Tuesday, December 24, 2013

இளமைப் பருவம்

இஃதொரு
பைத்தியக்காரப் பருவம்.

கெட்டதை நல்லதாகவும்
நல்லதைக் கெட்டதாகவும்
கற்பனை செய்து காட்டும்.

வேகமிருக்கும்
விவேகமிருக்காது.

மூத்தோரின்
மூதுரைகளெல்லாம்
மூளையில் ஏறாது.

தான் எடுத்த முடிவே
சரியானதென
வாதிக்கும்.

கற்பனையில் பல
அற்புதங்களைக் காட்டும்.
ஆனால்-அவையோ
நிகழ்வுக்கு ஒத்துவரா.

யுவன் யுவதியையும்
யுவதி யுவனையும்
யூகத்தில் தேர்ந்தெடுப்பர்;
தேகத்தைக் காதலிப்பர்.
கலியுகத்தில் அது
காணாமல் போய்விடும்.

ஈருடல்கள் இடையே
ஈர்ப்பு ஏற்படும்.
இனக்கவர்ச்சியால்
இனம்புரியாத
காதல் ஏற்படும்!

உடம்பைக் காதலிக்கும்
மடமைப் பருவமிது.

இது
காந்தம் போன்றது.
யாராகிலும் ஒருத்தியை
ஈர்த்துக் கொள்ளவே
துடிக்கும்; விரும்பும்.

இருவருக்கும் இடையே
பொருத்தம் பார்க்காது.
விரும்பும் உள்ளங்கள்
நெருங்கிடத் துடிக்கும்.
நெருப்பாகப் பெற்றோர்
குறுக்கிடும்போது
வருத்தம் மிகும்.

உற்றார் உறவினர்
பெற்றோர் மற்றோர்
யாவரையும்-உடனே
உதறிடத் துணியும்.

உறவுகள் முறித்தும்
உயிரினைப் பறித்தும்
உரியவள் அவளை
அடைந்திடத் துடிக்கும்.

பாவையை அடைந்திட
அவள் கரம் பற்றிட
யாவையும் துறக்கத்
துணிவைக் கொடுக்கும்.
யாரையும் எதிர்த்திடத்
துணிச்சலைக் கொடுக்கும்.

யாவையும் துறந்து
பாவையை அடைந்து
சின்னாட்கள் அவளுடன்
சல்லாபம் கொண்டபின்
பாவை அவளோ
பாகற்காயாய்க் கசப்பாள்.

இருவருக்குமிடையே
அருவருப்பு அரும்பும்.
சிறுசிறு பிழையும்
பெரிதாய்த் தெரியும்.

பொறுத்திட முடியாமல்
வெறுத்திடத் தூண்டும்.
பிரிந்துவிடுவதே
சரியெனத் தோன்றும்.

முதியோர் கூற்றை
மதியாதார் வாழ்க்கை
பட்ட மரம்போல்
பட்டெனச் சாயும்.

 by ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பாகவி (சென்னை)
நன்றி:: http://hadibaquaviar.blogspot.com

No comments: