Wednesday, June 25, 2014

அனுகூல சத்ருக்கள், பீவேர்!


சரி, சரி, ஒத்துக் கொள்கிறேன். மோடி இப்போது வெறும் பிஜேபி தலைவர் அல்ல, இந்தியாவின் பிரதமர். எனவே அவருக்கு கிடைக்கும் புகழ் எல்லாம் நமது நாட்டுக்கு கிடைத்த புகழ். அதனால் நமக்கு கிடைத்த புகழ்.

இருந்தாலும்...

அட, ’ட்விட்டரில் அதிகமான ரசிகர்களை கொண்ட உலகின் 5வது தலைவராக மோடி திகழ்கிறார்’ என்று சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது.
‘வெள்ளை மாளிகையை மோடி முந்திவிட்டார், பின்னுக்கு தள்ளிவிட்டார்’ என்று அறிவிக்கும் போதுதான் கிர்ர்ரடிக்கிறது.

கம்பேரிங் ஆப்பிள்ஸ் வித் ஆரஞ்சஸ் அபத்தம் என்பார்கள். இரண்டும் பழங்கள்தான். ஆனாலும் வெவ்வேறு குணங்கள். நீங்கள் வெள்ளை மாளிகையை ஒரு கருப்பு மாளிகையோடு ஒப்பிடுங்கள், தப்பில்லை. அறிவாலயத்தோடு ஒப்பிட்டாலும் ஆட்சேபம் இல்லை. இரண்டும் கட்டடங்கள்.

அமெரிக்க அதிபரின் அலுவலகம் என்ற அடிப்படையில் வெள்ளை மாளிகையை தேர்வு செய்யும்போது, அதற்கு ஈடாக இந்தியாவில் இருப்பது பிரதமரின் அலுவலகம். பிஎம்ஓ என்ற பெயரில் அதற்கு ட்விட்டர் ஹேண்டில் இருக்கிறது. மன்மோகன் சிங்குடன் சண்டை போட்டல்லவா அந்த ட்விட்டர் தளத்தை மோடி சர்க்கார் மீட்டது. இந்த நேரத்தில் அதை அம்போ என விடுவது இழுக்கல்லவா, மக்களே.

போகட்டும். சமீபத்தில்தான் மோடி ட்விட்டருக்குள் நுழைந்தார். குறுகிய காலத்தில் அவருக்கு 49 லட்சம் ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பது உண்மையில் பெரிய விஷயம். அதை நேராக சொல்லிவிட்டு போகலாமே. வெள்ளை மாளிகையை பின்னுக்கு தள்ளி சாதனை என்று நீங்கள் தலைப்பு போடுவது ரசிக்கும்படியாகவா இருக்கிறது? விசா விவகாரத்தால் விரிசல் விழுந்து, தற்போது ரிப்பேர் செய்யப்படும் இந்திய அமெரிக்க உறவுக்கு இதனால் மறுபடி பின்னடைவு ஏற்படுமோ என்ற கவலை வேறு வாட்டுகிறது.

உத்தராகண்ட் பேரழிவில் ஒற்றை ஆளாக களம் இறங்கிய மோடி பல்லாயிரம் குஜராத்திகளை அனாயாசமாக காப்பாற்றினார் என்ற செய்தியை படித்ததில் இருந்து இங்கே எண்ணற்ற ரசிகர்கள் சில்வஸ்டர் ஸ்டாலன் படத்தை கீழிறக்கி வைத்து ’தி கிரேட் இண்டியன் ராம்போ’ உருவத்தை சுவரடைக்க தீட்டி பூஜிக்கிறார்கள். ஒயிட் அவுஸை வேறு ஒண்டிக்கு ஒண்டியாய் நம்மாள் நகர்த்தி வைத்த கதை அவர்களை என்ன பாடு படுத்த போகிறதோ, தெரியவில்லை.

மனிதனை மனிதனோடு ஒப்பிட வேண்டும், ப்ரோ. அதுதான் முறை. டீயாரை நீங்கள் சிவராமனுடன் ஒப்பிட்டால் அவர்களுக்கு வேண்டுமானால் கண் சிவக்கலாம். கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் ’இரண்டு பேரும் ஒன் மேன் ஆர்மி மாதிரி’ என்று விஷயம் தெரிந்தவர்கள் ஒரு புள்ளியில் ஏற்றுக் கொள்வார்கள். அப்படி ஒபாமாவையும் மோடியையும் கம்பேர் செய்திருந்தால் யார் கேட்கப் போகிறார்கள்?

ஆனால் செய்ய மாட்டீர்கள், எனக்கு தெரியும். 32 கோடி மக்களின் அதிபரான ஒபாமாவுக்கு 4 புள்ளி 37 கோடி ரசிகர்கள். அவருக்கு முதலிடம். அடுத்தது போப் ஆண்டவர். 25 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தொனேசிய அதிபருக்கு 50 லட்சத்துக்கு மேல் ரசிகர்கள். வெள்ளை மாளிகைக்கு 4 வது இடம். அடுத்து வருபவர் நமோ. இந்த பதிவை நண்பர்கள் வாசிக்கும் நேரத்தில் நமது பிரதமர் 3 வது இடத்துக்கு முன்னேறி இருந்தால் அதிசயம் கிடையாது.

நாம் 127 கோடி பேர் இருக்கிறோம். வெளிநாடுகளில் 3 கோடி. மொத்தத்தில் பத்து சதவீதம் பேர் ட்விட்டரில் மோடியை பின் தொடர்ந்தால் போதும், உலக தலைவர்கள் மண்டை காய்ந்து அக்கவுன்டை க்ளோஸ் செய்து விடுவார்கள். அதை செய்யாமல் வெள்ளை மாளிகையை பின்னுக்கு தள்ள விரும்பும் அப்ரோச் சரிவருமா? ப்ச்.., எவரும் லைக் போடமாட்டார்கள்.

’மோடிக்கு துதி பாட எங்களுக்கென்ன வேண்டுதலா? பிடிஐ செய்தி தந்தது, பிரசுரித்தோம்’ என்று மற்றவர்கள் டிஷ்யு பேப்பரில் கையை துடைக்கலாம். அறிவாளிகளின் வாசிப்புக்கான நாளிதழ் என குற்றம் சாட்டப்படும் தமிழ் இந்து இந்த காரியத்தை செய்திருக்கலாமா? ‘வெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையே இதுவரை அதிகமாக இருந்து வந்தது. ஆனால், அவரை மோடி விஞ்சி விட்டார். மோடியை பின் தொடர்பவர் எண்ணிக்கை 4,983,667. ஆனால் வெள்ளை மாளிகையை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 49,80,752. தேர்தலுக்கு பிறகு மோடியின் புகழ் அதிகரித்துள்ளது. எனவேதான், துருக்கி அதிபர், பிரதமர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மோடி 4 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்’ என்கிறது இந்து.

இரண்டாவது எண்ணிக்கையில் சரியாக கமா போட்டவர்கள் மோடி எண்ணிக்கை கோடிகளில் தெரியட்டும் என்று கமாவை இடம் மாற்றினார்கள் என்று நம்ப முகாந்திரம் இல்லை. ஆனால், வெறும் ஏழரை கோடி ஜனத்தொகை கொண்ட துருக்கி நாட்டின் அதிபரும் பிரதமரும் 130 கோடிக்கு அதிபதியால் பின்னுக்கு தள்ளப்பட்டதை இவ்வளவு உரக்க சிலாகிக்கத்தான் வேண்டுமா, இந்தூ?



கட்டுரை எழுதியவர் திரு கதிர்வேல் அவர்கள்  Kathir Vel
நன்றி திரு. Kathir Vel அவர்களுக்கு

No comments: