Saturday, October 29, 2011

ஊர் பெருமை…!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சி இரவுக் காட்சியில் ஒரு ஊரின் பெருமையை வழக்கம் போலவே பேசியது அச்சேனல். எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரைப் பெருமைப்படுத்தி பேசுவது அதன் கொள்கை. அப்படிப் பேசிய ஒரு ஊர் வரலாற்றில் அதன் நிறைகுறைகள் அலசப்படாமல் ஒரு பக்கப் பார்வையோடு காட்சிகள் ஓடியதை காண நேர்ந்தது. டி.விக்கு ஊதுகுழலாக சிலர் வந்து அதிகப்படியாக தம்மூர் பெருமைகளை அளந்தனர்.
பெருமை பேசியோரிடம் தமிழக மக்கள் முன்வைக்கும் சில கருத்துக்கள். ‘‘உலகத்திலேயே தங்கள் ஊர் சிறந்த ஊர்’’ என்கிறீர்கள். மகிழ்ச்சி. அவ்வூரை விட்டு எதற்காகவும் வெளியேறாதீர்கள்.
உள்ளூரில் கிடைப்பதைக் கொண்டு தேவையை நிவர்த்தி செய்யும் காந்தியப் பொருளாதாரத்தை உருவாக்குங்கள். ஆம்பூர், திருப்பூர், சிவகாசி போல் தமது ஊரை தொழில் நகரமாக மாற்றுங்கள். 60 வருடமாக வெளியூரில் வாழ்ந்த பிறகும் தம்மூர் என்ற சொல்லுக்கு என்ன இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. வருடத்துக்கு ஒரு முறை படுத்துறங்க வந்து போகும் ஊர் தம்மூர். படித்தது, பணி செய்தது, குடியிருப்பது வேற்றூர். இந்த மனோ நிலை, கேவலமானது. உதிரம் ஊற, உயிர் வாழ அனுமதிக்கும் ஊரை அவமதிக்கும் செயல். வாழும் ஊரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள். இந்த எண்ணமுடையவர்கள் அடுத்த ஊருக்கு பிழைக்கச் செல்லக்கூடாது. நிலம், வீடு வாங்கக்கூடாது. வியாபாரம் செய்யக்கூடாது. தனது ஊரில்தான் வீடு கட்டுவோம். எந்த ஊர், மாநிலம், நாட்டிலிருந்தாலும் அவ்வூர்ப் பெண்களைத் திருமணம் செய்யாமல் எம் ஊர்ப் பெண்ணையே மணமுடிப்போம். ஊர்ப் பெருமையை நிலைநாட்டுவோம் என்பது ஷிர்க்குடைய அம்சம். மறைமுகமாக மற்ற பெண்கள் கற்பை கேள்விக்குட்படுத்தும் போக்கு.
பெருமை பேசும் ஊரில் சாராயக்கடை இல்லாதது போல், முஸ்லிம்கள் வாழக்கூடிய பல ஊர்களில் சாராயக்கடை இல்லை. அவ்வூரில் ‘‘சினிமா தியேட்டர் இல்லை’’ என்பது பெரிய விஷயமில்லை. டி.வி., கேபிள், விசிடி இல்லாமல் வாழ்கின்றனர் என்றால் அதுதான் பெரிய விஷயம். கடுமையான அனாச்சாரம், ஆபாசங்களை மனிதன் இருக்குமிடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும். டி.வி., கேபிள், வி.சி.டி. இணையதள இணைப்பு எங்கள் ஊரில் இல்லை. நாங்கள் உபயோகிப்பது இல்லை என்று மார்த்தட்டினால் மாலை சூட்டலாம். ‘‘அன்னியப் பெண்களது முகம் பார்க்காமல் வாழ தனி வீதி, தனிக் கவுன்டர்’’ வைத்துள்ளவர்கள். தமது வியாபார நிறுவனங்களில் விதவிதமான உடை உடுத்தி அழகுப் பெண்களை பதுமை போல் நிறுத்தக்கூடாது. பெண்ணுடன் ஆண்கள் அருகருகே அமர்ந்து பணி செய்யக்கூடாது. தமது வீடுகளில் அன்னியப் பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது. இங்கொரு சட்டம். அங்கொரு சட்டம் என்பது இரட்டை வேடம்.
‘‘நிலம், தங்கம், 2 சென்டருக்குக் குறையாத வீடு மஹராகப் பெண்களுக்குக் கொடுத்து மணமுடிக்கிறோம்’’ இந்த பெருமை அங்கு ஏழையே இல்லை என்பதைக் குறிக்கிறது. ஏழையே இல்லாத ஊருக்கு பைத்துல்மால் தேவையில்லை. பைத்துல்மாலில் பணம் கட்டுக் கட்டாக எண்ணுவதை டி.வி.யில் காட்டுவதும் கண் துடைப்புக் காட்சி. ஏழைகள் உள்ளனர் என்றால் ரேஷன் கார்டு, வருமானச் சான்று காட்டவேண்டும். பெருமை பேசும் ஊரைச் சேர்ந்த ஒரு கண்ணீர்க் கதை. ‘‘நான்கு சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வசதியோடு இருந்தபோது இரு அண்ணன், தம்பிகள் பெருமை பேசும் ஊர்ப் பெண்களைத் திருமணம் முடித்தனர். மற்ற இருவர் வசதியற்ற காலத்தில் மணமுடித்தால் சென்னையில், வேற்றூர் பெண்களை முடித்தனர். அப்பெண்களை மணம் முடித்த இருவரில் ஒருவர் நோயால் பீடிக்கப்பட்டு 17 வருட மணவாழ்க்கையோடு இரு பெண்க் குமர்களைத் தம் இளம் மனைவியைப் பிரிந்து அகால மரணமடைந்தார். அவருக்கு மருத்துவ உதவி, குமர்களைக் கரையேற்றும் உதவி எதுவும் செய்யவில்லை பெருமையான ஊரில் வாழும் இறந்தவருடைய இரு சகோதரர்கள், உறவினர்கள். கடைசியில் இறந்தவரின் ஒரு குமர் காதல் திருமணம் புரிந்தது. மற்றொரு குமரைப் படிக்க வைக்க படாதபாடு படுகிறார் அந்த விதவைத் தாய். இறந்தவருடைய மற்றொரு சகோதரர் பிளாட்பார வியாபாரி. பெருமைக்குரிய தம் ஊரைச் சேர்ந்தவர்களில்லை இரு பெண்களும் என்பதற்காக இரு சகோதரர்களின் குடும்பங்களும் அண்டவிடவில்லை. பைத்துல்மால் அறிமுகப்படுத்தவில்லை. பைத்துல்மாலில் பெற்று உதவவில்லை. அவ்வூரின் சாதி வெறித்தாண்டவத்துக்கு இது ஓர் ஆதாரம்.
‘‘திருமணத்தின் போது சில மணித்துளிகள் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது’’ பெரிய காரியமல்ல. தினந்தோறும் தமது நிறுவன ஊழியர்கள், வீட்டு வேலைக்காரர்களுக்கு தான் உண்ணும் உணவு தரனும். அதுதான் சிறப்புக்குரியது. புகுந்த வீடு ஆண்களுக்கு என்பது 21ஆம் நூற்றாண்டின் பத்தாம் பசலித்தனம். அவர்களது ஆளுமை, திறமையை மழுங்கடிக்கும் போக்கு. இருக்கும் ஆயிரம் வீடுகளைத் தங்களுக்குள்ளாகத் திருப்பித்தந்து கொள்வது முன்னூதாரணச் செயலல்ல. ஒரே ஒரு வீடு வைத்திருப்பவர் மகள்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு மகனுக்குரிய பங்கை மறுக்கும் நிலை. ஷரிஅத்தை மீறும் செயல். எங்களிடம் பணமுள்ளது யாரையும், எதையும் விலைக்கு வாங்குவோம். இரண்டு ஊர்களிலும் ஆதிக்கம் செய்வோம். ஹாஜி, தலைவர், அவுலியாகவிருந்தாலும் அவர் எங்கள் ஊர் இல்லை அதனால் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்பது இஸ்லாத்திற்கு விரோதமான கொள்கை.
அதீத ஊர்ப்பற்றில் ஊறித் திளைப்பதன் விளைவு அரசியல், அதிகாரத்தில் எவர் எவரோ மண்ணின் மைந்தராகி ஆதிக்கம் செய்கின்றனர். தடுக்கவியலா நிலையை ஊர்ப்பற்று மனோபாவம் உருவாக்கி வைத்திருப்பதால் ஊர்ப்பற்றாளர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர். எம்மூர் மக்களின் பேச்சில் ‘‘தொல்காப்பியத் தமிழ் சொற்கள் கொஞ்சி விளையாடும்’’. கேட்கவே நல்லா இருக்கிறது. ஆனால் அதற்கான ஆதாரமில்லை. காரணம். பேச்சுத்துறை, எழுத்துத்துறை, இலக்கியத்துறை, அரசியல்துறைகளிலிருந்து ஒருவர் கூட பெருமை பேசும் ஊரைச் சார்ந்தவர் நான் எனக்கூறத்தக்க வகையில் இன்று வரை வெளிவரவில்லை. ஊர்ப் பெருமை தனது உம்மத்துக்கு கூடாது என்பதே நபி (ஸல்) வாழ்வில் காட்டிய வழி. தாம் பிறந்த மக்காவை நபி (ஸல்) துறந்ததே அதற்கு அத்தாட்சி.
Source : http://jahangeer.in/

1 comment:

yasaru said...

நீங்க சொல்றது அனேகமா காயல்பட்டினம் தான் நினைக்கிறேன். நீங்க சொல்றது ஓரளவு உண்மைதான். ஆனா, தொலைக்காட்சியும் இணையமும் பத்தி நீங்க சொல்றது உங்களோட குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுது..அது எப்படி தொலைக்காட்சியும் இணையமும் இல்லாமல் இருந்தால் அந்த ஊர் நல்ல ஊர்னு சொல்ல முடியும்..அது இரண்டும் இருந்தா அந்த ஊர் அப்போ கெட்ட ஊரா.. இந்த விசயத்தை சொல்வதற்கு கூட நீங்க இணையத்தை தானே பயன்படுத்துறிங்க, தொலைக்காட்சியும் இணையமும் எத்தனை எத்தனை விசயங்களை நம் கண் முன்னே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.. இவை இரண்டும் ஒரு ஊரை எப்படி தரமற்றதாக மாற்றுதுனு நீங்க கொஞ்சம் தெளிவா விளக்கினா அதில் நியாயம் இருந்தா பாக்கலாம்...