வர் ஜெ.யின் போக்கு சரிதானே? - ப.கோ. வசீகரன். ஜெயலலிதா வாக்களித்த இலவசங்களை வழங்கி முடிக்கும் முன் அடுத்த பொதுத் தேர்தல் வந்து விடும். பின் மீண்டும் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிக்க வேண்டி வருமே?
நீங்கள் வினவியுள்ளபடி "இலவசங்கள் இனி இல்லை" என பொதுமக்களிடம் அறிவிக்க ஜெயலலிதாவுக்குத் தைரியம் உண்டா?

அடுத்த தமிழக ஆளுநர் யார்? - ரஞ்சனி, ஈரோடு.

ஜெயலலிதாவுக்கு இணக்கமானவர்.

அவரைப் பகைத்துக் கொள்ள் மத்தியில் ஆளும்  காங்கிரஸ் முனையாது; காங்கிரஸைப் பகைத்துக் கொள்ள ஜெயலலிதாவும் முனைய மாட்டார்.



இமயமலையில் நீண்டநாட்களாக உயிர்வாழும் பாபாவைச் சந்திக்காமல் தன் கிட்னி மாற்று சிகிட்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஏன் சென்றார்? - முருகேசன், பெரம்பூர்.
சிகிச்சை அவசரம்!

ஹெல்தியாக இருந்தால் "நீண்டநாட்களாக உயிர்வாழும் பாபா" வைப் பின்னர் சந்தித்துக் கொள்ளலாமே என்பதால்தான்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட புரட்சி முடிவடைந்து விட்டதா? - அபுபக்கர், சென்னை.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டது புரட்சி இல்லை;  கிளர்ச்சி என முன்னரே இப்பகுதியில் சொல்லியுள்ளேன். புரட்சி எனில் அதன் விளைவு நீண்ட வரலாறாக இருக்கும். கிளர்ச்சி அப்படியே முடிந்து விடும்.

ப.சிதம்பரத்துக்கு அடுத்த பிரதமராகும் வாய்ப்புள்ளதாமே, உண்மையா? - கண்ணன், ஈரோடு.

மூப்பனாருக்கு வந்த வாய்ப்பு கருணநிதியால் பறிபோனதாக ஒரு பேச்சு முன்னர் இருந்தது. இப்போது சிதம்பரத்துக்கு அவ்வாய்ப்பு வருமானால் நாம் மகிழ்வோம். அவர் அப்பதவிக்கு மிகத்தகுதியான தமிழரே!

ஜெயலலிதா போன்றோர் காழ்ப்புணர்ச்சியால் தடுக்க முனையாமல் இருந்தால் சரி.
ஜெயலலிதாவுக்கும் பிரதமராகும் தகுதி இருப்பதாக நடிகர் சரத்குமார் சொல்லியுள்ளார்.


இப்போதாவது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடவுள் உண்டென்று நம்புவாரா? - சக்தி, சத்தியமங்கலம்.

"இப்போதாவது" எனில் இப்போது என்ன விசேடம்? கடவுள் நேரில் கருணாநிதிக்குக் காட்சி தந்து விட்டானா?


கனிமொழி சிறையில் புத்தகம் எழுதுகிறாராமே... ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான உண்மைகள் வெளிவருமா? - திருநாவுக்கரசு.

உங்கள் இந்நேரம் தளச் செய்தி அப்படித்தானே கூறுகிறது.

"திகார் சிறையில் இருந்தவாறே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கனிமொழி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 2ஜி ஊழல் தொடர்பான அனைத்து விவரங்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. 2ஜி ஊழலில் பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரின் பங்கு குறித்து கனிமொழி இந்தப் புத்தகத்தில் விரிவாகவே எழுத உள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன."(முழு செய்தி)


தெரியாமல் தவறு செய்த பாண்டிய மன்னனுக்குத் தண்டனையாக மரணமும் மதுரை மாநகர் எரிப்பும் என சித்தரிக்கும் சிலப்பதிகாரம், தெரிந்தே மனைவிக்குத் துரோகம் செய்த கோவலனின் செயலைக் கண்டிக்காதது ஏன்? சிலப்பதிகாரம் ஒரு ஆண் எழுதியதாலா? - அருள், கத்தர்.

காப்பியக் குறிக்கோளாக,

"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்.."
என

இளங்கோ கூறியுள்ளார்.

அரசியல் பிழைத்த பாண்டியன் அதற்கு விலையாகத் தன் உயிரைக் கொடுத்தான்.

"வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது"
எனக் காப்பியம் இதைச் சிறப்பித்தாலும் அரசு பிழை செய்ததால் அறங்கூற்றானது எனும் காப்பிய நீதியே இங்கு முதன்மையானது.

கோவலனின் கொலை 'ஊழ்வினை' எனத் தெளிவாகக் கூறிவிட்டது சிலப்பதிகாரம்.

மதுரை எரிப்பு சூழ்வினைச் சிலம்பு காரணமாக நிகழ்ந்தது.

மதுரை வீரன் அழகிரி என்ன செய்து கொண்டிருக்கிறார்? - சசி, சென்னை.

மத்தியில் அமைச்சராக இருக்கிறார். 

அழகிரி எப்போது மதுரை வீரன் ஆனார்?

அந்தப் பட்டம் எப்போதுமே "முத்து"வுக்குத்தான்..

திமுகவிற்கு எதிராக தொடரும் மத்திய மாநில கைது நடவடிக்கைகள் பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது உண்மையாகவே குற்றம் செய்ததற்காகவா வணங்காமுடியாரே? - பாபு, பரங்கிபேட்டை.

அனைத்துக் கைது நடவடிக்கைகளையும் ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லி விட முடியாது. ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது செய்கிறார்கள். ரஸ்ஸலின் இந்த அலசலைப் படித்திருப்பீர்கள்  அல்லவா?

பழிவாங்கும் செயல் என்று புலம்புவது அரசியல்.

உண்மையிலேயே அரசியல் பழிதீர்க்கும் செயலாக இருந்தால் இந்நேரம் தளமும் வணங்காமுடியும் ரஸ்ஸலும் அதை அம்பலப்படுத்துவதில் தயக்கம் காட்டப் போவதில்லை.

இன்றைய தமிழ் எழுத்துலகில் குறிப்பிடும்படியான எழுத்தாளர் யார்? அதில் வணங்கா முடியாருக்குப் பிடித்தவர் யார்? - மணிகண்டன், சென்னை.
தமிழ் எழுத்துலகில் பல களங்கள் இருக்கின்றன. கதை கவிதை புதினம் நாடகம் விமர்சனம் ஆய்வு உளவியல் சமூகவியல் அரசியல் எனப் பல வகைப்பட்ட களங்களில் இன்று எழுதுவோருள் பலரைப் பிடிக்கும்.

முன்னர் ஒரு விடையில் நான் சொல்லியுள்ளபடி பொதுவே இக்களங்கள் பலவற்றிலும் எழுதிய கவியரசு கண்ணதாசனே அன்றும் இன்றும்  வணங்காமுடிக்குப் பிடித்த எழுத்தாளர்.

பொருள் ஈட்டும் காரணத்தினாலோ மற்ற பிற காரணத்தினாலோ மனைவியினை விட்டு ஒரு சில காலங்கள் பிரிந்து வாழ்வதால் பல தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு  உள்ளது. இதற்கு இஸ்லாம் என்ன சொல்கிறது? - முஹம்மது அலி ஜின்னா.

மனைவியைப் பிரிந்து வாழ்வதால் தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அஞ்சுவோர் ஏன் மனைவியைப் பிரிந்து செல்லவேண்டும்? வாழ்க்கைத் தேவைகளை வரவுக்குள் வைத்துக் கொண்டு மனைவியுடன் சேர்ந்து வாழ்வதே அறிவுடைமை.

இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது முகமதலிக்குத் தெரியவில்லையெனில் உள்ளூரில் இருக்கும் முஸ்லிம் மத அறிஞர்களிடம் வினவலாம். உள்ளூரில் அத்தகு அறிவார்ந்தோர் இல்லையெனில் இணையத்தில் இதற்கென்றே இருக்கும் தளங்களில் வினவியிருக்க வேண்டும்.

சினிமா மற்றும் மதம் தொடர்பான வினாக்களுக்கு நாம் விடை அளிப்பதில்லை என  அறிவித்துள்ளோம். இதை ஒரு விடையிலும் சொல்லியுள்ளோம். அவ்விடை கீழே(http://www.inneram.com/2011012313155/vanagamudi-answers-23-01-2011):

குழந்தைகளுக்கான பால்பற்கள் (ஆரம்பத்தில் முளைப்பது) அனைத்தும் விழுந்து புதியப் பற்கள் வருமா? அல்லது கடவாப் பற்கள் விழாமல் ஏற்கெனவே உள்ள பற்கள் அப்படியே இருந்து விடுமா? - பிரியாமணி,  மானாமதுரை.

வணங்காமுடி Master of All subjects எனப்படும் அனைத்துத் துறை வல்லுநன் அல்லன். வணங்காமுடி விடைகள் பகுதிக்கு மருத்துவம், உடலியல், உளவியல் போன்ற துறை சார்ந்த வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. ஒரு வாசகர் முஸ்லிம் மத அறிஞர்களிடம் வினவ வேண்டியதை வணங்காமுடி விடைப் பகுதிக்கு அனுப்பி வினவியுள்ளார்.

அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், கல்வி, குடும்பவியல் இணைந்த அன்றாட நாட்டு நடப்புகள் தொடர்பான வினாக்களுக்கும் பொது அறிவியல், புவியியல் தொடர்பான வினாக்களுக்கும் விடை அளிக்க முடியும். சினிமா மற்றும் மதம் தொடர்பான வினாக்களுக்கு விடை அளிக்க முடியாது.

உடலியல் சார்ந்த வகையில் அமைந்ததுவே உங்கள் வினாவும். நாம் சிறு குழந்தையாய் இருந்தபோது இது நமக்கு நிகழ்ந்தது தான். ஆனால் நமக்கு நினைவிருக்காது. எனவே நம் வீட்டிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ அக்கம் பக்கத்து வீடுகளிலோ வளரும் குழந்தைகளைக் கவனித்தாலே விளங்கி விடுமே?


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/

No comments: