Wednesday, July 23, 2014

பசுமை உலகில் படர்


பாருடல் பெண்ணாள் பசும்பட் டுடுத்தி...
பனியுண்டு பாலொளியில் பாங்காய் வாய்துடைத்து....
காருடல் வேர்வை மழையில் உடல்கிடத்தி...
காணி உடைநுழைந்து மேனி செழித்திடுவாள்...!

நீருடலாம் நான்கு நிலம்திரியா நல்லியல்பை...
பேருடல் பூண்ட புடவி மிளிர்ந்திடவே...
பூச்சூட்டி மெல்ல புதுவழகு பார்த்திடுவாள்...!

சேருடல் கர்ப்பமுற்றுச் செவ்விதழ் ஆம்பலீன்று...
சீருடல் கொண்ட கலைத்தாயின் ஆசனமாய்ச்
சேய்மடியைத் தங்கத் தமிழுக்குத் தந்திடுவாள்...!

வேருடல் தாங்கும் விருட்சங்கள் இல்லாமல்...
வேறுடல்தான் இங்கேது ...? வேதாந்தம் தானேது...?
தானே விளையும் தருக்களையும் நீ...களையும் ...
ஈனம் இனிவேண்டாம்...! மானிடனே...! ஈரம்
கசியும் மனம்கொண்டு காதல் கனியும்
பசுமை உலகில் படர்...!
.......................................
_ பாவலன். தமிழ்ப்பிரியன் நசீர்.

(குறிப்பு::- இது வெண்பா வகையை சேர்ந்த பாடல்....! பல தொடுப்புகளைக் கொண்ட ப ஃறொ டை வெண்பா...!. காய் முன் நேர். / விளம் முன் நேர் / மா முன் நிரை ஆகிய தளை(கட்டு)களில் இயல்வாக விரவி அமைந்த இயற்சீர் வெண்டளை வெண்பாவாகும்...! இதன் ஈற்றுச்சீரானது "மலர் " என்னும் வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது...! )

 தமிழ் பிரியன் நசீர

No comments: