Thursday, May 8, 2014

ஒரு மேனேஜரின் கதை

:
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பணியாளர் திறனாய்வு எனும் அப்ரைசல் நடக்கும். என்னுடைய டீமில் சுமார் எண்பது பேர். அவர்களை மிகநன்று , நன்று , மோசமில்லை, மோசம் , மிக மோசம் (Excellent, Good, Not Bad, Bad, Very Bad) என்று ஐந்து பிரிவுகளுக்குள் அடக்க வேண்டும். ஐந்துசதவிகிதம் பேரை, "மிக மோசம்" என்ற பிரிவில் ஒதுக்குவதுதான் எந்த மேனேஜருக்கும் மனசாட்சியை மென்று தின்னும் வேலை. ஏனெனில்அந்த ஐந்து சதவிகிதம் பேரின் வேலையும் பறிக்கப்படும். மேனேஜர் என்றவுடன் ஒரு கம்பெனியில் மேனேஜர் என்று ஒரே ஒருவர் இருப்பார் என்று நினைத்தீர்களானால் அது தவறு. ரெண்டு லட்சம் பேர் வேலைபார்க்கும் கம்பெனியில் மேனேஜர்களே ஆயிரக்கணக்கில் இருப்பர். அந்த ஐந்து சதவிகித விதி மேனேஜர்களுக்கும் பொருந்தும். ஆம் மேனேஜர்களும் வீட்டுக்கு அனுப்பப்படுவர். கம்பெனிக்கு நிதி நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இந்த ஐந்து சதவிகித விதி மிகக்கடுமையாகக் கடைபிடிக்கப்படும்.

என்னுடையப் பதினைந்து ஆண்டு அனுபவத்தில் இதுவரை மூன்று முறை இந்த நெருக்கடி ஆட்கொண்டுள்ளது. ஒசாமாவின் ரெட்டைக்கோபுரத்தாக்குதல் சமயத்தில் ஒருமுறை, புஷ் அவர்களின் நிர்வாகத் திறமையால் ஒருமுறை , கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரத் தேக்கத்தால் ஒருமுறை. இந்தக் கொடுமையிலிருந்து இதுவரை என்னுடைய டீமைக் காப்பாற்றியே வந்திருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிரண்டு பேர் வேலையை விட்டுச் செல்வது இந்த இண்டஸ்ட்ரியில் சாதாரண விஷயம். எனவே ஒரு மாதத்திற்கு முன் ராஜினாமா செய்தவர் , அடுத்தமாதம் ராஜினாமா செய்ய இருப்பவர் (திருமணம் , அப்பாவோட பிசினஸ் போன்ற காரணங்கள் ) போன்றோரை "மிக மோசம் " என்ற பிரிவுக்குள் தள்ளிவிட்டு மற்றவர்களைக் காப்பாற்றியே வந்திருக்கிறேன். உண்மையில் மிக மோசமாகப் பணிபுரிபவர்களைக் கூடக் காப்பாற்றியிருக்கிறேன். அவர்கள் எனக்கு ஏன் எக்சலெண்ட் கொடுக்கவில்லை என்று பிற்பாடு என்னிடம் சண்டை கூடப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் இந்த ஆண்டு மாட்டிக் கொண்டேன்.

பணியில் இருக்கும் யாரேனும் ஒருவரை "Very Bad" என்று வரையறுக்க வேண்டிய கட்டாயம். டீம் லீடர்களுடன் பத்து மீட்டிங்களுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட பெயர் ராணி. வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆன ராணிக்கு அதுதான் முதல் அப்ரைசல். முதல் ஆண்டு ட்ரைனிங் முடிந்து நிரந்தரப் பணியாளர் ஆக்கும்போது அவளிடம் பேசியிருந்தேன். டெக்னிக்கல் டெஸ்டின் எல்லா அட்டெம்ப்டுகளையும் விரயமாக்கிவிட்டு, இன்னொரு வாய்ப்பு கேட்டு அனுமதிக்காக வந்திருந்தாள். "மிகவும் ஏழ்மையான குடும்பம், முதல் பட்டதாரி ,கல்விக்கடன்களை இப்போதுதான் அடைத்து முடித்தேன் எனவே........", என்று போனது அந்த டிஸ்கஷன். இதுவே கடைசி என்று மேலும் இரண்டு அட்டெம்ப்டுகளுக்கு அனுமதி கொடுத்தேன். அதில் பாஸ் செய்து பணியைத் தக்கவைத்துக் கொண்டாள். அடுத்த மூன்று மாதங்களில் திருமணம் நிச்சயம் ஆனது.

"அந்தப் பொண்ணு எப்ப பாத்தாலும் லிஃப்ட் பக்கத்துல நின்னு ஃபோன்ல பேசிகிட்டே இருக்கா, வேலை செய்றாளா இல்லையா? " என்று என்னுடைய பாஸ் ஒருமுறை கேட்டபோது கடுப்பாக இருந்தது. அதெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது என் வேலை இல்லை என்று நினைத்தபோது டீம் லீடரும் வந்து அதே பிரச்சனையைச் சொன்னாள். "அதைக் கூட நான்தான் சரி பண்ணனும்னா நீ எதுக்கு லீட்?" என்று கத்திவிட்டேன். அதற்குப் பிறகு ராணி குறித்து எந்தச் செய்தியும் காதுக்கு எட்டவில்லை. இன்விடேஷன் கொடுக்கும்போது , "பணக்கஷ்டம்னு சொன்னீங்களே ஆபிஸ்ல மேரேஜ் லோன் போட்டுக்க வேண்டியதுதானே?" என்றேன். "இல்ல அவங்க வீட்ல பெருசா ஒண்ணும் எதிர்பாக்கல"என்றாள்.

நான், என்னுடைய பாஸ், அவருடைய பாஸ் என்று எல்லோரிடமும் சண்டை போட்டுத் தோற்றுவிட்டேன். பதினைந்து ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பதில் இருக்கும் ஒரே லாபம் அந்த நிறுவனத்தின் பெரிய தலைகளுக்கு நீங்கள் யாரென்று தெரிந்திருக்கும்.
"நமது கம்பெனியில் சில மொக்கையான வேலைகளும் இருக்கிறது. திறமையான எந்த ஊழியனும் அந்த மொக்கை வேலைகளைச் செய்யச் சம்மதிக்க மாட்டான். எனவே இது போன்ற மொக்கைகளும் நமக்குத் தேவை" என்ற ரீதியில் வைஸ்-பிரசிடெண்டுக்கு ஒரு மெயில் தட்டினேன்.பல வருடங்களாக லெதர் பாரில் அவருடன் தண்ணியடித்திருந்தாலும் அவரிடம் வேலை விஷயமாக எந்த உதவியோ சிபாரிசோ கேட்டதில்லை. முதல் முறையாக அவரிடம் இப்படி ஓர் உதவி கேட்டு மெயில் அனுப்பினேன்.

அவர் ஹெச்.ஆர் எனப்படும் மனித வள மேம்பாட்டுத் துறையிடம் கலந்து பேசி ஒரு முடிவெடுக்கப்பட்டது. ஐந்து சதவிகித மக்களுக்கு ஒரு தகுதித் தேர்வு நடத்தப்படும். அதில் பாஸ் ஆகிவிட்டால் பணியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதுதான் அந்த முடிவு. கொஞ்சம் கடினமான அந்தத் தேர்வில் எதிர்பார்த்தது போல் ராணி தோற்றுவிட்டாள். தேர்வு மிகக்கடினம் என்று வேறு ஒரு புண்ணியவான் சண்டையிட்டு , பாஸ் மார்க் ஐம்பதிலிருந்து முப்பதாகக் குறைக்கப்பட்டது. அப்போதும் ராணி ஃபெயில். அவள் எடுத்த மதிப்பெண்கள் ஐந்து. அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

டீம் லீடருடன் நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு என்னிடம் பேசினாள் ராணி.

" இந்த வேலை, சம்பளத்தை நம்பித்தான் எனக்குக் கல்யாணமே ஆச்சு. இப்ப நான் என்ன பண்றது?" என்றாள் கண்கள் கலங்கியபடி.
"நான் ஹெச்.ஆரிடம் பேசி ரெண்டு மாசம் நோட்டீஸ் பீரியட் வாங்கித் தர்றேன். அதுக்குள்ளே வேற வேலை தேடிக்குங்க"
"எனக்கு இப்ப யாரு வேலை தருவாங்க நான் டூ மந்த்ஸ் ப்ரெக்னன்ட் ராஜேஷ்" .

ஆக்கம் : ஸிசிஃபஸ் அயோலஸ் Sisyphus Aeolus
நன்றி  ஸிசிஃபஸ் அயோலஸ் அவர்களுக்கு

No comments: