Thursday, January 2, 2014

அட்வான்ஸ் வாழ்த்துகள் கதிர் சார்...

ம்ஹும். இது நீங்கள் நினைப்பதற்கான வாழ்த்து அல்ல. ஏனெனில் கதிர் சார் குறித்து பலவிதமான வதந்திகள் இப்போது இணையத்திலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் உலவிக் கொண்டிருக்கின்றன. ‘அந்த’ செய்திகள் எதையும் இங்கு ஆராயப்போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

பதிலாக நாளையுடன் (03.01.2014) அவருக்கு 58 வயது முடியப் போகிறது. இன்னும் சில மணிநேரங்களில் தன் 59வது வயதில் அடியெடுத்து வைக்கப் போகிறார்.

அதற்குத்தான் இந்த வாழ்த்து.

ஏனெனில் அவருக்கும் சரி, தமிழ் நாளிதழ்களுக்கும் சரி, வாசகர்களுக்கும் சரி இந்த 2014ம், அதை தொடர்ந்து வரும் ஆண்டுகளும் மிக மிக முக்கியமானவை. அதற்கும் சேர்த்தேதான் இந்த வாழ்த்து.

அதற்கு முன்னால் கதிர் சார் யார் என்று சொல்லிவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.

ஒருவகையில் இது சங்கடமான விஷயம்தான்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நாளிதழ்களில் / பத்திரிகைகளில் தலைமைப் பொறுப்பில் பணிபுரிந்து வரும் ஒருவரைக் குறித்து இப்போது அறிமுகப்படுத்துவது சூழலின் அவலம்தான்.

ஆனால், இதை அப்படிஎதிர்மறையாக பார்க்க வேண்டியதில்லை. இன்றைய தமிழ் நாளிதழ்களின் அமைப்பையும், வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் மாற்றிய ஒரு மனிதர், என்றுமே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை... தன் பணி பேசப்பட்டால் போதும் என்று வாழ்ந்திருக்கிறார்... வாழ்கிறார்... வாழ்வார் என்று கருதுவதே அவருக்கு செலுத்தும் மரியாதை என்று நினைக்கிறேன்.

இப்போது, அதாவது இந்த நிலைத்தகவல் எழுதப்படும் இந்த நிமிடம் வரை அவர் ‘தினகரன்’ நாளிதழில் CHIEF EDITOR ஆக பணிபுரிந்து வருகிறார்.

இது கடந்த எட்டாண்டுகளின் நிலைதான். அதற்கு முந்தைய 32 ஆண்டுகள் இருக்கிறதே... அது ஒருவகையில் தமிழ்ப் பத்திரிகையுலகின் வரலாற்றுடன் தொடர்புடையது. சொல்லப்போனால் தமிழ்ப் பத்திரிகையுலகின் மறுமலர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது.

‘தினமலர்’ நாளிதழில் அவர் பணிக்கு சேர்ந்தபோது அரும்பு மீசை பருவத்தில் இருந்தார். அது 1970களின் தொடக்கம். அப்போது ‘தினமலர்’ சர்வைவலுக்காக போராடிக் கொண்டிருந்தது. அன்று நம்பர் ஒன் நாளிதழாக விளங்கிய நிறுவனத்துடன் அது நடத்திய பகிரங்க சண்டை அந்தக் கால வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். தவிர பல மாவட்டங்களில் அப்போது ‘தினமலர்’ தன் பதிப்பை தொடங்கியிருக்கவில்லை.

இந்த இக்கட்டான சூழலில் ‘தினமலரின்’ செய்தி ஆசிரியராக பணிக்கு அமர்ந்தவர், முதல்வேளையாக ஆர்வம் கொண்ட இளைஞர்களை நிருபர்களாக சேர்த்தார். ஏற்கனவே பணிபுரிந்து வந்தவர்களில் துடிப்பானவர்களை அந்தந்த பகுதிகளுக்கு செய்தி ஆசிரியராக உயர்த்தினார்.

அப்போது வெறும் எழுத்துக்களாக ’தினமலர்’ காட்சியளிக்கும். அதை ’விஷூவலாக’ மாற்றினார். மரபுரீதியாக தலைப்பு வைப்பதை முடிவுக்கு கொண்டு வந்தார். ‘பல்டி’, ’டமால்’, ‘டுமீல்’, என்பது மாதிரி வெகுஜன மக்களிடம் புழங்கும் சொற்களை நாளிதழின் முதல் பக்கத்தில், அதுவும் எட்டு கால செய்திக்கு தலைப்பாக்கினார்.

யெஸ், இன்றைய ‘தினமலர்’ நாளிதழின் வடிவத்தை உருவாக்கியவர் அவர்தான். எமர்ஜென்சி காலத்தில் நாளிதழை அவர் நடத்தியது குறித்து தனி நூலே வெளியிடலாம்.

எம்ஜிஆர் மறைந்தபோது படங்களின் வழியே அந்த செய்தியை வாசகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது அன்று பரவலாக பேசப்பட்ட விஷயம்.

மெல்ல மெல்ல ‘தினமலரும்’ கிளைகள் பரப்பி பல பதிப்புகளை கடந்தது.

இதற்கிடையில் பேப்பருக்கு தட்டுப்பாடும் வந்துபோனது. எனவே சிங்கிள் ஷீட்டை ‘தினமலருடன்’ கொண்டு வர முடிவு செய்தார்கள். அதாவது 8 பக்கங்கள் என்பதற்கு பதில் 6 பக்கங்கள். 4 பக்கங்கள் இரு கைகளில் பிடிக்கும் விதமாகவும், இரண்டு பக்கங்கள் பேக் டூ பேக் ஆக ஒரே கையில் பிடிக்கும்படியும் அச்சிட முடிவு செய்தார்கள்.

இதை கடுமையாக எதிர்த்தார். இரு கைகளில் விரித்து பேப்பர் படிப்பதுதான் வாசகர்களுக்கு வசதி என்று ஒற்றைக்காலில் நின்றார். ஒவ்வொரு நாளும் பிரிண்டருக்கு உரிமையாளரிடமிருந்து ‘இன்று 6 பக்கங்கள்தான்’ என்று குறிப்பு செல்லும்.

அதைக் குறித்து கவலையே படாமல் 8 பக்கங்களுக்கு செய்திகளை தயாரித்து, வடிவமைத்து அச்சுக்கு அனுப்புவார். ஆசிரியர் சொல்வதை கேட்பதா அல்லது உரிமையாளர் சொல்வதை கேட்பதா என்று பிரிண்டிங் மேனேஜர் குழம்புவார். கடைசியில் ஆசிரியர் சொன்னபடியே கேளுங்கள் என்று உரிமையாளர் பின்வாங்குவார்.

இப்படி பலவகைகளில் ‘தினலரை’ வளர்த்தவர், ஒரு கட்டத்துக்கு பிறகு அதிலிருந்து விலகி ‘சுதேச மித்திரன்’ நாளிதழுக்கு ஆசிரியரானார். அப்போது பிளவுப்பட்ட அதிமுக ஒன்று சேர்ந்த நேரம். ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

அப்போதுதான் தமிழ்ப் பத்திரிகையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக ‘ஜெயலலிதா’ என்ற பெயரை வெறும் ‘ஜெ’ என்று குறிப்பிட்டு தலைப்பு வைத்தார்.

இன்று இந்த சொற் சிக்கனத்தைத்தான் தமிழக பத்திரிகைகள் அனைத்துமே கடைபிடிக்கின்றன. இதை ஆரம்பித்து வைத்தவர் கதிர்சார்தான்.

சில காரணங்களால் ‘சுதேச மித்திரன்’ தன் பயணத்தை முடித்துக் கொண்டது. தனியார் தொலைக்காட்சிகள் அப்போதுதான் தமிழகத்தில் துளிர்விட தொடங்கியிருந்தன. எனவே ஃப்ரீலேன்ஸ் ஆக நிகழ்ச்சி தயாரிக்க ஆரம்பித்தார்.

அந்த நேரம் பார்த்து அப்போது ‘விகடன்’ இணையாசிரியராக இருந்த மதனும், துணையாசிரியராக இருந்த ராவ்வும் அவரை அழைத்து ‘விகடன்’ குழுமத்தில் சேரும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அவரும் சேர்ந்தார். சுபயோக சுபதினத்தில் ‘விகடன் பேப்பரும்’ உதயமானது. அந்த மாலை நாளிதழின் அத்தனை பக்கங்களையும் செதுக்கியவர் கதிர் சார்தான். அதனால்தான் ‘விகடன் பேப்பர்’ மூடப்பட்ட பிறகும் அவரை தங்கள் நிறுவனத்திலேயே பணிபுரியும்படி கேட்டுக் கொண்டார்கள்.

‘ஆனந்த விகடன்’, ‘ஜூனியர் விகடன்’ என சகல இதழ்களிலும் அவரது பங்களிப்பு தொடங்கியது. ‘அவள் விகடன்’ வேறு வடிவில் தொடங்கப்பட்டு விற்பனையில் பெரும் சரிவை கண்ட நேரம் அது.

எனவே அதை தூக்கி நிறுத்தும் பொறுப்பை கதிர் சாரிடம் ஒப்படைத்தார்கள்.

மனிதர் முதல்வேளையாக ’அவள் விகடனின்’ உள்ளடகத்தை தலைகீழாக மாற்றினார். மேல்தட்டு பெண்களுக்கான இதழ் என்னும் தோற்றத்தை அழித்தார். மெல்ல மெல்ல விற்பனையில் அந்த இதழ் முன்னேறியது. ஒரு லட்சம் பிரதிகளை தொட்டதும் ‘அவள் விகடனின்’ ஆசிரியர் பொறுப்பை மா.கா.சிவஞானத்திடம் ஒப்படைத்தார்.

கதிர் சார் அமைத்துத் தந்த பாதையிலேயே சென்ற மா.கா.சி., இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனையாகும் அளவுக்கு ‘அவள் விகடனை’ உயர்த்தினார்.

‘விகடன்’ குழுமத்தின் அனைத்து இதழ்களையும் மேற்பார்வை செய்து வந்த கதிர் சார், ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

இடையில் சிறிது காலம் ‘மெர்க்குரி’ ‘தினமலர்’ நாளிதழின் இணைப்புகளை கவனித்தவர், ‘சன்’ நெட் ஓர்க்’, ‘தினகரன்’ நாளிதழை வாங்கியதும் அதன் CHIEF EDITOR ஆக பதவியில் அமர்ந்தார்.

இதுதான் கதிர் சாரின் இன்றைய தேதி வரையிலான பயணம்.

இதில் நிறைய விடுபடல்கள் இருக்கின்றன. சில விஷயங்களை பொதுவில் பகிர்ந்து கொள்ள முடியாது.

அதில், முதன்மையானது ஒரு பத்திரிகை அதிபருக்கும் அவருக்கும் நடந்த சண்டை. கோர்ட் வழக்கு வரை அது சென்றது.

‘தமிழ்நாட்ல இனி உன்னால எந்தப் பத்திரிகைலயும் வேலை பார்க்க முடியாது. எப்படி நீ வாழறேன்னு நான் பார்க்கறேன்’ என்று அந்த அதிபர் சூளுரைத்தார்.

கடுமையான நிதி நெருக்கடியில் கதிர் சார் தத்தளித்த நேரம் அது. அப்போதும் தன் உறுதியை அவர் கைவிடவில்லை. திசை மாறி செல்லவில்லை. வழக்கை நடத்தினார். ஒவ்வொரு நாளும் வாழ்வதே போராட்டமாக இருந்தபோதும் நேருக்கு நேர் நின்றார். ஒன்றல்ல, இரண்டல்ல... கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் உண்மையிலேயே நெருப்பாற்றில் நீந்தினார்.

‘தினகரன்’ நாளிதழின் முதன்மை ஆசிரியராக அவர் பணியில் அமர்ந்தது அந்த பத்திரிகை அதிபரின் முகத்தில் பூசப்பட்ட கரி. இதையே ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும் சொல்லலாம்.

இவ்வளவு நிறுவனங்களில் தலைமை பொறுப்பை வகித்தபோதும் எங்கும் அவர் விலைபோனதில்லை. ‘அன்பளிப்பு’, ‘லஞ்சம்’ என்று வாங்கியதில்லை. இப்போதும் தன் மகனின் கல்லூரி ஃபீசுக்கு அலுவலகத்தில்தான் லோன் போடுகிறார்.

தவணை முறையில் கார் வாங்கியது கூட சமீபத்தில்தான். ஆனால், அலுவலகத்துக்கு மாதத்தின் முதல் பத்து நாட்களில்தான் காரில் வருவார். அடுத்த பத்து நாட்கள் இருசக்கர வாகனம். அதற்கடுத்த ஐந்து நாட்கள் பஸ். கடைசி மூன்று நாட்கள் நடந்து வருவார்.

பெட்ரோல் செலவு.

நம்புவதற்கு கடினம் இல்லையா? இதுதான் கதிர் சார். அவரது வங்கிக் கணக்கில் சேர்ந்தாற்போல் ஆயிரம் ரூபாய் இருப்பது சம்பளம் வாங்கிய முதல் மூன்று நாட்கள்தான்.

அந்தளவுக்கு தன் சம்பளத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்துபவர். சக பணியாளர்களை ஒருமையில் அழைத்து பார்த்ததில்லை. வயதில் குறைந்தவராக இருந்தாலும் ‘சார்’ போட்டுதான் கூப்பிடுவார். அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியாளர்களையும் ‘வாங்க... போங்க’ என்றுதான் அழைப்பார்.

தன்னை எதிர்ப்பவர்களாகவே இருந்தாலும் அவர்களிடம் திறமை இருந்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார். பொறுப்புகளை ஒப்படைத்து அவர்களை உயர்த்துவார்.

செய்திகளை எடிட் செய்வதில் மன்னர்.

நாளிதழ்கள் என்றில்லை. பொதுவாக அனைத்துப் பத்திரிகைகளுமே ‘சொற்களின் கணக்கில்தான்’ இயங்குகின்றன.

ஒரு பக்கத்துக்கு நூறு சொற்கள்தான் தேவை என்றால் நிருபர்கள் 150 சொற்கள் தருவார்கள். ஒருசிலர் ஆயிரம் சொற்களில் கட்டுரை எழுதி பீதியை கிளப்புவார்கள். இது வார, மாத இதழ்களின் நடைமுறை.

நாளிதழ்கள் ‘எட்டு காலம்’, ‘இரண்டு காலம்’, ‘ஒரு காலம்’ என ’பத்தி’ கணக்கில் இயங்குபவை.

எனவே உதவி, துணை ஆசிரியர்களின் வேலை கடுமையானது. பலரும் para para ஆக தூக்குவார்கள்.

ஆனால், கதிர் சார் அப்படி செய்யமாட்டார். வாக்கியங்களை குறைப்பார். ‘சென்று கொண்டிருந்தான்’ என்பதை ‘சென்றான்’ என்று மாற்றுவார். ‘அவர் கேட்டார்’ என்பதை வெறும் ‘கேட்டார்’ என்று சுருக்குவார்.

இந்த எடிட்டிங் முறையை தன்னுடன் வேலை பார்க்கும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலைப் பார்ப்பது அவருக்கு பிடிக்காது. ’எந்த வேலையாக இருந்தாலும் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். மாலை நேரத்தை நண்பர்களுடன், குடும்பத்தினருடன் செலவழியுங்கள். நான்கு இடங்களுக்கு போனால்தான் மைண்ட் ஃபிரெஷ் ஆகும்’ என்பார்.

சுருக்கமாக சொல்வதெனில் அவர் வெறும் நாளிதழின் CHIEF EDITOR மட்டுமல்ல. திறமையான EDITORIAL MANAGING DIRECTOR.


‘தினகரன்’ நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நாளிதழில் அவர் செய்த மாற்றங்கள் அநேகம். தமிழ் நாளிதழ்களின் வரலாற்றிலேயே ஒரு தினசரி தினமும் 10 லட்சம் பிரதியை கடந்தது எட்டு வருடங்களுக்கு முன்னர்தான். அந்த சாதனையையும் ‘தினகரன்’தான் அவர் தலைமையில் நிகழ்த்தியது.

இன்று இரு தமிழ் நாளிதழ்கள் நாள்தோறும் தலா 10 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகளை விற்கின்றன என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கதிர் சார்தான்.

போலவே ‘தமிழ் முரசு’ மாலை நாளிதழ், தொடக்கத்தில் Tabloid வடிவில் வந்தபோது சென்னையில் மட்டுமே ஒன்னரை லட்சம் பிரதிகள் விற்று சாதனை புரிந்தது. அதற்கு ‘சும்மா நச்சுனு இருக்கு’ என கேப்ஷன் கொடுத்ததும் அவர்தான். ‘மேகசின்’ வடிவில் மாலை நாளிதழை கொண்டுவரும் வடிவத்தை அமைத்தவரும் அவரேதான்.

இன்று அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் செய்தி ஆசிரியராக பணிபுரிபவர்கள் அனைவருமே அவரால் உருவாக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்டவர்கள்தான். ஏதோ ஒரு காலத்தில் அவருடன் இணைந்து பணிபுரிந்தவர்கள்தான். அவரால் முன்னுக்கு வந்தவர்கள்தான்.

அவ்வளவு ஏன், ‘குமுதம்’ குழும ஆசிரியரான கோசல்ராம், ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியரான திருமாவேலன் ஆகியோர்கள் கூட அவரது மாணவர்கள்தான். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆர்வத்துடன் பத்திரிகை துறைக்கு வந்த அவர்கள் இருவரையும் அரவணைத்து, ‘விகடன் பேப்பரில்’ பணிக்கு அமர்த்தியவரும் அவர்தான். மெல்ல மெல்ல தலைமை நிருபர், செய்தி ஆசிரியர் என அவர்களை உயர்த்தியவரும் அவரேதான்.

உண்மையிலேயே இதுதான் முக்கியமானது.

வார இதழ்களில் ‘சாவி’ இப்படியொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். ஏராளமான பத்திரிகையாளர்களை உருவாக்கினார்.

அதற்கு சமமாக நாளிதழ்களில் சாதித்தவர், சாதித்து வருபவர் கதிர் சார

அதனால்தான் தமிழகத்தில் எந்த நிறுவனம் புதிதாக நாளிதழை தொடங்கினாலும் அதன் ஆசிரியராக ‘கதிர்’ பொறுப்பேற்பார் என்றே கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த வதந்தி மெய்ப்பட்டது ‘தினகரன்’ விஷயத்தில்தான்.

‘இந்து’ நாளிதழ் தமிழில் தொடங்கப்பட்டபோதும் அவர் பெயரே தொடக்கத்தில் அடிபட்டது. ஆனால், அது பொய் என்று பின்னர் நிரூபணமானது.

இதற்கெல்லாம் காரணம், ஒன்றே ஒன்றுதான்.

அதுதான் கதிர் சாரின் நேர்மை.

அனைத்து கட்சி தலைவர்களையும் அவருக்கு தெரியும். ஆனால், யார் வீட்டு கதவையாவது எதற்காவது தட்டியிருக்கிறாரா? இல்லை. தனிமையில் அவர்களை சந்தித்திருக்கிறாரா... தொலைபேசியில் உரையாடியிருக்கிறாரா? இல்லை. தன் மகனை கல்லூரியில் சேர்க்க சிபாரிசுக்காக அணுகியிருக்கிறாரா? இல்லை. வீடு கேட்டு மனு கொடுத்திருக்கிறாரா? இல்லை. மக்கள் முன் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறாரா? இல்லை.

சொல்லப்போனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு கூட பதிமூன்று லட்சம் பிரதிகள் நாள்தோறும் விற்பனையாகும் நாளிதழின் ஆசிரியர் அவர் என்று தெரியாது.

இந்த காலத்தில் இப்படியும் ஒரு நாளிதழின் ஆசிரியர் இருக்க முடியுமா? வாழ முடியுமா?

முடியும். அதற்கு வாழும் உதாரணம்தான் கதிர் சார்.

இளைஞர்களை ஊக்கப்படுத்தியபடியே ஏராளமான புத்தகங்களை படித்துக் கொண்டு, எண்ணற்ற செய்தி ஆசிரியர்களை உருவாக்கியபடியே  தமிழ் நாளிதழ்களின் போக்கை மாற்றி வரும் அவருக்கு -

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


கே. என். சிவராமன்


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

எனது வாழ்த்துகளும்...