Monday, March 31, 2014

ஒவ்வொரு மகத்தான வெற்றியாளருக்குப் பின்னாலும் இம்மாதிரி உணர்வுப்பூர்வமான நிஜக்கதை கட்டாயம் இருக்கிறது.

2006 டிசம்பர். விராத் கோஹ்லி டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முந்தைய நாள் ஆட்டத்தின் கடைசியில் நைட் பேட்ஸ்மேனாக களமிறங்கியிருந்தார். ஹோட்டல் அறைக்கு அதிகாலை மூன்று மணிக்கு போன் வருகிறது. படுத்த படுக்கையாய் இருந்த அப்பா பிரேம் கோஹ்லி மரணம்.

மறுநாள் களத்தில் மட்டையை பிடிப்பதா அல்லது அப்பாவின் இறுதிச்சடங்குகளுக்காக ஊருக்குப் போவதா என்று குழப்பம். ஆஸ்திரேலியாவில் இருந்த தன்னுடைய பயிற்சியாளரை தொடர்பு கொள்கிறார்.

“முதன்முறையாக தேசிய அளவில் விளையாடுகிறாய். இங்கே எப்படி விளையாடுகிறாய் என்பதைப் பொறுத்துதான் விளையாட்டில் உன் எதிர்காலம். ஆனாலும் நீ என்ன செய்யவேண்டும் என்பதை நீதான் முடிவெடுக்க வேண்டும்” என்கிறார்.

மறுநாள் ஊருக்குப் போகாமல் விளையாடுகிறார் கோஹ்லி. தொண்ணூறு ஓட்டங்கள். கோஹ்லி எடுத்த ஓட்டங்கள் காரணமாகதான் டெல்லி அணி அன்று ஃபாலோ-ஆனை தவிர்த்தது. ஒரு விளையாட்டு வீரனாக தன்னுடைய கடமையை செய்து முடித்துவிட்டு, குடும்பக் கடமையை செய்ய விரைந்தார். அப்போது விராத் கோஹ்லியின் வயது பதினெட்டுதான்.

விராத்தின் அம்மா சொல்கிறார்.

“அன்றிலிருந்து அவன் மொத்தமாக மாறிவிட்டான். அதுவரை குழந்தையாக இருந்தவன் ரொம்ப பெரிய மனுஷத்தனமாக யோசிக்கத் தொடங்கினான். ஒவ்வொரு போட்டியையும் மறக்க முடியாத அந்த ரஞ்சி போட்டியாக நினைத்துதான் விளையாடுகிறான். விளையாடுகிறான் என்றாலும் அவனிடம் விளையாட்டுத்தனம் கொஞ்சமும் இல்லை. களத்தில் இறங்காமல் பந்து பொறுக்கிப் போடுவதோ, கூல்டிரிங்ஸ் எடுத்துக் கொண்டு ஓடுவதோ அவனுக்கு கொஞ்சமும் பிடிக்காத வேலை. அப்போதிலிருந்து கிரிக்கெட் மட்டும்தான் அவனது உலகம். அவனுடைய கனவுகளை நோக்கி சலிக்காமல், ஓய்வெடுக்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவனுடைய அப்பாவின் கனவும் அதுதான் என்பதால்”

ஒவ்வொரு மகத்தான வெற்றியாளருக்குப் பின்னாலும் இம்மாதிரி உணர்வுப்பூர்வமான நிஜக்கதை கட்டாயம் இருக்கிறது.
 Yuva Krishna

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

அறியாத தகவல்! தன்னம்பிக்கை பகிர்வு! நன்றி!