Sunday, November 24, 2013

வாழ்கை என்னும் பாடம்

வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர்ந்தால் நாக்கு
...........வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல
வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு
........... வீரியமாய்த் தந்திரமும் இணைந்த  தாலே
சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு
..........சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று
கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை!
..........கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை


பல்லுக்குள் அகப்பட்ட நாக்கைப் போலப்
........பக்குவமாய்ச் சுழலுதலே வாழ்க்கை என்போம்
சொல்லுக்கும் செயலுக்கும் வேறு பாடோ
.......சோதனைகள் கொண்டுவரும் முன்னேற் பாடே
வில்லுக்குள் பூட்டிவைத்த அம்பைப் போல
......விவேகத்தைப் பூட்டிவைப்போம் அன்பி னாலே
கல்லுக்குள் மறைந்துள்ளத் தேரை வாழக்
.....கருணையாளன் உணவளித்துக் காப்பா னன்றோ



வாய்கொண்டு விழுங்குகின்ற முயற்சி போல
.........வாழ்க்கையிலும் விடாமுயற்சி இருக்க வேண்டும்
நோய்கொண்டு வாடினாலும் மருந்தை நாடி
.........நோகாமல் சிகிச்சைகள் செய்வோம் தேடி
தாய்கொண்டு வந்தவுடல் அழிவைத் தேடித்
........தானாக மாய்வதற்குக் குழியைத் தோண்டித்
தேய்கின்ற நிலைமைக்கு சைத்தான் நம்மைத்
.......தீண்டுகின்ற சூழ்ச்சிகளை அறிதல் நன்றே!

'கவியன்பன்' கலாம்'
கவியன்பன் கலாமின் கவிதை


என் இந்தப் பாடலை, எங்களூர்ப் பாடகர் சகோதரர் ஜஃபருல்லாஹ் (ஜித்தா) அவர்களின் இனிய குரலில் கேளுங்கள்

வாழ்க்கை பாடம்  வீடியோ

No comments: