Monday, December 12, 2011

அன்பு இன்பம் தரும்!

கமலாவும் ஃபாத்திமாவும் நல்ல நண்பிகள். ஒரே வகுப்பில் படிக்கும் அவர்கள் இருவரும் ஒருபோதும் சண்டை பிடித்துக்கொள்வது இல்லை. ஒற்றுமையாக விளையாடுவார்கள்; ஒருவருக்கு ஒருவர் உதவிகளும் செய்துகொள்வார்கள். கமலா ஃபாத்திமாவுக்குக் கணக்குப் பாடத்தில் கஷ்டமான கணக்குகளைச் சொல்லிக் கொடுப்பாள். அவ்வாறே, ஆங்கிலப் பாடத்தில் கமலாவுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஃபாத்திமா விளங்கப்படுத்துவாள்.


இப்படி இவர்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பது விமலாவுக்குப் பிடிக்கவில்லை. அவள் அவர்களைப் பார்த்துப் பார்த்துப் பொறாமைப் பட்டாள். எப்படியாவது சண்டை மூட்டிவிட்டுக் கமலாவையும் ஃபாத்திமாவையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்தாள். எனவே, அதற்காக எப்போதும் பொய் பேசிக்கொண்டும் புறம் கூறிக்கொண்டும் திரிந்தாள். ஆனாலும் அவளுடைய திட்டம் பலிக்கவில்லை. கெட்ட பிள்ளைகளை எல்லோரும் வெறுப்பார்கள் அல்லவா? விமலாவுக்கும் அதுதான் நடந்தது. ஆம்! அவளின் கெட்ட பழக்க வழக்கங்களால் மாணவிகள் எல்லோரும் விமலாவை வெறுத்து ஒதுக்கினார்கள். எத்தனையோ புத்திமதிகள் கூறியும் தன்னைத் திருத்திக் கொள்ளாத விமலாவை ஆசிரியர்களும் விரும்பவில்லை.

"தன் வினை தன்னைச் சுடும்" என்பது பழமொழி. அதுபோல, மற்றவர்களுக்குத் தீங்கு செய்யப் போய் அவளே கடைசியில் துன்பத்தில் மாட்டிக் கொண்டாள். யாருமே அவளுடன் பேசவில்லை, அவளை விளையாடச் சேர்க்கவும் இல்லை. வகுப்பறையில் தனித்து ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்த விமலாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது. மேசையில் முகம் புதைத்து அவள் விம்மி விம்மி அழுதாள்.

அப்போது... ஏதோ தேவைக்காக கமலாவும் ஃபாத்திமாவும் வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். அழுது கொண்டிருந்த விமலாவைப் பார்க்க அவர்களுக்குப் பாவமாய் இருந்தது. இருவரும் விமலாவின் அருகில் சென்றார்கள். ஃபாத்திமா விமலாவின் தலையை அன்போடு தடவி விட்டாள். அழுதபடி நிமிர்ந்து பார்த்த விமலாவின் கண்களில் வழிந்த கண்ணீரைக் கமலா இரக்கத்துடன் துடைத்து விட்டாள்.

விமலா தன் பிழையை உணர்ந்து வெட்கப்பட்டாள். அவர்கள் இருவருக்கும் தான் செய்த தீமையை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டாள். கமலாவும் ஃபாத்திமாவும் விமலா திருந்திவிட்டதை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.



********************
பாடசாலை விடுவதற்கான மணி ஒலித்தது. எல்லோரும் தத்தமது வீடுகளுக்குச் செல்ல ஆயத்தமானார்கள். வெளியே இலேசாக மழை தூறத் தொடங்கியது. அன்று விமலா குடை கொண்டு வந்திருக்கவில்லை. ஃபாத்திமாவும் கமலாவும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்ததால் ஒரே பக்கம் செல்லவேண்டி இருந்தது. எனவே, அவர்கள் இருவரும் தமக்கு ஒரு குடையை வைத்துக் கொண்டு மற்ற குடையை விமலாவுக்குக் கொடுத்தார்கள்.

அன்புதான் எப்போதும் மகிழ்ச்சி தரும் என்பதை இப்போது விமலா புரிந்து கொண்டாள். எனவே, அவர்களுக்கு நன்றி கூறிக் குடையைப் பெற்றுக்கொண்டாள். ஆனந்தமாய் அதை விரித்துப் பிடித்தபடி தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

இனிமேல் அவள் எல்லோரிடமும் அன்பாய் நடந்து கொள்வாள். காரணம், பொறாமையும் கோபமும் எப்போதும் துன்பத்துக்கே வழி வகுக்கும் என்பதையும், தீய குணங்களால் இழிவும் அவமானமுமே ஏற்படும் என்பதையும் அவள் மிக நன்றாகப் புரிந்து கொண்டாள்.

ஆகவே, தம்பி தங்கைகளே! நல்ல பிள்ளைகளாய் எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ வேண்டும். பிறருக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும். அப்படி இல்லாத வாழ்க்கை எந்தப் பயனும் இல்லாதது என்பதைத் திருவள்ளுவர் தன் குறளில் இப்படிக் கூறியுள்ளார்:

"அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை - வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று"


பொருள்: மனதிலே அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை, வளம் இல்லாத கொடிய பாலை நிலத்திலே பட்டமரம் ஒன்று நிற்பதைப் போன்றதாகும்.
- ஆக்கம்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை)

No comments: