Friday, June 14, 2013

அடுத்த பிரதமர் மோடி



நரேந்திரமோடிக்கு நிர்வாகத்திறமை உண்டு என்பதை ஒப்புக்கொள்வதில் நமக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு ஹாட்ரிக் அடிப்பதெல்லாம் அபாரமான சாதனைதான். கோத்ரா ஒன்றே அவரை நிராகரிக்க போதுமான காரணமுமில்லை. ஆனால் அவரால் மட்டுமே இந்தியாவை ரட்சிக்க முடியும், அவர் அடுத்து பிரதமர் நாற்காலியில் அமர்வதை ஆண்டவன் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதைப் போன்ற பிரமையெல்லாம் வெத்து சவடால்தான். மோடி, ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் பலூன் மட்டுமே. முன்பு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை அசைக்கவே முடியாது என்று இதே ஊடகங்கள் இதே போல ஊதியதை மறந்துவிடக்கூடாது.

இந்தியாவிலேயே குஜராத் நெ.1 மாநிலம். அம்மாநிலம் உலகவங்கியில் ஒரு லட்சம் கோடி சேவிங்ஸ் அக்கவுண்டில் போட்டிருக்கிறது. குஜராத்தில் மின்வெட்டே கிடையாது. குஜராத்தின் நதிகளில் தண்ணீருக்குப் பதிலாக தேனும், பாலும்தான் ஓடுகிறது என்பது மாதிரி ஏகப்பட்ட கட்டுக்கதைகளை குஜராத்துக்கு வெளியே தூணிலும், துரும்பிலும் கூட கேட்கமுடிகிறது. மோடி பதவியேற்ற பிறகு குஜராத்தைவிட பல மாநிலங்கள் (தமிழகம் உட்பட) கூடுதல் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது. இத்தனைக்கும் இம்மாநிலங்களில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தும் வளர்ச்சியில் எந்த தடையுமில்லை. குஜராத்தின் தனிநபர் வருமானத்தை விட ஐந்து மாநிலங்களில் (தமிழகம் உட்பட) வருமானம் அதிகம். தொழில் வளர்ச்சியிலும் கூட மற்ற மாநிலங்களை குஜராத் எவ்வகையிலும் முந்தவில்லை. இவரது காலக்கட்டத்தில் குஜராத்தைவிட தமிழ்நாட்டிலேயே கூட அந்நிய முதலீடு அதிகம். கல்வி, நலவாழ்வு, வருமானம் அடிப்படையிலான ஹூயுமன் டெவலப்மெண்ட் இண்டெக்ஸில் கூட இந்திய மாநிலங்களில் குஜராத்துக்கு பதினோராவது இடம்தான். எப்படி யோசித்தாலும் எந்த வகையிலும் குஜராத் முதலிடத்தில் இல்லை எனும்போது, மோடி சார்பாக செய்யப்படும் ஊடகப் பிரச்சாரங்கள் கோயபல்ஸ் தன்மை கொண்டவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகியுமில்லை. அதே நேரம் மோசமான ஆட்சியாளரும் இல்லை என்பதுதான் உண்மை.

திரும்பத் திரும்ப குஜராத்தியர்கள் அவரையே தேர்ந்தெடுக்கிறார்களே, சிறப்புகள் இல்லாமலா மூன்றாவது முறை முதல்வர் ஆவார் என்று கேட்கிறார்கள். அப்படிப் பார்க்கப்போனால் இவரைவிட அசைக்க முடியாத இடத்தில் ஷீலாதீட்சித் இருக்கிறார். அவரை பிரதமர் பதவியில் வைத்து கற்பனையில் கூட எந்த ஊடகமும் அழகு பார்க்கவில்லையே?

மோடி ஏன் பிரதமர் ஆகவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், அவர் ஏன் ஆகக்கூடாது என்று அவரது எதிர்ப்பாளர்களும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பட்டிமன்றத்துக்குள் நாம் நுழையவேண்டாம். நிஜமாகவே மோடி பிரதமர் ஆக வாய்ப்பிருக்கிறதா என்று மட்டும் பார்ப்போம். ஊர் ஊராகப் போய் சென்சஸ் கூட எடுக்க வேண்டியதில்லை. உங்களுக்கு முன்பாக இந்தியா மேப்பை எடுத்து வைத்துக்கொண்டு பாஜக எங்கெங்கே ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒரு ரஃப் எஸ்டிமேட்டை நீங்களே கூட போட்டுப் பார்க்கலாம்.

இந்தியாவில் 543 பாராளுமன்றத் தொகுதிகள். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம். பாஜக ஆளும் இந்த நான்கு மாநிலங்களிலும் இருக்கும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 68 தான். இவற்றை தவிர்த்துப் பார்த்தால் டெல்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மாதிரி சில மாநிலங்களில் சொல்லிக் கொள்ளும்படி செல்வாக்கு உண்டு. தென்மாநிலங்களில் கர்நாடகாவில் ஓரளவுக்கு ஜெயிக்கலாம். கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவற்றில் பாஜக ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதியில் ஜெயித்தாலும் ஆச்சரியம்தான். ஒரிஸ்ஸாவில் பட்நாயக் மனசுவைத்தால் ஓரிரண்டு இடங்கள் உண்டு.

பிரதமரை தீர்மானிக்கும் மாநிலம் என்று சொல்லக்கூடிய உ.பி.யில் 80 தொகுதிகள் இருக்கின்றன. எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் துவக்கத்திலும் பாஜகவுக்கு அட்சயப் பாத்திரமாக இருந்த உ.பி., இன்று முற்றிலுமாக அக்கட்சியை கைவிட்ட நிலையே நிலவுகிறது. முலாயமும், மாயாவதியும் அடித்துப் பிடித்துக்கொண்டது போக காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் கிடைப்பது எலும்புத்துண்டுகள் மட்டுமே. பீகாரில் பாஜகவுக்கு பெரிய செல்வாக்கு இல்லையென்றாலும், அங்கு அக்கட்சியின் அணியில் இருக்கும் ஐக்கிய ஜனதாதளம்தான் ஆட்சியில் இருக்கிறது. மோடி என்கிற பெயரை கேட்டாலே நிதிஷூக்கு அப்படி ஓர் எரிச்சல். அக்கட்சியும் கிட்டத்தட்ட பாஜகவை கைவிட்டு விட்டது. மகாராஷ்டிராவில் பால்தாக்கரே இருந்தபோது பாஜகவுக்கு கிடைத்த பிடிப்பு இன்றில்லை. கிழக்கு மாநிலங்களில் சொல்லவே வேண்டாம். பல மாநிலங்களில் பாஜகவுக்கு அமைப்புகள் கூட இல்லை.

இரக்கப்பட்டு கொஞ்சம் தாராளமாகவே பாஜகவுக்கு இடம் கொடுத்தோமானால் கூட என்ன செய்தாலும் நூற்றி ஐம்பதை நெருங்குவதற்குள்ளாகவே நாக்கு தள்ளிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்கையில் மோடியை பிரதமர் ஆக்க தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கப் போகும் மக்கள் அமெரிக்காவிலிருந்தும், ஆகாயத்திலிருந்தும் குதிக்கப் போகிறார்களா... பாஜக எனும் ஓட்டைப்படகை வைத்துக்கொண்டு மோடியால் எப்படி கரைசேர முடியும்? இவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் கூட காங்கிரஸ் மீதான கோபத்தால் பாஜகவுக்கு கொஞ்சம் கூடுதல் சீட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதின் மூலம் தேர்தலுக்கு முன்பாகவே பதினைந்து சதவிகித சிறுபான்மை வாக்குகளை இழக்கும் ரிஸ்க்கை பாஜக எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.














No comments: