Sunday, October 2, 2011

'என் மகள்களின் மூன்று கேள்விகள்'



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.

அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.

தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.


ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது. 

இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.   

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.  
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.   
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது. 
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.

"மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.

பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோது, இவரது ஆவணங்களை கிழித்தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக்கொண்டு, என்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை. 
பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை. 
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.

பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.  
ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

அவ்வளவுதான்.....

அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.

பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.


மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத்.

"எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.

ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.

இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.

அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன். 

By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். 

இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.

முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.

என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
  • இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
  • நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
  • நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?

முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'. 

என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.

மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.

நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.

எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

ஆனால், என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.

சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'. 

இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.  

ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'

என்னுடைய பதில்: 'இல்லை'. 

'இனியும் புகைபிடிப்பீர்களா?' 

புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.   

அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது. 

'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'

என்ன???????

இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.  

'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'. 

'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள். 

நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."

சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும், தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.  

Please Note:
இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sr. Lauren Brown's Official Website:
1. http://www.laurenbooth.co.uk. link

References:
1. Lauren Booth explains why she feel in love with Islam - news.com.au. link
2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ. 

------------------------------------------------------------------------------------------------

No comments: