Saturday, February 25, 2012

பற்று வேறு, வெறி வேறு

(மணவை முஸ்தபா)
‘இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாததை போடுறான்’ என்ற குற்றம் சாட்டுகிறார்களாம் சவுதி சகோதரர்கள். ஆதலால் , பிற மதங்களை ‘மாற்றுச் சமயங்கள்’ என்று குறிப்பிடாமல் ‘சகோதர சமயங்கள்’ என்று குறிப்பிடும் பண்பாளர் மணவை முஸ்தாபாவின் நூல் ஒன்றிலிருந்து கொஞ்சம் பதிவிடுகிறேன். இதில் ரசூல் (ஸல்) இருக்கிறார்கள், சஹாபி (நபித்தோழர்) இருக்கிறார், முக்கியமாக… ஒட்டகம் இருக்கிறது :-) .
***
ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’ என்றார்கள்.
இப்பதிலில் திருப்தியடையாத சஹாபி மேலும் தெளிவு பெறும் பொருட்டு, தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்.
‘பற்று கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். இனத்தின்மீது தீவிரமாகப் பற்றுக் கொண்டால் அதனை மற்றவர்கள் வெறியாகக் கருதுகிறார்கள். அந்தப் பற்றுக்கும் வெறிக்கும் என்ன வேறுபாடு?’ என்று கேட்டார்.

இவ்வினாவுக்கு விடைகூற முனைந்த பெருமானார் ‘எந்த ஒரு குறிப்பிட்ட இன, மொழிகளைப் பற்றிக் கூறாமல், ஒரு இனத்தைச் சார்ந்தவன் மற்றொரு இனத்தைச் சார்ந்தவன் மீதோ அல்லது இனத்தின் மீதோ தீவிரமான, கெடுதலான, தீங்கு தரக்கூடிய, அந்த இனத்திற்கு மாபெரும் பாதகத்தை அளிக்கக்கூடிய ஒரு தீய காரியத்தை செய்யத் துணிந்து விட்டான் என்றால் , நம் சமுதாயத்தைச் சார்ந்தவன்தானே இதைத் தொடங்கியிருக்கிறான், அந்த இனத்தின் அடிப்படையில் அவனுக்குத் துணையிருப்பதுதானே முக்கியக் கடமை; நீ என்ன தீங்கு செய்தாலும்  உனக்கு நான் துணையாயிருக்கிறேன் செய்! என்று அவன் துணை போனால் அது அந்த இனத்தைச் சார்ந்தவன் மீது நீ கொண்டிருக்கும் பற்றல்ல; அது அந்த இனத்தின் மீது கொண்டிருக்கும் வெறி. அந்த வெறியோடு நீ செயல்பட்டால் நிச்சயமாக நீ அழிவாய். உன்னை நம்பி உன் துணையை எதிர்பார்த்து, அந்த செயலில் முனைப்பாக ஈடுபடக் கூடியவனும் அழிவான் ‘ என்றார்கள். இதனை, இவ்வாறு கூறும் அறிவுரைகளைச் செம்மையாக புரிந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்ற ஐயம் அண்ணலாருக்குத் தலை தூக்கவே மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள உடனே ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலானார். ‘ கிணற்றுக்குள் விழுந்துவிட்ட ஒரு ஒட்டகத்தை, ஒரு தனி மனிதன், வாலைப்பிடித்து நான் மேட்டுக்கு இழுத்து விடுவேன், கிணற்றிலிருந்து தூக்கி விடுவேன், அதனைக்  காப்பாற்றி விடுவேன் என்று முனைந்து நின்றால், ஒட்டகத்தை அவனால் தூக்க முடியாதது மட்டுமல்ல; வாலைப்பிடித்த இவனும் அந்தக் கிணற்றுக்குள் விழுந்து விடுவான். விழுந்த அந்த ஒட்டகத்தோடு இவனும் அழிவான்’ என்று விளக்கினார்கள்.
***











- ‘வளர்தமிழ்ச் செல்வர்’ மணவை முஸ்தபா , 6.7.1998 அன்று அபுதாபி ஐமான் சங்க மீலாது விழாவில் பேசியது. ‘இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா ‘ நூலிலிருந்து , பக் 147-148 (வெளியீடு: சௌதா பப்ளிகேஷன்)
Souurce : http://abedheen.wordpress.com/

No comments: