Saturday, November 23, 2013

’’உங்களுக்கு என்ன ஃபோட்டோ எடுக்கணுமா?’’

ஃபோட்டோ லேமினேட் செய்வதற்காக ஸ்டுடியோ சென்றிருந்தேன்... ஒரு பெண்மணி வேகமாக உள்ளே வந்தார்... ‘’நல்ல வேளையா இங்க ஸ்டுடியோ ஆரம்பிச்சேள்... ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவும், மாவு மில்லும் தான் இந்த ஏரியாவில இல்லாம இருந்தது... நீங்க அப்படியே ஒரு மாவுமில்லும் பக்கத்துல போட்டுருங்கோளேன்’’.. ஸ்டுடியோகாரர் திருதிருவென முழித்தார்...

’’உங்களுக்கு என்ன ஃபோட்டோ எடுக்கணுமா?’’

‘’நான் என்னிக்கு ஃபோட்டோ எடுத்தேன்.. சும்மா சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.. சொன்னதை யோசிங்கோ’’ என சொல்லி விட்டு வேகமாக போய் விட்டார்... அந்தப் பெண் வந்ததையும், அந்த மாடுலேஷனையும் நினைத்து இப்போதுவரை சிரித்துக் கொண்டிருக்கிறேன்..


அப்புறம்.. பக்கத்தில் வழக்கமாக செல்லும் மெடிக்கல் ஷாப் சென்றேன்.. அவர் கேரளாவைச் சேர்ந்தவர்.. மிக நல்லவர் (தனியா வேற சொல்லணுமா?)... எப்போது சென்றாலும் அரைமணி நேரமாவது ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பார்... பெரும்பாலும் நாம் கேட்கும் மருந்துகள் அவரிடம் இருப்பதில்லை.. ஆனாலும் ஒவ்வொரு தடவையும் அவரிடம் கேட்டு, அவர் இல்லையென்று சொன்னால்தான் ஒரு சமாதானம்..

இன்றும் கேட்ட மருந்து அவரிடம் இல்லை... மாற்றாக, சில நாட்டு வைத்திய முறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

’’இதெல்லாம் சாப்பிட்டுங்க.. நாளைக்கு பாருங்க.’’

‘’சரியாப் போயிடுமா?’’

‘’ நாளைக்கு தான் நீ கேட்ட மருந்தை வாங்கி வைச்சிருவேன் இல்ல? ‘’

வழக்கம் போல் அரசியல், சினிமா எல்லாம் பேசி... வலியோடும், எரிச்சலோடு உள்ளே சென்று ஃப்ரஷ் மனதோடு வெளியே வந்தேன்.. அவர் வாங்கி வைக்கும் வரை அந்த மருந்தை நான் வேறு எங்கும் வாங்கப் போவதில்லை

சாலிகிராமத்தில் ஒரு நண்பரை சந்திக்க ஆட்டோவில் சென்றேன்.. அது ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம்.. ஆட்டோ டிரைவரை காத்திருக்க சொல்லி விட்டு, மீண்டும் ஆட்டோவில் ஏறினால், அவர் பேச ஆரம்பித்தார்.

‘’சினிமாவில் யார்கிட்டயாவது சொல்லி ஒரு சான்ஸ் வாங்கிக் குடுங்க’’

‘’இல்லைங்க அந்த அளவுக்கு எனக்கு யாரையும் தெரியாது’’

‘’ஆள் பார்க்க இப்படி இருக்கானேன்னு நினைக்காதீங்க... வடிவேலுவும், ரஜினியும் மூஞ்சியை வைச்சிட்டா முன்னாடி வந்தாங்க.. நடிக்கணும்னு 87 ல மெட்ராஸ் வந்தேன். எங்கப்பன் தான் தங்கச்சிங்க கல்யாணம்னு உருப்படியா சான்ஸ் தேட விடலை.. அந்தப் பாவி தான் கல்யாணமும் பண்ணி வைச்சிட்டு போய்ச் சேர்ந்துட்டான்..’’ என ஆரம்பித்து விதவிதமாக பல நடிகர்களை போல் பேசிக் காட்டினார்..

கடைசியாக அவர் சொன்னது.. ‘’வாழ்க்கை எங்க போயிடப் போகுது.. மகளுக்கு கல்யாணம் மட்டும் பண்ணி வைச்சிட்டு, சினிமாவில் போயிட வேண்டியது தான்.. அதுக்கு மேலயும் பிடிச்சதை செய்யாம எதுக்கு உயிரோட இருக்கணும்’’ அதை அவர் வருத்தமாக, வேதனையாக எல்லாம் இல்லை.. மிக நம்பிக்கையோடு தான் சொன்னார்.. தங்கை கல்யாணத்தில் தொலைத்த லட்சியத்தை மகள் கல்யாணத்திற்கு பிறகு மீட்க நினைக்கும் அவரை ரொம்ப பிடித்துப் போனது...

கொஞ்சம் காதையும், கண்களையும் திறந்து வைத்தால் நம்மைச் சுற்றி எவ்வளவு சுவாரஸ்யமான மனிதர்கள் இருக்கிறார்கள்.. எப்போதும், எங்கேயும் மனதிற்குள்ளேயே படம் ஓட்டிக் கொண்டிருக்கும் எனக்கு நானே இதை சொல்லிக் கொள்கிறேன்.. வீட்டைத் தாண்டினாலே உலகம் நம்பிக்கையோடு கண்முன் விரிந்து கிடக்கிறது... யோசித்துப் பார்த்தால் நம் பிரச்னை, நம் கவலை, அவ நம்பிக்கை என்றெல்லாம் சுருக்கி யோசிக்க ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. — feeling great.


தகவல் தந்தவர்
பிரியா தம்பி  Priya Thambi

No comments: