Wednesday, December 18, 2013

உணவும் உபசரிப்பும் நானும்.....


காற்றைப்போல நீரைப்போல உணவு என்பதும் உயிர்வாழ்வதற்கான ஒரு ஆதாரம்தான் எனினும்
உணவோடு கலந்த உபசரிப்பும்,காலநிலைக்கேற்ற உணவும் நிலப்பரப்புக்கேற்ற உணவும்,
என உணவு ஒரு கலாச்சாரச் சின்னமாகவே மாறிவிட்டது.

கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் யார் வீட்டுக்கு வந்தாலும்
முதன்முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பது வழக்கம்,அத்துடன் வசதிக்கேற்ப நீர்மோர் அல்லதுபழரசம்
அளிப்பதுடன் வீட்டு உறுப்பினர் அனைவரும் வந்து இன்முகத்தோடு வணக்கம் வைத்துவிட்டுச் செல்வார்கள்.
மிகுந்த மனமகிழ்ச்சி அளிக்கும் உபசரிப்பு இது.

ஆனால் எல்லா பகுதிகளிலும் ஒரேமாதிரியான உபசரிப்பும் விருந்தோம்பலும் இருந்ததில்லை,
கோவையில் கிடைக்கும் உபசரிப்பை கன்னியாகுமரியில் எதிர்பார்க்கவியலாது.

நன் முதன்முதலில் கன்யாகுமரி மாவட்டம் களியக்காவிளையருகே
(1992 வாக்கில்)
பரணியறத்தலவிளை என்னும் கிராமத்தில் இருந்த கேப்பியார் என்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்த
நண்பர் புஷ்பராஜை சந்திக்க திருப்பூர் நண்பர் தங்கவேலுடன் சென்றிருந்தேன். பஸ்வசதி அவ்வளவாக இல்லாத நேரத்தில்
வாடகை சைக்கிளில் பயணிக்கப் பரிந்துரைத்தனர் அங்கு வழிவிசாரிக்கச் சென்ற இடத்தில் சிலர்.

சரியென்று அங்கு அருகிலிருந்த வாடகை சைக்கிள் கடையில் சைக்கிள் கேட்க,
அவரோ முன்னபின்ன தெரியாத ஆட்களுக்கெல்லாம் சைக்கிள்தர முடியாதென மறுத்துவிட்டார்.
நீண்ட கோரிக்கை வற்புறுத்தல் மற்றும் கெஞ்சல்களுக்குப் பிறகு நண்பரின் டைடன் வாட்ச்சை
பிணையாக வைத்துக்கொண்டு ஒருவழியாக சைக்கிளைத் தந்தருளினார்.

ஒரு ஐந்தாறு கிலோமீட்டர்கள் இருக்கக்கூடும்,
கண்டுபிடித்தோம் ஒருவழியாக புஷ்பராஜை.
எளிய விவசாயக் குடும்பம் அது, இலக்கிய ஆர்வம் யாரைவிட்டு வைத்தது...
புஷ்பராஜ் சிற்றிதழ் இலக்கியச் சண்டைகளில் மிகுந்த ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தார்.
வீடடைந்ததும் ஸ்ட்ரைட்டாக இலக்கிய கிசுகிசுக்கள் மற்றும் சச்சரவுகளில் நானும் புஷ்பராஜும் மூழ்கிப்போக,
உடன் வந்திருந்த நண்பர் தங்கவேலோ
"ங்கோவ்,என்னுங்கோவ்..." என்று நோண்டிக்கொண்டிருந்தார் என்னை,
"ஏங்க", என்று செவிமடுத்தபோது சொன்னார்,
"ஏனுங்க,தண்ணி கொஞ்சம் குடிக்கறதுக்கு..." என்று.
அப்போதுதான் எனக்கும் உறைத்தது, தண்ணீர்கூட கொடுக்காமல் விருந்தாளிகளை உபசரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.

நான் சூழலை கலகப்பாக்க,
"நம்ம புஷ்பராஜ் வீடுதானங்க,நம்ம வீடு மாதிரித்தான் இதுவும்,
பேச்சு மும்மரத்துல கேக்க மறந்துட்டாப்ல..
கொஞ்சம் தண்ணி கொடுங்க புஷ்பராஜ்"
என்று கேட்டேன்.
பின்பு தண்ணீர் டீ எல்லாம் குடித்துவிட்டு சாப்பிட்டதாகவும் நினைவு.
விடைபெற்றுக்கொண்டு வந்த பிறகு நண்பர் தங்கவேல்தான் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்...

"ஏனுங்,இத்தன தூரம் சிரமப்பட்டு சைக்கிள் மிதிச்சு வந்துருக்கோம்,
வூட்டுக்கு வர்ர விருந்தாளிக்கு தண்ணி கொடுக்கோணும்ங்கற நெனப்புகூட இல்ல பாருங்..
ஏனுங்..செளக்கியமான்னு கேட்டா செளக்கியம்,நீங்க செளக்கியமான்னு கேக்கறதுதானங் நம்ம வழக்கம்,
அந்தாளு என்னடான்னா "ஆமா"ன்னு மொட்டையா சொல்றாரு...
என்னமோ போங்க..." என்று கடைசி வரை.

‪#‎சாப்பிட்டீங்களா‬ என்று கேட்டால் சாப்பிட்டேங்க,நீங்க சாப்பிட்டீங்களா..
கொஞ்சம் சாப்புடுங்களேன்...என்று சொல்லும் கோவை வழக்கத்தை எதிர்பார்த்திருந்த நண்பர் தங்கவேலுக்கு
எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது அந்த எளிமையான உபசரிப்புப் பழக்கம்....!!

-நிஷா மன்சூர்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ங்க... ங்க... ரசிக்கலாம்...

வாழ்த்துக்கள்...