Monday, June 9, 2014

புவியுள்ளவரை பொருளியல் - 2

மார்ஷலின் பொருள்சார்ந்த நல இலக்கணம் (marshalls`s welfare definition) :

நம்ம அண்ணன் ஒருத்தரு எப்படியும் டாக்டராயிருவேன்னு பியூர் சயின்ஸ் குரூப் எடுக்குறாரு. ஆனா கொஞ்சூண்டு மார்க்ல அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கலை. ச்சேய்.. பேசாம மேக்ஸ், சயின்ஸ் எடுத்துருந்தா இன்ஜீனியரிங்காவது போயிருக்கலாம்னு வீட்ல பொலம்புறாங்க. இப்ப நம்ம என்ன செய்வோம்?  +1 சேரும்போது கொஞ்சம் உஷாரா மேக்ஸ், சையின்ஸ் குரூப் எடுப்போம்.. இல்லையா? அதே மாதிரிதான் ஆடம் ஸ்மித்தின் இலக்கணம் பணத்தைப் பத்தி மட்டுமே பேசுது, மனுஷனப்பத்தி பேசலைன்னு எல்லாரும் குறை சொன்னதால திரு.மார்ஷல் பொருளியல் நடவடிக்கை பற்றிய தனது ஆய்வை பொருளோடு அதைத் தேடும் மனிதனின் நடவடிக்கையையும் சேர்த்தே ஆராய்ந்தார்.

19 ஆம் நூற்றாண்டோட இறுதியில ஆல்பிரட் மார்ஷல் தன்னோட பொருளியல் ஆய்வுகளை “பொருளாதாரக் கோட்பாடுகள்” என்ற நூலா வெளியிட்டாரு. இவர் பொருளைப்பற்றி மட்டுமில்லாம அது சார்ந்த நலனுக்கும் முக்கியம் தந்ததால இவரது இலக்கணம் “பொருள்சார் நல இலக்கணம்” அப்படின்னு சொல்லப்பட்டது. அதாவது பொருளை ஈட்டுவதால் சமூகத்துக்கு விளையும் நலன்களை என்று உணரலாம். இவரு “பொருளாதாரம் ஒருவகையில் செல்வத்தைப் பற்றிய இயல் என்றால் மற்றொரு பக்கம் அதை ஈட்டும் மனிதனைப் பற்றிய இயலுமாகும்” என்கிறார்.

மார்ஷல் இலக்கணத்தின் சுருக்கம் : “பொருளாதாரம் அல்லது அரசியல் பொருளாதாரம் எனப்படுவது ஒரு சாமானிய மனிதன் தன்னுடைய தினசரி வாழ்க்கையில் எவ்வாறு ஈடுபடுகிறான் என்பதை ஆராய்வதாகும். மேலும் இது நலவாழ்வுக்குத் தேவையான பொருட்களை ஒரு மனிதன் எப்படிப் பெறுவது, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதோடு அவன் சார்ந்த சமூகத்தின் நடவடிக்கைகளைப் பற்றியும் ஆராய்கின்றது”.  இவ்வளவுதான் மார்ஷலின் பொருள்சார் நல இலக்கணம்.

இதுல நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் என்னன்னா “பொருளியல்.. மனித நடவடிக்கையையும், மனிதனின் பொருளாதார நடவடிக்கையும் ஆராய்வது. கண்ணுக்குத்  தெரியும் பொருட்களில் இருந்து கிடைக்கும் பொருளாதார நலன் பற்றி ஆராய்வது, மனிதனின் தனி நடவடிக்கை (நல்ல உதாரணம் இந்தியா. நம்மூர்ல பல தனி நபர்கள் பணக்காரர்கள். ஆனால் இந்தியா பணக்கார நாடு அல்ல) மற்றும் அவர்களின் மொத்தக் கூட்டான சமூகத்தின் நடவடிக்கை பற்றி ஆராய்வது (உதாரணமா ஜப்பானியர்கள் ஒட்டு மொத்தமா உழைச்சதால ஜப்பான் முன்னேறியது). இந்த மாதிரி மனித குணத்தை, நடத்தையை மற்றும் நடவடிக்கையை பொருளாதாரத்தோடு இணைத்து ஆராய்ந்தது மார்ஷலின் இலக்கணம்.

பொதுவாப் பார்த்தோம்னா ஆடம்ஸ்மித்தின் இலக்கணத்தை விட இவரது இலக்கணம் சற்றே சிறப்பானது. காரணம் ஸ்மித்தின் இலக்கணத்தால் எழுந்த அவப்பெயரை இது நீக்கியது. காசு பணத்தைவிட மனித நலனே சிறந்தது என்று விளக்கியது. அதோட பொருளாதரம்னாலே உற்பத்திதான் (production) என்று இருந்த ஒரு பொது புத்தியை மாற்றி பொருளாதாரத்தின் பிற பகுதிகளான நுகர்வு ( consumption) மற்றும் பகிர்வு (distribution) ஆகியவற்றையும் விளக்கியது. இதுமாதிரி பல சிறப்புகளை இந்த இலக்கணம் உள்ளடக்கியதால நீண்ட காலம் இது செல்வாக்கா இருந்துச்சு. ஆனா எப்படித்தான் பாடுனாலும் சுப்புடு குறை கண்டுபிடிப்பாருல்ல.. அது மாதிரி இதுலயும் லயனன் ராபின்ஸன் குறை கண்டுபிடிச்சாரு. அவரு அப்பிடி என்ன கண்டுபிடிச்சாரு?

மார்ஷல் கண்ணுக்குத் தெரியும் பொருட்களில் இருந்து அதாவது இயந்திரம்,  நிலம் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் நலன்களையே குறிப்பிடுகிறார். ஆனால் கண்ணுக்குத் தெரியாத சில பணிகளில் அதாகப்பட்டது வாத்தியாரு, டாக்டரு, வக்கீலு இவங்களை மாதிரி ஆளுங்களோட பணிகளும் நலன் தருகிறது. ஆனா மார்ஷல் இதை விளக்கலை. சோ, மார்ஷல் சொன்னது ஒருதலைப்பட்சமானது அப்படின்னு ராபின்சன் சொன்னாரு. இதோடயா விட்டாரு?  இதில் உள்ள ஒரு பெரிய முரண்பாட்டையும் கண்டுபிடிச்சுச் சொன்னாரு.

அதாவது மார்ஷல் உற்பத்தியாகும் எல்லாப் பொருட்களும் மனிதன் நலன் சார்ந்தது என்பதாகச் சொன்னார். அதுவே பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிக்கிறதுன்னும் சொன்னாரு. ஆனா மது, புகையிலை, அணுகுண்டு செய்தல் போன்றதும் உற்பத்திதானே? இதுனால மனிதனுக்கு என்ன நலன்?  இதன் உற்பத்தி மனித நலனிலும் சேராது. பொருளியல் பெருக்கத்திலும் சேராது. அப்புறம் எப்படி இது பொருள்சார் நல இலக்கணமா இருக்க முடியும்? இந்த முரண்பாட்டையும் ராபின்சன் சுட்டிக்காடினாரு. பொதுவா நலன்னு சொல்றோம். அந்த நலனை எது வரையறை செய்யும்?  ஒருத்தனுக்கு நலனாத் தோன்றுவது மற்றொருவனுக்குத் தீங்காத் தோன்றும். எனவே நலன் என்ற கருத்தில் உற்பத்தியைவைத்து பொருளியலை மதிப்பிட முடியாதுங்குறது ராபின்சன் கருத்து.

மனித நடவடிக்கைகளை பொருளாதார நடவடிக்கை, பிற நடவடிக்கை என்றெல்லாம் கணக்கிட முடியாது. எங்கெல்லாம் பற்றாக்குறை தோன்றுகிறதோ அங்கெல்லாம் பொருளாதாரக் குறையும் தோன்றும். மேலும், இவ்விலக்கணம் பகுத்தாய்வின் (analatical) அடிப்படையில் அமையாமல் பகுப்புகளின் (classifactory) அடிப்படையில் அமைந்துள்ளது. மனித நடவடிக்கைகளை அரசியல், சமயம், சமுதாயம், பொருளாதாரம் அப்படின்னு தனித்தனியா பிரிப்பதை ராபின்சன் ஏத்துக்கலை. எங்க சுத்தினாலும் ரெங்கனைச் சேவிங்குற மாதிரி என்ன பண்ணுனாலும் கட்டக் கடைசியில அது சுத்தி நிக்கிறது காசுலதான் அப்படின்னு ராபின்சன் ஸ்டிராங்கா சொன்னாரு!!

இந்த மாதிரியான சில குறைபாடுகளால மார்ஷலோட இலக்கணம் தற்போது ஏற்றுக்கொள்ளப்படாத இலக்கணமா இருக்கு. சரி..ஒன்னு சரியில்லன்னா அதுக்கு மாற்றா ஒன்னு வரணும்ல? அதுதானே நேச்சர்! அந்த அடிப்படையில இதில் உள்ள குறைபாடெல்லாம் நீக்கி ஒரு புது இலக்கணம் வந்துச்சு. குடுத்தவர் யாரு?  வேற யாரு.. இதைக் குறை சொன்ன அதே ராபின்சன்தான். அவரு என்னா சொன்னாருன்னா..

-தொடரும்.
 கட்டுரை  ஆக்கம் .(புதுகை அப்துல்லா ) M.m. Abdulla
முன் பகுதி படிக்க 
 புவியுள்ளவரை பொருளாதாரம்
 புவியுள்ளவரை பொருளியல் - 1


                                      (புதுகை அப்துல்லா ) M.m. Abdulla

No comments: