Tuesday, April 1, 2014

“தெரியாத ஊருக்குப் போதல்!”

ஒரு எஜமானரிடம், வேலைக்காரன் ஒருவன் இருந்தான். எதைச் சொன்னாலும் எதிர்க்கேள்வி கேட்காமல் அதைச் செய்ய மாட்டான். இல்லாத சந்தேகங்களை எழுப்புவான்.

ஒரு நபரைப் பார்த்துவிட்டு வா என்றால், “அவர் இல்லாவிட்டால் என்ன செய்வது? வெளியூர் சென்றிருந்தால் அவர் வருகிற வரை இருந்து பார்த்துவிட்டு வருவதா? எத்தனை நாள் தங்குவது?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குழப்புவான்.

“இவனோடு பெரும் தொல்லையாக இருக்கிறதே!" என்று கூட நினைப்பதுண்டு. பல வருடங்களாக வேலை செய்பவன். நேர்மையானவன் என்பதால் அவனைச் சகித்துக் கொண்டார்.

எப்படியும் அவனைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எஜமானர். அவன் கழுத்தில் "நான் ஒரு முட்டாள்" என்று தகட்டில் எழுதி மாட்டிவிட்டார்.

அவன் அதை பொருட்படுத்தவே இல்லை. வழக்கம் போலவே நடந்து கொண்டான். எஜமானரும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். “இனி நான் பிழைக்க மாட்டேன். சாகப்போகிறேன்!” என்றார் எஜமானர்.

“சாவு என்றால் என்ன?” என்று கேட்டான் அந்த முட்டாள் வேலைக்காரன்.

“தெரியாத ஊருக்குப் போதல்!”

“எந்த வழியில் போக வேண்டும்?எவ்வளவு தூரம்?”

“தெரியாது!”

“தேரில் போகலாம் அல்லவா?”

“தேர் போகாது!”

“குதிரையில் ஏறிப் போகலாமா?”

“குதிரையும் போகாது.”

“வண்டி அல்லது பல்லக்கு?”

“எதுவும் போகாது.”

“ஐயா! தாங்கள் ஊருக்குப் போவதாகச் சொல்கிறீர்கள். எந்த வழி, எவ்வளவு தூரம், எந்த ஊர் என்பதும் தெரியவில்லை என்கிறீர்கள். குதிரையும் போகாது, வாகனங்களும் போகாது என்கிறீர்கள். வழியும் தெரியாது, எதுவும் தெரியாது என்கிறீர்கள். எனவே, இந்த அட்டையை அணிந்து கொள்ளத் தகுதியானவர் நீங்கள் தான் என்று படுத்த படுக்கையில் உள்ள எஜமானர் கழுத்தில் அந்த தகட்டை – நான் ஒரு முட்டாள் என்ற தகட்டை மாட்டிவிட்டான்.

அந்த நேரத்தில் அவன் மீது கோபம் வரவில்லை. அவன் சொல்வது கூட ஒருவகையில் சரிதானோ என்று தோன்றியது. இன்னமும் அவன் முட்டாளா, தான் முட்டாளா என்று யோசனை செய்து கொண்டிருந்தார் எஜமானர்...!


                                                     தகவல் தந்தவர் Hifs UR Rahman

No comments: