Saturday, August 23, 2014

அழைப்பு / கதிர் வேல்

                                              அழைப்பு

ஒரு வாசகர் எழுதி இருக்கிறார்:

‘எந்த பத்திரிகையையும் நான் நம்புவது இல்லை. ஒவ்வொரு பத்திரிகையும் அதற்கென தனிப்பட்ட சில குறிக்கோள்களுடன் செயல்படுகின்றன. உள்நோக்கத்துடன் செய்திகளை வெளியிடுகின்றன. சில செய்திகளை திரித்து அல்லது மிகைப்படுத்தி பிரசுரிக்கின்றன. சில செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன, அல்லது ஒரேயடியாக அடக்கி வாசிக்கின்றன. சமூக நலன், நாட்டு நலன் கருதி உள்ளதை உள்ளபடி வெளியிடும் இதய சுத்தியும் நேர்மையும் துணிவும் எந்த பத்திரிகைக்கும் இருப்பதாக நான் நம்பவில்லை. அதனால் சோஷல் மீடியாவில் கிடைக்கும் தகவல்களை தெரிந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறேன். வீட்டில் என் தந்தைக்காக மட்டும் ஒரு தமிழ், ஒரு ஆங்கில நாளிதழை வாங்குகிறேன். நான் அவற்றை தொடுவதுகூட கிடையாது’.
---------
அருண் ஜேட்லி பேசிய ஒரு வாசகத்துக்காக சமூக வலைதளங்களில் அவரை கண்டித்து புயல் வீசிய நிலையில், இன்று காலை பத்திரிகைகளில் அந்த செய்தி எந்த முக்கியத்துவமும் பெறாமல் உள்பக்கங்களில் மிகவும் சிறிதாக பிரசுரம் ஆகியிருக்கிறது. ட்வீட் ஒன்றில் இதை சுட்டிக்காட்டி, பிஜேபியின் மீடியா மேனேஜ்மென்ட் சாமர்த்தியத்தை பாராட்டி இருந்தேன். அதற்கு ரியாக்‌ஷனாக வந்ததுதான் மேற்கண்ட காமென்ட்.

இந்த கருத்தை வெளியிடும் முதல் வாசகர் அல்ல இவர். பலர் கூறியிருக்கிறார்கள். பிரஸ் கவுன்சில் சேர்மன் மார்கண்டேய கட்ஜு தொடங்கி செய்தியாளர் வேலையை உதறிவிட்டு கலயாண மண்டப மேனேஜராக பணியாற்றும் நண்பர் வரையில் அதிகமானவர்கள் இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். 36 ஆண்டுகள் தமிழ் செய்தி உலகத்தின் உள்ளிருந்து அனைத்தையும் கவனித்த அடிப்படையில், இந்த கருத்துடன் எனக்கு முரண்பாடு கிடையாது. தகாதவர்களுடனும் தகுதியற்றவர்களுடனும் தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதை வணிக நோக்கத்தில் நியாயப்படுத்த முயன்றவர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறேன். சறுக்கல்கள் மெல்ல மெல்ல மக்களின் நம்பிக்கை என்ற அடித்தளத்தை பலவீனப்படுத்தி பத்திரிகை என்ற பெரும் தூணையே சாய்த்துவிடும் என எச்சரித்து இருக்கிறேன்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்று குறிப்பிடுவது முதலாளிகளை மட்டுமல்ல. சக செய்தியாளர்களையும். அதோடு வாசகர்களையும். நம்பகத் தன்மை சிதைவதை தடுக்க இவர்களில் யாரும் முழு முயற்சி செய்யவில்லை. ஏனைய துறைகளில் பணியாற்றுபவர்களின் தவறுகள் ஒன்றுவிடாமல் அம்பலப்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து தவறு செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்படுவதை போல ஊடக துறையினருக்கு எந்த நிர்ப்பந்தமும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த துறையில் ஒழுங்கு கட்டுப்பாடு வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதற்கான ஒவ்வொரு முயற்சியும் அவர்களால் ஊதி தள்ளப்படுகிறது. சுய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு உருவாக்கமும் கானல் நீராக தொடர்கிறது. எந்த சட்டத்துக்கும் விதிகளுக்கும் கட்டுப்படாதவர்கள் ஊடக துறையினர் என்பது ஆபத்தான ஏற்பாடு. ஜனநாயகத்தின் மூன்று தூண்களையும் விமர்சனம் செய்யும் ஒரே துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜனநாயகத்துக்கு விரோதமான சிந்தனை. என் மரியாதைக்குரிய பத்திரிகையாசிரியர்கள் பலரும் இதை எதிரொலித்துள்ளனர்.

எல்லா பத்திரிகையும் ஒன்றுதான், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற வாதம் சரியல்ல. செய்தியாளர்களிலும் செய்தித்துறை நிர்வாகிகளிலும் நேர்மையானவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முதலாளிகளிலும் அவ்வாறு சிலரை அடையாளம் காட்ட இயலும். ஆனால் உலகமய பொருளாதார தாக்கத்தில் அவர்களெல்லாம் வாயில்லா பூச்சிகளாக பிழைக்க வேண்டிய நெருக்கடி நிலவுகிறது. இருட்டை குறை சொல்லிக் கொண்டிராமல் ஒரு மெழுகுவத்தியை ஏற்றி வைப்பது உத்தமம் என்பார்களே. அதுபோல ஒத்த சிந்தனை கொண்ட செய்தியாளர்களையும், ஊடகத்துறை சிறப்பாக இயங்க வேண்டும் என்ற அக்கறையுள்ள வாசகர்களையும் ஓரணியில் திரட்டி ஊடகங்களின் தவறுகளை இடைவிடாமல் சுட்டிக் காட்டி அவற்றை செம்மைப்படுத்தி மீண்டும் அதை வலுவுள்ள தூணாக மாற்றும் முயற்சியை தொடங்கினால் என்ன என்று பல நண்பர்கள் கேட்கின்றனர்.

இது பத்திரிகைகளுக்கு எதிரான முயற்சி அல்ல. பத்திரிகைகள் மீது பொதுமக்களுக்கு நல்லெண்ணமும் நம்பகத் தன்மையும் கரைந்து வருவதை தடுத்து நிறுத்தி அவற்றை பலப்படுத்தும் முயற்சி. பத்திரிகைகளுக்கு ரீடர்ஸ் எடிட்டர் என்ற ஆம்புட்ஸ்மேன் இல்லாத குறையை போக்கவும், பத்திரிகையின் தவறுகளை நியாயப்படுத்துவதே ரீடர்ஸ் எடிட்டரின் பணி என்ற தவறான பணிவரையை திருத்தவுமான முயற்சி. கொடுக்கும் விலைக்கு பொருள் தரமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நுகர்வோர் முயற்சியின் இன்னொரு பரிமாணம்.

எத்தனை பேருக்கு இதில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் முயற்சியை எங்கிருந்து எவ்வாறு தொடங்கலாம் என்பதற்கு டிப்ஸ் கிடைக்கும். அக்கறையும் நேரமும் உள்ளவர்கள் ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஊடகவியல், தொடர்பியல் துறைகளில் பணியாற்றும் துடிப்பான ஆசிரியர்களும், அவர்களிடம் பயிலும் எதிர்கால ஊடகர்களும் தமிழ் செய்தி துறையை உயர்ந்த தளத்துக்கு எடுத்துச் செல்ல உதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இங்கு பெயர் தெரிய வேண்டாம் என நினைப்பவர்கள் இமெயிலில் வருவதை வரவேற்கிறேன்.

நன்றியுடன்

கதிர் Kathir Vel

No comments: