Friday, November 15, 2013

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

பாவையை விட்டு வந்து
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!
விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்

மடையென திறக்கும் கண்ணீர்
..மனத்தினில் கொதிக்கும் செந்நீர்
உடைந்திடும் இளமைக் கட்டும்
..உடையினில் வேடம் மட்டும்!
வாயினைக் கட்டிப் பூட்டி
…வயிற்றினைப் பசியால் வாட்டி
காயமும் தாங்கிக் கொண்டு
…கயிற்றினில் தொங்கிக் கொண்டு
தாயகத் தேவை ஆசை
..தீர்ப்பது எங்கள் காசே
மாயமாம் இந்த மோகம்
…மடியுமோ இந்த வேகம்?
வாடிய பயிராய் வாழ்க்கை..
…வளமுள காசின் சேர்க்கை
தேடிய செல்வம் தீரும்
..தேவையோ நாளும் ஊறும்
 ஓடியே களைத்து மீண்டும்
…ஓடவே நம்மைத் தூண்டும்
ஓடிடும் விலையின் ஏற்றம்
..ஓட்டுமே ஊரை விட்டும்
ஒட்டகம் போல நாங்கள்
  ஓய்விலாச்  சுமைகள் தாங்க
ஒட்டகம் மேயும் நாட்டில்
..உழைப்பதைச் சொன்னேன் பாட்டில்
பெட்டகம் நிறைய வில்லை
…பெரிதினும் பெரிதாய் இங்கே
கட்டிடம் கட்டும் வேலை
….கரணமும் விட்டால் மேலே!

'கவியன்பன்' கலாம்


 இனிய குரலில் ஜாஃபர் பாடிய காணொளி :
நன்றி : http://nijampage.blogspot.in/

No comments: