Sunday, July 13, 2014

என் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு....

என் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என் பொன்னினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நாளில் எனக்கு அவர் வாழ்த்துரை வழங்க வந்த சென்னை மேடையில் நான் அவர் பற்றி கூறியதை இடுவதில் மகிழ்கிறேன்:

இந்த மனதாலும் இவர் பேரரசர்தான்

சிப்பிகளுக்குச் சிக்காத முத்து
கரிகளுக்குள் விளையாத வைரம்
பொன்னாலும் மணியாலும்
சூழப்பெற்ற கறுப்பு நிலா
என் கன்னி மீசைக் காலந்தொட்டே
இதய மூச்சோடு விளையாடும்
கவிதை நெருப்பு உலா

இப்படியாய் கவிப்பேரரசை நான்
வைரம் முத்து பொன் மணி
என்றுமட்டுமே எண்ணியிருந்தேன்
கனடாவில் முதன் முதலில் சந்தித்த பிறகுதான்
இவர் சொன்ன சொல் தவறாத மாணிக்கம் என்றும்
புரிந்துகொண்டேன்.

வார்த்தைகளை உருக்கி உருக்கி
இவர் என் ரகசிய இதயக் குகைகளுக்குள்
பகிரங்கமாய் ஊற்றி இருக்கிறார்
அதன் கொதிப்பு தாளாமல்
நான் துடித்தெழுந்து குதித்திருக்கிறேன்

1975 ஜமால் முகமது கல்லூரியில் நான் புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கிறேன். தமிழ்ப் பேராசிரியர் மன்சூரலிகான் ஓர் இளம் கவிஞனை எங்கள் வகுப்பில் அறிமுகம் செய்கிறார். ”பன்னிரண்டு மணிகாட்டும் முட்கள் போல் நானும் அவளும்” என்ற வரிகளைச் சொல்லி என்ன புதுமை பாருங்கள் என்று வியக்கிறார். அந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் கவிப்பேரரசு வைரமுத்து. அந்தக் கவிதை வந்த நூல் வைகறை மேகங்கள் என்ற அவரின் முதல் கவிதைத் தொகுப்பு.

கவிப்பேரரசரிடமிருந்து எனக்கு இரண்டு வரங்கள் கிடைத்தன

ஒன்று என் முதல் கவிதை நூலுக்கு அற்புதமான ஓர் அணிந்துரை
இரண்டாவது இன்று தமிழகத்தில் நிகழும் என் முதல் அறிமுக விழாவில்
எனக்கு வாழ்த்துரை

ம்ம்ம்.... கவிதைகளால் மட்டுமல்ல
இந்த மனதாலும் அவர் பேரரசர்தான்

என் கவிதைக் குழந்தைகளின் முகவரிகளை
மிகச் சரியாக தமிழ் உலகத்திற்கு எடுத்துச் சொன்னார்
கவிப்பேரரசின் அணிந்துரைக்கு என் நன்றி சொல்லி மாளாது

இந்தக் கவிஞன்தான் என் கவிதைகளின் உச்சிமுகர்ந்தவன்
என்ற பெருமை எனக்கு மூன்றாம் சிறகை வெடிக்கச் செய்கிறது

நேரில் சந்தித்தால் எங்கே என் கவிஞனின் உயரம் குறைந்துவிடுமோ
என்று அஞ்சி முப்பது ஆண்டுகள் எழுத்துக்களோடு மட்டுமே
கைகுலுக்கிக் கிடந்தவன்.

நேரில் சந்தித்தேன் கடந்தமாதம். இந்தியாவில் அல்ல கனடாவில்
நேரில் சந்தித்தபோது அதனினும் உயர்ந்துநின்றார் கவிஞர்

என் நண்பர்களுக்காக தனியே என் திருமண அழைப்பிதழை நெய்தேன்
அது முழுவதும் கவிதைகளாலேயே ஆனது.

என் வாலிப வானுக்குள்
உலா வரப் போகிறாள் ஒரு வசீகர நிலா
என் பசும்புல் வெளிகளில்
எழில் கூட்டப் பூக்கிறாள் ஒரு வசந்த ரோஜா

பொழுதும்
கனவுக் காற்று வீசும் என் மனக்கரை மணலில்
நடனமிட வருகிறாள் ஓர் இளமயில்

ஆம்...
நான் என் விலா எலும்பின் விலாசத்தை விசாரித்து
மாலைமாற்ற மனங்களைக் குவித்துவிட்டேன்

எங்கள் இல்லறக் கவிதைக்கு
இனிய வாழ்த்துப் பண்ணிசைக்க
நன்நெஞ்சத்தோரே வாரீர்... வாரீர்...
என்று எழுதினேன்

அதோடு என் தாகம் தீரவில்லை. கவிஞரின் அனுமதியில்லாமலேயே

எனக்குச் சம்மதமே
நீ மாலையாய் இருப்பின்
அதில் நான்
மலர்களாய் இருக்கமட்டுமல்ல
நீ பாலையாய் இருப்பின்
அதில் நான்
மணலாய்க் கிடக்கவும்

என்ற வரிகளை அழைப்பிதழின் பின்னட்டையில் இட்டேன். அப்போதுதான் என் மனம் மகிழ்ச்சி கொண்டது

சொல்ல இனித்தால்தான் சொல், ஆயினும்
சொல்லாமல் போனாலும்
அது சொல்தானே

புள்ளி சேர்த்தால்தான் கோலம், ஆயினும்
புன்னகையால் வரைந்தாலும்
அது கோலம்தானே

கல்லை உடைத்தால்தான் சிலை, ஆயினும்
கருத்துக்குள் வடித்தாலும்
அது சிலைதானே

முல்லை மலர்ந்தால்தான் வாசம், ஆயினும்
மனதுக்குள் மலர்ந்தாலும்
அது வாசம்தானே

உள்ளம் இணைந்தால்தான் உறவு, ஆயினும்
உதிரத்தில் வெடித்தாலும்
அது உறவுதானே

வள்ளல் கொடுத்தால்தான் கொடை, ஆயினும்
வார்தையால் அளந்தாலும்
அது கொடைதானே

இல்லை உனக்குவோர் பரிசு, ஆயினும்
இதயத்தால் ஏந்திவிட்டால்
அது பரிசுதானே

பொறுப்புக்கு ஒரு பொன்னாடை தந்தேன்
அது மதிப்பிற்குறிய மாலனுக்கு

இந்த என் இருப்புக்கு ஒரு பொன்னாடை தந்தேன்
அது அம்மாவுக்கு

இப்போது கவிதை நெருப்புக்கு ஒரு பொன்னாடை தருகிறேன்
அது கவிப்பேரரசிற்கு....

நன்றி, அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி

No comments: