Thursday, May 8, 2014

இவைகள் ஆரஞ்சு பழங்கள் அல்ல - எகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்

இலக்கிய செயல்பாடுகளுக்கும், அதன் தொடர்ச்சியான வரலாற்றிற்கும் பெயர்போன எகிப்தில் பல அற்புதமான பெண் கவிஞர்கள் உருவாகி இருக்கிறார்கள்.அரபுக்கவிதையின் வலிமைமிக்க மொழியை, அதன் சூட்சுமத்தை, நெகிழ்வின் சலனத்தை உள்வாங்கி பல கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இமான் மெர்ஷலில் கவிதைகளும் முக்கிய இடத்தை பிரதிபலிக்கின்றன. அந்த பிரதிபலிப்பு இலக்கிய வானில் பட்டுத்தெறிக்கிறது. வாழ்வின் உன்னதங்களை, மகோன்னதங்களை பேசுபவை இமான் மெர்ஷலின் கவிதைகள்.

பாரம்பரிய நதியான நைலின் டெல்டா பகுதியில் மித் அத்லா என்ற கிராமத்தில் வைதீக கிறிஸ்தவ குடும்பத்தில் 1966 ல் பிறந்தார் மெர்ஷல்.  மேலும் அரபு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்த மெர்ஷல் 1988 ல் கெய்ரோவிற்கு சென்றார். அந்த தருணத்தில் நவீன அரபுகவிதை குறித்து கெய்ரோ பல்கலைகழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதன் தொடர்ச்சியில் 1999 ல் கனடாவிற்கு புலம்பெயர்ந்த அவர் அங்குள்ள அல்பர்டா பல்கலைகழகத்தில் அரபு பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். தற்போது அதை தொடர்ந்து வருகிறார்.

மெர்ஷல் தன் பள்ளிப்பருவத்திலேயே இலக்கிய ரசனைக்கு உட்பட்டார். தொடர்ந்து அந்த காலகட்டத்திலேயே கவிதைகளை நவீன வடிவத்தில் எழுதத்தொடங்கினார். அது அங்குள்ள வட்டார இதழ்களில் வெளிவரத்தொடங்கியது. உயர்கல்விக்கு பிறகு Bint al-Ard (Daughter of the Earth)என்ற பெண்ணிய மாத இதழின் இணை ஆசிரியராக இருந்தார். இந்த பத்திரிகை அனுபவம் அவருக்கான தொடர்ந்த கவிதைத்திறனையும், பத்திரிகை அனுபவத்தையும் கொடுத்தது. அந்த பணி மசூறா நகரை விட்டு புலம்பெயர்வது வரை தொடர்ந்தது. கெய்ரோவிற்கு பிறகு புலம்பெயர்ந்த பிறகு இன்னும் தீவிரமாக இலக்கிய வெளியில் இயங்க ஆரம்பித்தார். கெய்ரோவில் அவரது கவிதைகள் Ibda (Creativity)மற்றும் Al-Qahira (Cairo)ஆகிய இலக்கிய இதழ்களில் வெளியாயின. மெர்ஷலின் முதல் தொகுப்பு Charcterizations என்ற பெயரில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது.  ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள் மற்றும் தொடர்ந்த ஆக்கமான கவிதைகள் ஆகியவற்றை இத்தொகுப்பு உள்ளடக்கி இருந்தது. அரபு இலக்கிய உலகில் மிகுந்த வரவேற்பை பெற்றது இத்தொகுப்பு. இதற்கு பின்னர் மூன்று ஆண்டுகள் எதுவும் எழுதாமல் இருந்தார். இதன் தொடர்ச்சியில் இவரது கவிதைகளின் மொழியும், நுட்பமும், உருவகமும் மாறியது. அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், மனித மனம் எதிர்கொள்ளும் துக்கங்கள், வலிகள் மற்றும் சிறிய அல்லது பெரிய அனுபவ கூறுகள் இவற்றி பிரதியாக்கமாக இருந்தன பிந்தைய கவிதைகள். வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போன தவிப்புகள், மனவெற்றிடங்கள் ஆகியவற்றை உருவகப்படுத்தும் கவிதைகள் மெர்ஷலிடமிருந்து வெளிவந்தன. அவற்றுள் விஷயங்கள் என்னை விட்டு நழுவுகின்றன என்ற கவிதையும் ஒன்று.


விஷயங்கள் என்னை விட்டு நழுவுகின்றன

ஒரு நாள் என் வீட்டை கடந்து சென்றேன்

வருடங்களாக எனக்கிருந்த வீடு அது

என் நண்பர்களின் வீட்டில் இருந்து எவ்வளவு தூரம் என்பதை

அளக்க முயற்சிக்கவில்லை

அன்பிற்காக புரண்டு அழுத விதவையின் கண்ணீர்

என்னை எழுப்புகிறது

என் அண்டை வீட்டாராக அவள் இல்லை.

சந்தேகமே இல்லை

விஷயங்கள் என்னை விட்டு நழுவுகின்றன

என் கனவில் சுவர் ஒன்றும் நுழையவில்லை.

பெயிண்டின் நிறத்தை நான் கற்பனை செய்யவில்லை

அந்த காட்சியை பொருத்தும் போது துன்பியலாக


மேற்கண்ட கவிதை மெர்ஷலின் தனிப்பட்ட துயரங்கள், பிரிவு , சுயவிசாரணை இவற்றின் பருண்மைப்படுத்தப்பட்ட பிம்பமாக         இருக்கிறது. வாழ்க்கையின் நுட்பங்களை அவதானிப்பதிலிருந்து இது தொடங்குகிறது. இதன் மெல்லிய விகசங்கள் கைகளை விட்டு நழுவிக்கொண்டு செல்கின்றன. ஆழ்மனதின் ஏக்கமும், வலியும் ஒன்றை உருவகப்படுத்திய பிம்பமாக மாறுகின்றன. மனதில் சலனம் வெளிப்படுத்தும் கவிதை இது.

மற்றொரு கவிதை சந்தோஷமடையும் மனத்தைப்பற்றி குறிக்கிறது. அதன் நீட்சியின் குறியீடு.

முழுமையான மகிழ்ச்சி

நான் தூங்கும் முன்பாக

தொலைபேசியை படுக்கையின் பக்கத்தில் எடுக்கிறேன்.

அவர்களிடம் பலவற்றைப்பற்றி உரையாடுகிறேன்

அவர்கள் அங்கிருப்பதை உறுதிபடுத்திக்கொண்டு

வாரஇறுதியின் நாட்களை வைத்திருக்கிறார்கள்

போதிய பாதுகாப்போடு

அது முதுமை பற்றிய பயத்தை

சில நேரங்களில் பொய்யாக

உருவாகிறது

அவர்கள் அங்கிருப்பதை நான்
உறுதிபடுத்திக்கொள்கிறேன்.

முழுமையின் மகிழ்ச்சியை

நான் தனிமையில்

காலை சாத்தியப்படுகிறது

புதிய விகசனத்துடன்

வாழ்வின் அகோன்னத தருணத்தில் தனிமனிதன் இயல்பாக கொள்ளும் நிம்மதியை, சந்தோஷத்தை, திருப்தியை அகவய நிலையிலிருந்து சொற்களாக கொட்டிவிட்டு கவிதைப்படுத்துகிறது மேற்கண்ட வரிகள். மகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சியற்ற நிலைக்கும் இடையேயான இடைவெளியில் புறப்படுகிறது இந்த கவிதை. நான் என்னை சுற்றிப்பார்க்கிறேன் என்ற இவரின் மற்றொரு கவிதை சுயபச்சாதபம், மற்றும் உயிர்வாழ்தல் குறித்த அவநம்பிக்கையை குறிக்கிறது.

நான் என்னை சுற்றிபார்க்கிறேன்

படைப்பின் விழிப்புடன்

மரணத்தை எதிர்பார்க்கிறேன்

எப்போதும் என்னை நானே  பார்க்கிறேன்

ஒருவேளை என் கழுத்தின்

பலத்தை காண

அது என் உடலுக்கு பொருத்தமாக இல்லை

ஆச்சரியமாக

 துப்பாக்கிக்குண்டுகளை நான் நம்பவில்லை

 ஆரவாரமற்ற தெருக்களிலிருந்து

அல்லது கத்தரிக்கோலை

கொல்வதின் மௌன வழிகளிலிருந்து

பார்வைகள் ஒளிரும் கண்களிலிருந்து

வெறுமையாக கண் சிமிட்டுகிறேன்

அதை மட்டுமே செய்ய முடியும்

என்ன செய்யப்பட வேண்டும்.

மனித வாழ்வின் இயல்பான இயக்கத்திலிருந்து அதன் கணங்கள் தனியே பிரிந்து அவனை அச்சுறுத்துகின்றன. அடுத்த நொடியின் நிகழப்போகும் ஒன்றிற்காக அவன் ஏக்கமும், ஏக்கமற்ற நிலைக்கும் இடையே தடுமாறுகிறான். எல்லா மனிதர்களும் தன்னைத்தானே உற்றுப்பார்ப்பதில்லை. தன் உடலின் பலம் வாழ்க்கையை எதிர்கொள்ள போதுமானதாக இருக்கிறதா? என்பது பற்றிய சிந்தனை பலருக்கும் இல்லாமல் இருக்கிறது. இதனை சுயவிசாரணைக்கு உட்படுத்துகிறது இவரின் கவிதை. அந்த விசாரணனையின் மிகச்சரியான பிரதிபலிப்பாக மேற்கண்ட வரிகள் அமைந்திருக்கின்றன.

கனடா பல்கலைகழக அரபு இலக்கிய பேராசிரியராக  இமான் மெர்ஷல் தற்போது சிறந்த முறையில் பணியாற்றிக்கொண்டே அரபு இலக்கியத்திற்கு தொடர்ந்து தன் பங்களிப்பை செலுத்தி வருகிறார். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். பல அரபு இலக்கிய இதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் அவரின் கவிதை மற்றும் கட்டுரைகள் வெளியாகின்றன.  மேலும் இலக்கிய இதழ்களான paris review,  American poetry review, The Kenyon review, Michigan Quarterly review ஆகியவற்றின் அவரின் படைப்புகள் வெளியாகின்றன. எகிப்தில் பிறந்து பல்வேறுகட்ட பயணங்களுக்கு பிறகு கனடாவிற்கு நகர்ந்த மெர்ஷல் நவீன அரபு கவிதைகளுக்கு சரியான முன்மாதிரியாக இருக்கிறார். அதனை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதற்கான எத்தனிப்பு இவரின் எழுத்துக்களை அவதானிக்கும் போது தெரிகிறது. மேலும் அரபு கவிதையியல், பயண இலக்கியம், அரபு அறிவுஜீவி இயக்க வரலாறு, புலம்பெயர்ந்தோரின் அடையாளச்சிக்கல்கள், படைப்பிலக்கியம் ஆகிய தளங்களின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். ஆக அரபு இலக்கியத்தில் இமான் மெர்ஷல் புறந்தள்ள முடியாத ஆளுமை.

படைப்புகள்

Characterizations (1990)

A Dark Passageway is Suitable for Learning to Dance (1995)

Walking As Long As Possible (1997)

These Are Not Oranges, My Love,  (2008)

 by எச்.பீர்முஹம்மது 
நன்றி  Source :http://mohammedpeer.blogspot.in/

No comments: