Saturday, June 21, 2014

குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும்!


திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொலை, கொள்ளை என்பவை அன்றாட வானிலை அறிக்கை போல ஆகிவிட்டன. இந்தப் பிரச்சினையில் அரசும், காவல்துறையும் ஏன் இப்படி மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்பது தெரியவில்லை.

இந்து முன்னணிப் பிரமுகர் படுகொலையைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடிய வன்முறை வெறியாட்டம் கண்டனத்துக்குரியதே.

கிறித்தவர்கள் தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது. போதகர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் - அவர் உயிர் தப்பித்தது அதிசயமாகக் கருதப்படுகிறது.

இந்து முன்னணி பிரமுகர் படுகொலைக்கும் தங்களுக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத பொது மக்களும், வணிக நிறுவனங்களும் கடுமையான வகையில் தாக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துகள் கல்லடிக்கு ஆளாகின. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மணி நேரம் ஒரு யுத்தக் களமே நடந்திருக்கிறது.

காவல்துறை கண்டு கொள்ளவேயில்லை என்று வியாபாரிகளும், பொது மக்களும் தெரிவித்த கருத்து களை தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நேற்று பிற்பகல் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் முன் வரவில்லை. எங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையில், நாங்கள் எப்படிப் பேருந்துகளை இயக்க முடியும்என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளனர்.

கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் நடைபெற்ற வன்முறைகளைக் கண்டித்து, தனித்தனியே இன்று பட்டினிப் போராட்டத்தை நடத்துகின்றனர்.

தமிழ்நாடு மதமாச்சரியங்களுக்குத் துளியும் இடமின்றி, இணக்கம்மிகுந்த மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் இதனைச் சீர்குலைக்க முயலுபவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியவர்களே!

அதே நேரத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட் டார் என்பதை மய்யப்படுத்தி அப்பாவி மக்களையும், வணிக நிறுவனங்களையும், மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் பேருந்துகளையும் உடைப்பது எந்த வகை யில் நியாயம்?

மத்தியில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது என்ற மிதப்பில், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள சங்பரிவார்ப் பிரிவினர் - பிஜேபியினர் மனப்பால் குடிப் பார்களேயானால், அதனைக் கையாள வேண்டியது அரசையும், குறிப்பாக காவல்துறையையும் சார்ந்ததே!

மக்களிடையே மாச்சரியங்களை உண்டாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி, அதனைக் கலவரமாக மாற்றி, அரசியல் ஆதாய மீன் பிடிக்கும் வேலையில் குஜராத்தில் வெற்றி பெற்று இருக்கலாம்.

அதனை முன்னுதாரணமாகக் கொண்டு, (குஜராத் மாடல் என்பது இதுதானோ!) பிற மாநிலங்களிலும் பரீட்சித்துப் பார்க்கலாம் என்று அவர்கள் திட்டமிடலாம்.

அந்த நிலையை அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள மதச் சார்பற்ற சக்திகளும், சமூக நீதியாளர்களும், பகுத்தறிவாளர்களும், முற் போக்குச் சக்திகளும், நாட்டில் அமைதிப் பேணப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறவர்களும் இதில் கவனம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள்.

முக்கியமாக ஊடகங்களும் இதில் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதில் அரசியல் பார்வை தேவையில்லை.

பாபர் மசூதி, 1992இல் இடிக்கப்பட்டபோது கூட இந்தியாவின் பல மாநிலங்களிலும் வன்முறை வெடித் துக் கிளம்பிய சூழலில், தமிழ்ப் பூமி அமைதிகாத்து இந்தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது. அந்தப் பெருமைக்குரிய மரபினை மண் மூடச் செய்து விடலாம் என்ற நினைப்பைத் தொடக்கத் திலேயே துடைத்தெறிந்திட வேண்டும்.

ஏதோ ஒரு தப்பான கணக்குப் போட்டு மாற்றம் மாற்றம் என்று கருதி, ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கும் இளைஞர்களும், இதில் தெளிவான சிந்தனையைச் செலுத்த வேண்டும்.

நேற்று நடைபெற்ற வன்முறைகளில் ஈடுபட்ட 29 பேர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

சரியான நடவடிக்கையே! கண் துடைப்பாக இது இல்லாமல் நடைமுறையில் குற்றஞ் செய்தவர்கள் தண்டிக்கப்படும் வகையில், வழக்கினைச் சரியாக நடத்த வேண்டும் என்பதே வெகு மக்களின் பரவலான எதிர்ப்பார்ப்பாகும்.

அதேபோல இந்து முன்னணிப் பிரமுகர் கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் வேகமாக இருக்கட்டும்!

                                             எழுதியவர் திரு கலி. பூங்குன்றன்
நன்றி  திரு கலி. பூங்குன்றன்  அவர்களுக்கு

No comments: