Tuesday, January 7, 2014

இணையமென்னும் இளைய 'கண்ணி'

ருபதாம் நூற்றாண்டில் உலகைப் புரட்டிப் போட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளுள் இணையத்துக்கு இணையில்லை எனலாம். வங்கிக் கணக்கிலிருந்து வாழ்க்கைத் தேர்வு ஈறாக, கல்விச் சேர்க்கை முதல் கலவிப் படிப்பு வரை இணையத்தில்,இணையத்தால் வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்.

ஒருநாள் இணையம் இல்லையாயின் மறுநாள் விடியாதோ / இதயம் துடிக்காதோ என்ற நிலை தான் பலருக்கும்.

ஒருநாள் ஃபேஸ்புக்கில் எழுதாவிட்டால், தலையெழுத்தே மாறிவிடுவதைப் போலவே பதறுகிறார்கள் பலரும். ஒருநாள் ட்விட்டரில் தலை காட்டாவிட்டால், உலகச் சமுதாயம் தன்னை ஒதுக்கிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். கூகுள் ப்ளஸ்ஸில் இல்லாதவர்களை கழித்துக் கட்டக்கூடியவர்களாகக் கருதப்படுமளவுக்கு இணையத்தின் சமூக வீதிகளில் வலம் வருவதே வாழ்வின் நடைமுறையாகிக் கொண்டிருக்கிறது.

இணையம் தீண்டாதவர்கள் வெத்துவேட்டுகளாகவும், இணையத்தில் மூழ்காதவர்கள் பித்துக்குளிகளென்றும் கருதப்படுகிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை.

வைரமுத்து போன்ற கவிஞர்களைக் கேட்டால் 'இணையம் தான், இணையம் தான், எல்லாம் இணையம்தான்; இதயம் தான், இதயம் தான், இவ்வுலகின் இதயம்தான்' என்று கவிதை பாடினாலும் ஆச்சர்யமில்லை.

பிரிட்டிஷ் லீட்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் காத்ரியா மோரிசன் என்பவர், தான் மேற்கொண்ட ஆராய்ச்சி ஒன்றில்  இணையத்தில் இணைந்திருக்கும் நேரத்திற்கும் மன அழுத்தத்திற்கும் நேர்விகிதத் தொடர்பு உண்டு என்று கண்டறிந்துள்ளார்.


'16 வயதிலிருந்து 51 வயது வரை உள்ள 1319 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாம். ஆய்வில், நாள்தோறும், தாங்கள் வாங்கிய பொருட்களுக்குக் கட்டணம் கட்டுவதிலிருந்து பொழுதுபோக்கிற்காக விளையாடுவது வரை இணையத்தில் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றோம் என்பதே தெரியாமல் பயன்படுத்துவதால் மனஅழுத்தம் ஏற்பட காரணமாகிறது.

இந்தக் கணக்கெடுப்பில் 21% பேர்,  இணையம் இல்லை என்றால் பிரச்சினையில்லை சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.


அலுவலகத் தோழர் ஒருவர் திடீரென்று வெடித்துச் சிரிப்பார். திடீரென்று மகா சோகமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக 'ஐயோ' 'சே' என்றெல்லாம் சம்பந்தமின்றி உரக்க ஒலிப்பார். என்ன ஆயிற்றோ என்று பதறிப் பார்த்தோம் என்றால், அவரை நாம் பார்ப்பதைக் கூட அறியாதவராக, மெய்யுலகு நீங்கி மெய்நிகர் உலகில் மூழ்கியிருப்பார். இதனுடைய கேடு மெய்யுலகில் முதன்மை அளிக்க வேண்டிய காரியங்களை இரண்டாந்தரமாகக் கருதி அதனால் ஏற்படும் சிக்கல்கள் அவரை உணரவைத்தன. இப்போதும், மெய்நிகர் உலகில் உலவும் நேரங்களைக் குறைத்துக் கொள்ள முயன்று வருகிறார். முயன்று முயன்று முயன்று வருகிறார்.

பிரதான காரியங்களை பிறிதான காரியங்களாக கருத வைத்தாலும், இணையமென்னும் நிகரற்ற அறிவியற்கொடையை பயன்படுத்தாமல் இருக்க இயலாது. ஆயின், அதை நாம் பயன்படுத்தும் விதத்தை நமது மனக் கட்டுக்குள் வைப்பதற்கு என்ன வழி? என்பதே இங்கு காணப் பட வேண்டியதாகிறது.


முதலில், மெய்நிகர் உலகில் அதிகமும் போதை கொள்ளாதிருக்க,  அதில் நாம் கட்டுண்டுள்ளோம் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். "சே, சே, நானெல்லாம் அப்படி இல்லை" என்று மறுத்துப் பேசுபவர்களால்  'விடுதலை உணர்வை' பெறவே முடியாது. இணையத்தைப் பயன்படுத்தவே கூடாது என்பதல்ல இங்கே பேசுபொருள். மாறாக, இணையமிணைந்து அதிலேயே மூழ்கி உலகின் பிரதானமான மற்ற உறவுகளையும், செயல்களையும் தவிர்த்தலாகாது என்பதே.

அடுத்து, இது எனக்கோ, உங்களுக்கோ மட்டுமேயான சிக்கல் இல்லை. நாள்தோறும் அநேகமநேகர் இதற்கு அடிமைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சாலையை கடக்கும் போதும், சாக்கடையைத் தாண்டும் போதும் கூட, விரல்கள் என்னவோ வாட்ஸ் அப்-பிலும் ஃபேஸ்புக்கிலும் தான் விளையாடிக் கொண்டிருக்கின்றன பலருக்கும். ஆகவே, 'அடடா, நான் ஏன் இப்படி இருக்கிறேன்' என்று நொந்துகொள்ளாமல் நிறைய நவீன மனிதர்களுக்கு இருக்கும் சிக்கலே என்பதை உணர்ந்து, ஒருவருக்கொருவர் இதில் ஆலோசனை பெறவும் தரவும் முன்வருவது நலம் பயக்கும்.

பின்னர், இணையம் சாராத, மனதுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கில் நேரம் செலவிட முயலுங்கள். அந்தப் பொழுது போக்கு டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளாகவோ, புத்தக வாசிப்பாகவோ,  பக்தி மார்க்கமாகவோ,  மின் அரட்டை அல்லாத நேர் அரட்டையாகவோ, இசைப் பாடல்கள் போன்றவைகளாகவோ இருக்கலாம்.  (நண்பர்கள் சிலர் இப்படித்தான், ரியாத்தில் இருக்கும் நல்ல உணவகங்களைத் தேடிச் செல்வதைப் பொழுது போக்காக வைத்துள்ளனர் :-) )

நீங்கள் மாணவர்களாக இருந்தால், உங்கள் கல்விக்கும், வீட்டுப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். ஆசிரியர்களாகவோ, மற்றவர்களாகவோ இருந்தால் இணையத்தில் வாசிக்க நினைப்பதைத் தவிர்த்து அச்சு நூல்களைத் தேடி வாசியுங்கள்.

சமையல் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவதும் இணைய நேரத்தை மிச்சப்படுத்தும். நண்பர்களோடு நேரில் அளவளாவுவதும் கூட நல்ல பயனை அளிக்க வல்லது. மேலும் குடும்பத்தினரோடு வெளியே சிற்றுலா (மறக்காமல் மடிக்கணினியை வீட்டில் வைத்துவிட்டு) செல்வதும் நல்ல பலனாக அமையும்.

தவிர, கணினியோடு என் நேரத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்துக்கொள்வதும், குறித்த நேரத்தில் இணையத்தை மூடிவிட உறுதி கொள்வதும்  சிறப்பாக உதவும். இணையம் பயன்படுத்தத் தொடங்கும் முன் எப்போது முடிக்க வேண்டும் என்பதை நேரக் கெடு நமக்கு நாமே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த உறுதி, உறுதியாய் இருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கணினி மேசையில் வைத்து உணவு அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இதையெல்லாம் வாசிக்கிற உங்களுக்கு இது பலனளிக்கிறதோ இல்லையோ, எனக்காவது இப்படி எழுதிக்கொள்வது பலனளிக்காதா என்ற நப்பாசை தான் இந்தக் கட்டுரை. வாசித்தமைக்கு நன்றி.

- இப்னு ஹம்துன்

(இப்பதிவாசிரியரின் பிற பதிவுகள்)
நன்றி  Source: http://www.inneram.com/

No comments: