Thursday, July 3, 2014

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 4

நமக்கே நமக்கான நேரங்கள்

வெயில் சுட்டெரிக்கும் மத்தியான நேரம் பீச் பக்கம் போனால் பார்க்க முடியும் வெயிலுக்கே சவால் விடும் காதலர்களை. சூரியபகவானே டென்ஷன் ஆகிற அளவுக்கு அவரை அலட்சியப் படுத்தி காதலில் கலந்திருப்பார்கள் காதலர்கள். திருமணம் முடியும் வரை, அல்லது காதல் முறியும் வரை இந்த நெருக்கமும், பிணைப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் நேரம் கிடைச்சா கூட அந்த சைக்கிள் கேப்பில் சந்திக்கவும், பேசவும், தனிமையாய் நேரம் செலவிடவும் காதலர்களின் மனம் தவியாய்த் தவிக்கும். இந்தத் தவிப்பு தான் காதல் எனும் செடிக்கு உரமும், தண்ணீரும், காற்றும் சர்வ சங்கதிகளும்.

திருமணம் ஆனபின் லைசன்ஸ்ட் காதலர்களாக ஆசை அறுபது, மோகம் முப்பது என ஒரு தொன்னூறு நாள் உலகம் சுற்றியபின் ஒரு சோர்வும், சின்ன இடைவெளியும் உருவாகிவிடும். இந்த இடைவெளியும் நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். திருமண பந்தங்களின் சிக்கல்களின் ஆணிவேர் இது தான் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். திருமணம் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கும், திருமணத்துக்குப் பின்னான வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. காதலை மட்டுமே வளர்க்கும் பணி திருமணம் வரை ! காதலோடு சேர்ந்து குடும்பத்தையும் வளர்க்கும் பணி அதன் பின்பானது !

ஒரு சினிமா டிரைலர் பாக்கறீங்க. பரபரப்பா, சுறு சுறுப்பா, கண்ணுக்கு வசீகரமா, பிரமிப்பா இருக்கு இல்லையா. டிரைலர் உருவாக்கும் எதிர்பார்ப்பை எல்லா சினிமாவும் பூர்த்தி செஞ்சிருக்கா ? இல்லை ! பூர்த்தி செய்திருந்தால் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாத் தானே இருக்கணும் ? பல சினிமாக்கள் அந்த டிரைலர் தந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியாமல் தோல்வியடைகிறது. சில படங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து வெற்றிப் படமாகுது. சில படங்கள் எதிர்பார்ப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகுது.

திருமண வாழ்க்கையும் இப்படித் தான். ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வளர்த்து கொண்டால் ஏமாற்றங்கள் பரிசாய்க் கிடைக்கலாம். டிரைலருக்கு ஓவரா செலவு செஞ்சா படம் முழுக்க நீங்க அதையே எதிர்பார்த்து ஏமாந்து போகலாம். இங்கே தேவையானது இரண்டு விஷயம். ஒன்று, அளவான எதிர்பார்ப்பு. இரண்டு, தொடர்ச்சியான அன்பு !

திருமணத்துக்கு முன்பு எப்படி நீங்கள் இருவரும் நேரம் செலவிட்டீர்களோ அதே போல, அல்லது அதை விட அதிகமாக நேரம் செலவிடுவதில் இருக்கிறது உங்களுடைய திருமண வாழ்க்கையின் வெற்றி. திருமணம் முடிந்த பின் ஒரு குழந்தை பிறக்கும் வரை கூட செலவிட நேரம் நிறைய இருக்கும். ஆனால் ஒரிரு குழந்தைகளும் பிறந்தபின் எப்படி ? அதெல்லாம் முடியாத காரியம் என சட்டென ஒரு முடிவெடுப்பதை விட, அதை சாத்தியப்படுத்துவது எப்படி என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள்.

திருமண வாழ்க்கையின் வெற்றி என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான புரிதலிலும், நெருக்கத்திலும் தான் இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சொந்தக்காரங்க, வருமானம், குழந்தைகள், வேலை, பொழுதுபோக்கு, இத்யாதி இத்யாதி எல்லாமே இரண்டாம் பட்சம் தான் ! முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும் ! இந்தப் பிணைப்பை இறுக்கமாக்க என்ன செய்யவேண்டும் ? சிம்பிள் ! அதிக நேரம் கணவன் மனைவி, தனிமையில் நேரம் செலவிட வேண்டும் !

அவ்வப்போது கணவன் மனைவி இருவருமாக வெளியே போவது ஒரு வழிமுறை. குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் போதோ, அல்லது ஒரு நாள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டோ, அல்லது நண்பர்கள் வீட்டில் விட்டு விட்டோ, கணவனும் மனைவியும் தனியாக அவர்களுக்குப் பிடித்த ஒரு இடத்துக்குப் போய் மனம் விட்டுப் பேசுவது உறவை உற்சாகமாய் வைத்திருக்கும். ஒருவேளை வெளியே செல்ல வாய்ப்பே இல்லாவிட்டால் கூட குழந்தைகள் தூங்கிய பின் நிலவொளியில் அமர்ந்து கதைகள் பேசலாம் ! அந்த உரையாடலில் வேலை, நாளை செய்ய வேண்டிய பணிகள், பிரச்சினைகள் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு சுவாரஸ்யமான விஷயங்களையோ காதல் காலத்தின் நினைவுகளையோ அசைபோடுங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

பெரிய பெரிய விஷயங்களில் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இல்லை. அது ரொம்ப ரொம்ப சின்ன விஷயங்களில் தான் இருக்கிறது. உதாரணமா, உங்கள் மனைவி சமையல் செய்து கொண்டிருக்கும் போது, “மணம் சூப்பரா இருக்கே”, ” ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா ?”, என ஒரு சின்ன புன்னகையுடன் மனைவியின் அருகில் சிறிது நேரம் இருப்பதே நீங்கள் அவரை மதிக்கிறீர்கள், அவரை அன்பு செய்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டி விடும். ஒரு சின்ன புன்னகை, ஒரு சின்ன கண்ணசைவு, ஒரு சின்ன நிகழ்வுப் பகிர்வு எல்லாமே உறவின் இறுக்கத்தைத் துளித் துளியாய் அதிகரிக்கும் !

ரெண்டு பேருக்குமே பிடிச்ச மாதிரி ஒரு ஹாபி கண்டு பிடிங்க, அல்லது மியூசிக், ஓவியம், இப்படி ஏதாச்சும் எக்ஸ்ட்ரா கிளாஸ் கண்டு பிடிங்க, இருவரும் சேர்ந்து நேரம் செலவிடவும் நெருக்கத்தை அதிகரிக்கவும் இது ரொம்ப ரொம்ப உதவும். ஒண்ணும் இல்லேன்னா அடிக்கடி ரெண்டு பேரும் வெளியே போய் காப்பியாவது குடிச்சிட்டு வாங்க ! அந்த அரைமணி நேர அருகாமை கூட அன்பை வளமாக்க உதவும்.

திருமணமாகி நாட்கள், மாதங்கள், வருடங்கள் செல்லச் செல்ல தம்பதியர்கள் சோர்வாகும் ஒரு விஷயம் தாம்பத்யம். அதுவும் குழந்தைகள் பிறந்தபின் அந்த சிந்தனை ஓரமாய் ஒதுக்கி வைக்கப்படும். தாம்பத்யம் என்பது தம்பதியரை இறுக்கமாக்கும் என்பதும், மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் என்பதும் உளவியல் உண்மைகள். எனவே குடும்ப வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமாக அதை எப்போதுமே மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மிஷெல் வெய்னர் பிரபலமான “டைவர்ஸ் பஸ்டிங்” எனும் நூலின் ஆசிரியர். “திருமணங்கள் ஏன் டைவர்சில் முடிவடைகின்றன” எனும் கேள்வியை அவரிடம் கேட்டார்கள். அவர் சொன்ன பதில் ஆச்சரியமூட்டுகிறது. “திருமணங்கள் டைவர்ஸ் ஆவதற்கு ஏதோ மிகப்பெரிய காரணங்கள் இருப்பது போல எல்லோரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. டைவர்ஸ்களுக்கு மிக மிக முக்கியமான காரணம் கணவனும், மனைவியும், தேவையான அளவு நேரம் ஒதுக்காதது தான். திருமணமான பின் அவர்களுக்கு வேலை, குழந்தைகள், ஹாபி, தனிப்பட்ட விருப்பங்கள், போன்ற இத்யாதிகள் முதலிடத்தை அபகரித்துக் கொள்கின்றன. அதனால் கணவன் மனைவிக்கு இடையேயான தனிப்பட்ட நேரங்கள் களவாடப்பட்டு விடுகின்றன. அதுவே பெரும்பாலான டைவர்ஸ்களுக்கான காரணம்”

குழந்தைகள் முக்கியம் தான். ஆனால் உங்களுடைய குழந்தைகள் உங்கள் வாழ்வில் வருவதற்கு முன்பே வந்தவர் உங்கள் வாழ்க்கைத் துணை என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகள் உங்களை விட்டுத் திருமணமாகிப் பிரிந்து போனபின்பும் உங்களுடன் இருக்கப் போவது உங்கள் வாழ்க்கைத் துணை தான். அவருடன் தனிப்பட்ட முறையிலான அன்யோன்ய நேரம் செலவழித்தல் மிகவும் முக்கியம். எப்போதுமே தனியே நேரம் செலவிட முடியாது, ஆனால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் நீங்கள் சேர்ந்து நேரம் செலவிடலாம்.

சில விஷயங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, ஒரு மாலை வேளையில் நீங்களும் உங்கள் பார்ட்னரும் தனித்திருக்கும் சூழல் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரட்த்தில் ஏதோ ஒரு நாலு பொண்டாட்டிக் காரனுடைய சீரியலைப் பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். அல்லது டோனி அடிக்கப் போகும் ஹெலிகாப்டர் ஷாட்டுக்காக இமைக்காமல் டிவியை விழுங்க வேண்டாம். டிவியை ஆஃப் செய்து விடுங்கள். கையில் ஆறாவது விரல் போல செல்போனை ஒட்டி வைக்காதீங்க. மாற்றி வைக்க முடியாமல் இருக்க செல் போன் ஒன்றும் பச்சை குத்திய விஷயம் அல்ல. அதை தூரமாய்ப் போடுங்கள். எந்த விதமான இடஞ்சல்களும் இல்லாமல் பேசுங்கள், சிரியுங்கள், ஏதாச்சும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வீட்ல ஒரு வேலை செய்ய மாட்டேங்கறே, இதெல்லாம் நான் தான் செய்யணுமா, எல்லாரும் சேந்து செஞ்சா தான் வீடு நீட்டா இருக்கும் – போன்ற பல்லவிகளெல்லாம் உண்மையில் கணவன் மனைவியிடையே போதுமான அளவு தனிப்பட்ட நேரம் செலவிடவில்லை என்பதன் விளைவுகள் தான். உன்னால தான் நேரம் செலவிட முடியல – போன்ற பரஸ்பர குற்றச்சாட்டுகள் உண்மையில் அர்த்தமற்றவை. அவற்றை அப்படியே மூட்டை கட்டி மூலையில் எறிந்து விட்டு கிடைக்கும் நேரத்தை இயல்பாகச் செலவிடுங்கள்.

இன்றைக்கு தம்பதியர் சேர்ந்தே இருந்தாலும் அவர்களைப் பிரிப்பது தொழில் நுட்பம். அதே போல பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் உணர்வைத் தருவதும் அது தான். அதை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு வேணும். இருவரும் தூர தூரமாக இருக்கும்போது செல்பேசலாம், சேட்டிங் செய்யலாம். ஆனால் ஒரே வீட்டில் இருக்கும்போது உங்களுடைய ஃபேஸ்புக், டுவிட்டர், செல்போன், கேம்ஸ் இத்யாதிகளையெல்லாம் மூடி வைத்து விடுங்கள்.

கடைசியாக ஒன்று ! குடும்பம் என்பதை ஒரு மரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கணவனும் மனைவியும் அதன் வேரும் நிலமும் போல ! வேர்கள் மண்ணில் இறுக்கமாகப் பற்றியிருப்பதே மரத்தின் அடிப்படைத் தேவை. வெளியே கிளைகள் விரியலாம்,பூக்கள் மலரலாம், கனிகள் தொங்கலாம், பறவைகள் வந்து வந்து போகலாம். எல்லாமே எந்த அளவுக்கு மண்ணும் வேரும் இறுக்கமாய், நெருக்கமாய் இருக்கின்றன என்பதில் தான் இருக்கிறது. வேர் தனது பிடிப்பை விட்டு விட்டு கிளைக்கும், பறவைக்கும், மலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியேறினால், ஒட்டு மொத்த மரமே சரிந்து விடும் அபாயம் உண்டு !

குடும்ப வாழ்க்கை வளமாக அமைய வேண்டுமா ? வேராகவும், மண்ணாகவும் கணவன் மனைவி இருக்க வேண்டும். அதற்கு “உங்களுக்கே உங்களுக்கான” தனிப்பட்ட நேரங்கள் மிக மிக அவசியம்


-சேவியர்
Joseph Xavier Dasaian Tbb
நன்றி : http://sirippu.wordpress.com/
 குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1
 குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 2
 குடும்ப வாழ்க்கை ரகசியங்கள் - 3

No comments: