Friday, December 6, 2013

வெகுஜன எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன்தான்...

 வெகுஜன எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன்தான் பலரும் பத்திரிகைகளில் வேலைக்கு சேர்கிறார்கள். ஆனால், அந்தக் கனவு பெரும்பாலானவர்களுக்கு மெய்ப்படுவதில்லை. சிலருக்கு மட்டுமே அவர்கள் பணிபுரியும் பத்திரிகைகளில் எழுத வாய்ப்பு கிடைக்கிறது. அது கூட சிறுகதைகள் என்ற அளவில்தான். இதுவும் கூட எப்போதாவதுதான் அரங்கேறும்.தொடர்கதை எழுதும் சான்ஸ் கிடைப்பது குறிஞ்சி மலர் பூப்பதைவிட அபூர்வமானது.

 இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. கல்கி, தேவன் ஆகியோர் ‘ஆனந்த விகடன்’ இதழில் பணிபுரிந்தபோது ஏராளமான தொடர்கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால், இவர்களுடன் அந்த இதழ்களில் பணிபுரிந்த எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது? எவ்வளவு யோசித்தும் விடை கிடைக்கவில்லை. நிச்சயம் திறமையும், எழுத்தாற்றலும் மிக்க சிலர் சமகாலத்தில் இவர்களுடன் பணிபுரிந்திருப்பார்கள். ஆனால், பிரசுர சாத்தியம் இல்லாமல் போனதாலேயே அவர்களது பெயர் கூட யார் நினைவிலும் இன்று இல்லாமல் போய்விட்டது.


 அதே ‘ஆனந்த விகடன்’ இதழில் மணியன் ஏராளமான தொடர்களை எழுதியிருக்கிறார். ஆனால், மணியனுடன் பணிபுரிந்த தாமரை மணாளன் உட்பட பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை. அல்லது அவர் அளவுக்கு கிட்டவில்லை.

 எஸ்விஆர் என்கிற புவனேஸ்வரி என்கிற முகுந்தன் என்கிற எஸ்.வரதராஜன், கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் விகடனில் பணிபுரிந்தவர். ‘சாவி’யின் சம காலத்தவர். பல பெயர்களில் சிறுகதைகளை அவ்வப்போது எழுதியிருக்கிறார். ஆனால், தொடர்கதை..?

 இவரது இறுதி ஆறு ஆண்டுகளில் இவருக்கு துணையாக இருந்தேன். வாரம்தோறும் சனிக்கிழமை மாலை சந்திக்கச் செல்வேன். எனக்காகவே காத்திருப்பார். பேசுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் அவ்வளவு விஷயங்கள் இவருக்கு இருந்தன. ‘ஏன் சார் எந்த தொடரும் எழுதலை..?’ என்று கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் கைகள் நடுங்க, கண்களில் கருமணிகள் தத்தளிக்க என் கரத்தை முகுந்தன் பற்றிய நொடி, இப்போதும் நினைவில் இருக்கிறது.

 23 ஆண்டுகள் ‘கல்கி’ இதழில் கெளசிகன் துணையாசிரியராக பணியாற்றினார். ‘வாண்டுமாமா’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக அவரால் நிறைய எழுத முடிந்தது. ஆனால், ‘கெளசிகன்’ என்ற பெயரில்  இரண்டே இரண்டு தொடர்களை மட்டுமே, தான் பணிபுரிந்த இதழில் அவரால் எழுத முடிந்தது. ஒவ்வொரு முறையும் எப்படி வாய்ப்பு வந்து இறுதிநேரத்தில் நழுவியது என்பதை ‘எதிர் நீச்சல்’ என்கிற தன் சுயசரிதையில் விவரித்திருக்கிறார். படிக்கும்போது கண்களில் இருந்து ரத்தம் கசியும்.

 ரா.கி.ரங்கராஜன், ‘குமுதம்’ இதழில் கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் பணிபுரிந்தார். சரித்திர தொடர் எழுத வேண்டும் என்பது அவரது கனவு. அதற்காக நிறைய நூல்களை படித்து குறிப்புகளையும் திரட்டி வைத்திருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு அவருக்கு இரண்டே இரண்டு முறைதான் கிடைத்தது. அதற்கு கூட சந்தர்ப்பம்தான் காரணமாக அமைந்தது.

 ’கன்னி மாடம்’, ‘மன்னன் மகள்’, ‘யவன ராணி’, ‘கடல் புறா’ என தொடர்ச்சியாக மெகா ஹிட் நாவல்களை கொடுத்த சாண்டில்யன், அடுத்த தொடரை ஆறு மாதங்களுக்கு பிறகு எழுதுவதாக சொன்னார். அந்த இடைப்பட்ட காலத்தில்தான் ‘வாளின் முத்தம்’ என்ற தொடரை ரா.கி.ரங்கராஜனால் ‘குமுதம்’ இதழில் எழுத முடிந்தது. அதே போல் 70களின் இறுதியில் அல்லது 80களின் தொடக்கத்தில் சில கருத்து வேறுபாட்டால் ‘குமுதம்’ நிர்வாகத்தை விட்டு பிரிந்த சாண்டில்யன், ‘கமலம்’ என்னும் வார இதழுக்கு ஆசிரியரானார். அப்போதுதான் ரா.கி.ர.வுக்கு இரண்டாவது சரித்திர நாவலை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் ‘அடிமையின் காதல்’. இதைக் கூட ‘மோகினி’ என்னும் புனைப்பெயரில்தான் எழுதினார். இந்தத் தொடர் முடிவதற்குள் சாண்டியல்யன் சமாதானக் கொடியுடன் ’கமலம்’ இதழை மூடிவிட்டு வந்து விட்டார். ’குமுதம்’ இதழில் ஜாம் ஜாம் என்று ‘விஜய மகாதேவி’யையும் ஆரம்பித்துவிட்டார். இதனால், தன் கனவுப் படைப்பான ‘நான் கிருஷ்ணதேவராயன்’ தொடரை ரா.கி.ர.வால் ‘குமுதம்’ இதழில் இறுதி வரை எழுத முடியாமலேயே போய்விட்டது.

 ‘எனக்கு பக்கபலமாக இரு மலைகள் இருக்கின்றன...’ என்று அடிக்கடி நா.பார்த்தசாரதி குறிப்பிடுவார். அவரது ‘தீபம்’ இலக்கிய இதழை இறுதிவரை உடனிருந்து நடத்தியவர்கள் அந்த இரு மலைகள்தான். அதில் ஒரு மலை, திருமலை. இன்னொருவர், கைலாசம்.

 இதில் கைலாசம், எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர். ‘தீபம்’ இதழுக்கு பின், ‘இதயம் பேசுகிறது’ இதழில் பிழை திருத்துபவராக சேர்ந்தார். அப்போதுதான் ‘ஆனந்த விகடன்’ பொன்விழா நாவல் போட்டியை நடத்தியது. அதில் கலந்து கொண்டு சரித்திர நாவல் ஒன்றை எழுதினார். பரிசு மு.மேத்தாவுக்கு சென்றது. ஆனாலும் கைலாசத்தின் நாவல் சிறப்பாக இருக்கிறது என்று ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் கருதியதால், அதை ‘ஆனந்த விகடனி’ல் வெளியிட்டார்.

 ஆராவாரத்துடன் அந்தத் தொடர் வெளியாவதாக அறிவிப்பும், போஸ்டரும் ஒட்டப்பட்டது. அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து மணியன் திரும்பிக் கொண்டிருந்தார். மீனம்பாக்கம் ஏர்போர்டில் இருந்து காரில் வந்தவரின் கண்களில் அந்தப் போஸ்டர் பட்டது. ‘படுபாவி... இது நம்ம கைலாசம் இல்லையா? சரித்திர தொடர் எல்லாம் எழுதுவானா? எனக்கு தெரியவே தெரியாதே...’ என ஆச்சர்யத்தில் அவர் கண்கள் விரிந்தன. உடனே அலுவலகம் வந்தவர், கைலாசத்தை அழைத்து ‘நம்ம பத்திரிகைலயும் ஒரு தொடர் எழுது...’ என்றார்.

 அந்த கைலாசம்தான் கெளதம நீலாம்பரன். ‘ஆனந்த விகடனில்’ வந்த இவரது தொடர், ‘சேது பந்தனம்’. இதனையடுத்து ‘இதயம் பேசுகிறது’ இதழில் இவர் எழுதிய தொடர்தான் ‘நிலா முற்றம்’.

 இதன் பிறகு கெளதம நீலாம்பரன் நிறைய சரித்திர தொடர்களை எழுதிவிட்டார்.

 ஆனால் -

 அவற்றில் 98% இவர் பணிபுரிந்த இதழ்களில் எழுதப்பட்டவை அல்ல. மற்ற பத்திரிகைகளில்தான் இவருக்கு எழுத வாய்ப்பு கிடைத்தது...

 இதுமாதிரி எண்ணற்ற உதாரணங்களை சொல்ல முடியும். பல்சுவை இதழ்களில் பணிபுரிந்தும் வெகுஜன எழுத்தாளர் ஆகும் கனவு நிறைவேறாமலேயே போனவர்களை பட்டியலிட முடியும்.

இதுவொரு வகை என்றால் -

 பல்சுவை இதழ்களாக இல்லாமல் வேறு கல்வி - இளைஞர்கள் - பெண்களுக்காக நடத்தப்படும் பத்திரிகைகளில் வேறு வழியின்றி பணிக்கு சேரும் எழுத்தாளர் கனவுடன் இருப்பவர்களின் நிலை வேறு வகை.

 ஒருவகையில் இவர்கள்  தங்கள் வாழ்நாளில் இவர்களால் விரல்விட்டு எண்ணக் கூடிய சிறுகதைகளை கூட எழுத முடியுமா என்பது சந்தேகமே. அப்படியே எழுதினாலும் பிரசுரத்துக்கு மற்ற பத்திரிகைகளைத்தான் நாட வேண்டும். இதற்கு பணிபுரியும் நிர்வாகம் அனுமதிக்குமா, ஆசிரியர் சம்மதிப்பாரா... என்ற கேள்வி பூதாகரமாக எழும். இதனாலேயே எழுத்தாளர் கனவை ஆசிட் ஊற்றி பொசுக்கிவிட்டு மவுனமாக இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள்.

 அதற்காக பத்திரிகைகளில் பணிபுரியாமல் வெளியில் இருந்து எழுதுபவர்கள் பாக்கியவான்கள் என்று அர்த்தமில்லை. சபிக்கப்பட்டவர்களின் இன்னொரு வடிவம்தான் இவர்களும்.

 எழுதும் சிறுகதைகளை பிரசுரிக்க பத்திரிகைகளின் கதவை தட்ட வேண்டும். பல அடுக்குகளை கடக்க வேண்டும். தப்பித்தவறி ஒரு கதை பிரசுரமானாலும் அடுத்த கதை அச்சில் வர ஆறு மாதங்களாகும். அதற்குள் இன்னொரு பத்திரிகைக்கு செல்ல வேண்டும். செல்லும் இதழ், முந்தைய பத்திரிகைக்கு ‘எதிரி’யாக இருந்தால் அவ்வளவுதான். லேசாக திறந்த முந்தைய கதவும் மூடிவிடும்.

சிறுகதைக்கே இந்த நிலை என்றால், தொடர்கதை குறித்து நினைத்துப் பாருங்கள். அவ்வளவு சுலபத்தில் வாய்ப்பு கிடைத்துவிடாது. அப்படியே தத்தித்தத்தி தொடர்கதைகள் எழுதி பெயர் வாங்கிவிட்டாலும் அவை அவ்வளவு சுலபத்தில் நூல் வடிவம் பெறாது.

 சமீபத்தில் புஷ்பா தங்கதுரை மறைந்தபோது அவர் 2 ஆயிரம் நாவல்களை எழுதினார் என்ற குறிப்பை பலரும் நம்ப மறுத்து முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டது நினைவில் இருக்கலாம். அதை தவறு என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் அவரது 90% நாவல்கள் நூலாக வரவேயில்லை. எனவே நிரூபிப்பதும் கடினம்.

 இதேநிலைதான் ராஜேந்திர குமார், மகரிஷி, பிவிஆர், ஹேமா ஆனந்ததீர்த்தன், அழகாபுரி அழகப்பன், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, அனுராதா ரமணன் உள்ளிட்டவர்களுக்கும். இவர்கள் எத்தனை சிறுகதைகள், நாவல்கள் எழுதியிருக்கிறார்கள்... அவற்றில் எத்தனை நூல் வடிவம் பெற்றிருக்கின்றன என்று கேட்டுப் பாருங்கள். அதிர்ச்சியான பதிலே கிடைக்கும்.

 இப்படி தெரிந்த வெகுஜன எழுத்தாளர்களை விட்டுவிடுவோம். முகம் தெரியாத எத்தனை பேர் சிறப்பான நாவல்களை எழுதி வைத்துக் கொண்டு பிரசுர வாய்ப்புக்காக நாயாய் அலைகிறார்கள் தெரியுமா? இவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைத்தால் பெயர் பெற்றவர்களை விட பிரமாதமாக பெயர் எடுத்துவிடுவார்கள்.

 ஆனால், வாய்ப்பு கிடைப்பதுதான் குதிரை கொம்பாக இருக்கிறது.

வயிற்றுப் பிழைப்புக்காக மாதம்தோறும் ’மூன்றாம் தர’ நாவல்களை ஒருவர் எழுதி வந்தார். அவரால் இப்படி ‘கேடுகெட்ட’ நாவல்களைத்தான் எழுத முடியும் என்றே பலரும் நம்பினார்கள்.

 அந்த நேரம் பார்த்துத்தான் ‘ஆனந்த விகடன்’ இதழ், வெள்ளிவிழாவை ஒட்டி நாவல் போட்டி ஒன்றை அறிவித்தது. சரித்திர பிரிவில் கலந்து கொண்டு அவர் நாவல் ஒன்றை எழுதி அனுப்பினார்.

 முதல் பரிசு அவருக்கே கிடைத்தது. அறிவிப்பு வெளியானபோது ஒருவராலும் நம்ப முடியவில்லை. ‘அவரா இவர்?’ என்றுதான் வாய் பிளந்தார்கள். அதன் பிறகு அந்த எழுத்தாளரின் வாழ்க்கையே உயர்தரமாக மாறிவிட்டது.

 அவர்தான் ஜெகசிற்பியன். ‘விகடனில்’ பரிசு பெற்ற அந்த சரித்திர நாவல் ‘திருச்சிற்றம்பலம்’.

 இந்த வாய்ப்பு மட்டும் கிடைக்காவிட்டால் ஜெகசிற்பியன் என்னும் எழுத்தாளரே நமக்கு கிடைத்திருக்க மாட்டார். ‘மகரயாழ் மங்கை’, ‘பத்தினிக் கோட்டம்’ உள்ளிட்ட நாவல்களும் நமக்கு கிடைத்திருக்காது.

 இவையெல்லாமே சில எடுத்துக்காட்டுகள்தான். இப்படி ரத்தமும் சதையுமான பல நிகழ்வுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். எழுத்தாளர் கனவை குழிதோன்றி புதைத்துவிட்டு அலுவலக குமாஸ்தாவுக்கு சமமாக பத்திரிகைகளில் பணிபுரிந்தவர்களும், பணிபுரிபவர்களும், பணிபுரியப் போகிறவர்களும்தான் அநேகம்.

 இவர்களுக்கு இலக்கியச் சூழலில் அங்கீகாரமும் கிடையாது. ‘காட்டுமிராண்டி’களைப் போல் பார்க்கப்படுவதை தங்கள் வாழ்நாள் எல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

 கமர்ஷியல் படைப்புகளின் ஆயுள் குறைவுதான். சில வருடங்கள் கூட தாங்காத எழுத்துகள்தான். ஆனால், அந்தந்த காலத்தின் கண்ணாடியாக வெகுஜன இலக்கியங்களே இருக்கின்றன என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

 உதாரணம், ராஜேந்திர குமாரின் ‘வால்கள்’. அந்த காலகட்டத்து பள்ளி மாணவ - மாணவியரின் வாழ்க்கையை புரிந்து கொள்ள ‘வால்கள்’ அளவுக்கு வேறு எந்த படைப்பும் வாசலை திறந்து வைத்திருக்கவில்லை.

 பரத் - சுசீலா நாவல்கள் வெறும் த்ரில்லர் மட்டுமே அல்ல. சுசீலாவின் பனியன் வாசகங்கள் வெறும் ‘எராடிக்’ தன்மைகொண்டதும் அல்ல. 1980 - 90களி வாழ்ந்த இளைஞர்களின் மன இயல்பை பிரதிபலிப்பை. அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள் என்பதை விளக்குபவை.

 இதையெல்லாம் புரிந்து கொள்ள மறுப்பது உண்மையில் சமூக ஆய்வுக்கு செய்யும் துரோகமல்லவா?

        இப்படி பல விஷயங்கள் துண்டுத் துண்டாகவும், கோர்வையாகவும் நெஞ்சில் முட்டி மோதுகின்றன.

கருகிய கனவுகளும், அனலாக வடியும் கண்ணீர்த் துளிகளும், சிதையாக மாறிப் போன சதைப் பிண்டங்களும் மலையாக குவிந்திருக்கும் -

வரலாற்று பின்புலத்தின் மீது அமர்ந்தபடிதான் ‘கர்ணனின் கவசம்’ தொடரை 39 வாரங்கள் ’குங்குமம்’ வார இதழில் எழுதி முடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது குற்ற உணர்வே தலைதூக்குகிறது.

 நான் யார்? சாதாரணமானவன். நுனிப்புல் மேய்பவன். எதுவும் முழுமையாக தெரியாது. ஆனால், எல்லாம் தெரிந்ததுபோல் பாவனை செய்பவன். கொஞ்சம் எழுதத் தெரியும். அதைத் தாண்டி ஜீரோதான்.

 என்னை விட திறமைசாலிகள், பல விஷயங்களில் வல்லுனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பிரமாதமாக எழுதக் கூடியவர்களும் கூட என்பதுதான் முக்கியம். முகநூலிலேயே அப்படிப்பட்ட சிலர் இருக்கிறார்கள். இணையத் தொடர்பு இன்றி பலர் வெளியில் இருக்கிறார்கள்.

 அவ்வளவு ஏன், நான் பணிபுரியும் ‘தினகரன்’ குழுமத்திலேயே எத்தனை வெகுஜன எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? வாக்கிய நடையும், சொற் பிரயோகமும், வாசிப்பு மேன்மையும் என்னைவிட பல மடங்கு கொண்டவர்கள் அவர்கள்.

 ஆனால், அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தது; கிடைத்திருக்கிறது.

 எங்கள் எம்.டி. திரு. ஆர்.எம்.ரமேஷும், ‘குங்குமம்’ இதழின் முதன்மை ஆசிரியர் தி.முருகனும் என்னை நம்பி இந்த அரிய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அதுவும் வாரம்தோறும் எட்டுப் பக்கங்கள் என்ற கணக்கில் நாற்பது வாரங்கள்.
 நினைக்கும்போதே நன்றி உணர்வில் கண்கள் கசிகின்றன. இனம்புரியாத பல அலைகள் எழும்பி ஆக்ரோஷத்துடன் கரையில் மோதுகின்றன.

 அதுவும் ‘தொடர்கதை’ என்னும் விஷயமே வெகுஜன இதழ்களில் மறைந்துவிட்ட காலத்தில் இப்படியொரு முயற்சியை அவர்கள் மேற்கொண்டது சாதாரண விஷயமில்லை.

 வெளியில் எத்தனையோ பிரபல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எழுதியிருந்தால் ஒருவேளை விற்பனையும் கூடியிருக்கலாம்.

 அதையெல்லாம் தவிர்த்துவிட்டு தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஓர் ஊழியனையே தொடர் எழுத வைத்தது பெரிய விஷயம். வெகுஜன பத்திரிகை வரலாற்றில் அபூர்வமான நிகழ்வும் கூட.

 இதற்கெல்லாம் நான் தகுதியானவனா?

கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தி இருக்கிறேனா?

 தெரியவில்லை.

 நாளை இரவு இறுதி அத்தியாயமான 40வது சேப்டரை எழுத வேண்டும்.

 கனவுகளை தேடி புறப்பட்டு வாழ்க்கையை தொலைத்த என் மூதாதையர்கள் அதற்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

 படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் நன்றி.

 தொடருக்கு மட்டுமல்ல இந்த இடுகைக்கும் அது பொருந்தும்.


by கே. என். சிவராமன்
Started Working at Chief Editor at Dinakaran Magazines

No comments: