Sunday, November 17, 2013

வீட்டுப் பாடம் (home work)

அரிச்சுவடி வகுப்புப் பாடம்;
ஆத்திச்சூடி வீட்டுப் பாடம்

இலகுவான
இரண்டாம் வாய்ப்பாடை
வகுப்பில் படி;
எசகுபிசகான
ஏழாம் வாய்ப்பாடோ
வீட்டுப் பாடம்

வசதியாக
வாய்ப்பாடம் வகுப்பில்;
மெனக்கெடும்
மனப்பாடம் வீட்டில்


இரண்டோடு மூன்றைக் கூட்ட
வகுப்பில் போதனை:
வீட்டுப் பாடத்திலோ
ஏழையும் ஒன்பதையும்
கூட்டச் சொல்லி சோதனை

வகுப்பறையோ
நேரிடையாகக்
கழித்தல் கற்க;
வீட்டுப் பாடத்தில்
கடன் வாங்கிக் கழி

சொச்சமில்லாப் பெருக்கல்கள்
வகுப்புப் பாடம்
ஸ்தானம் மாற்றிப் பெருக்கும்போது
மறவாமல்
சொச்சத்தையும் கூட்டச் சொல்
வீட்டுப் பாடத்தில்

வகுப்பறை வகுத்தல்களில்
ஈவு மட்டுமே விடை;
வீட்டுப் பாடத்தில்
மீதியும் மிஞ்சும்

மூன்று கோணங்களோடு
மூன்று பக்கங்களே முக்கோணம் என்பது
வகுப்புப் பாடம்;
பல டிகிரிகளிலும் சென்ட்டிமீட்டரிலும்
முக்கோணங்கள் செய்ய வேண்டியது
வீட்டுப் பாடத்தில்

புதிய
ஆங்கிலச் சொல்லொன்று
அறிமுகம் செய்வது வகுப்பில்;
அதை
வாக்கியத்தில் அமைப்பதே
வீட்டுப் பாடம்

கோடிட்ட இடங்களை
பாடத்திலிருந்து
குறிப்பெடுத்து நிரப்ப வகுப்புப் பாடம்;
அந்தப்
பாடத்தின் உட்கருத்தை
சுருக்கி வரைக என வீட்டுப் பாடம்

ஏழு வர்ணங்களே வானவில்
வகுப்பரையில் கற்பது;
அதை
வரைந்து வருவதும்
வார்த்து வருவதும்
வீட்டுப் பாடம்.
வானப் பின்னணி
பேணப்படாவிடில்
பத்துக்கு ஒன்பது
மட்டும்தான் கிட்டும்.

உல்லாசமாகச்
சுற்றுலா செல்வது
வகுப்புப் பாடமெனில்;
அதைக் கட்டுரையாக்குவது
வீட்டுப் பாடம்

நாட்குறிப்பேடு என்னும்
ஓலை வழியாக
பெற்றோருக்குச் சுமையாக
வீட்டுப் பாடத் திட்டங்கள்

அடிப்படைகளை வேண்டுமானால்
வீட்டுப் பாடமாக்குங்கள்
அதற்குமேற்கொண்டு
ஐயன்மாரே
எங்களை வதைக்காமல்
வகுப்பில் நடத்துங்கள்!

வீட்டுக்கு ஓர் ஆசான்
Source : http://adirainirubar.blogspot.in/

No comments: