Monday, August 25, 2014

மேடையேற்றும் தமிழ்

மேடை என்று ஏறிவிட்டால் அங்கே சொல்வது எது என்பதைவிட எப்படிச் சொல்லப்படுகிறது என்பதே முன்னின்று விடுகிறது. புலன்கள் ஐந்து. கண்களால் எழுத்துக்களை வாசிக்கிறோம், அது ஒரு சுகம். நாவால் எழுத்துக்களை உச்சரிக்கிறோம் அது ஒரு சுகம், செவியால் சொல்வதைக் கேட்கிறோம் அதுதான் பெருஞ்சுகம்.

மொழி கூடுகட்டிக் குடியிருப்பது நூல்களில் என்று நாம் தவறாக நினைத்திருகிறோம். அது கூடுகட்டிக் குடியிருப்பதெல்லாம் செவிப்புலன்களில் மட்டும்தான். செவி கேட்கும்போது தொடுபுலன்கூடச் சிலிர்க்கின்றது. நாசிக்குள்ளும் வாசனை என்றால் அந்தக் கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஒரு குழந்தை ஆயிரந்தான் கண்களுக்கு விருந்து வைத்தாலும் முதன் முதலில் அம்மா என்று அழைக்கும்போது பெறும் இன்பத்தைப் பிறகு எப்போதும் பெறவே முடியாது. பேசு பேசு என்று தவமிருக்காத காதல் இருக்க முடியாது. மரணப்படுக்கையும் செவிப்புலனால்தான் உயிரைப் பற்றிப் பிடித்துக் கிடக்கிறது.
செவிப்புலனைச் சிலிர்க்க வைக்கும் சிறப்பு மொழி தமிழ்தான். ஏன்? தமிழன் சங்ககாலம்தொட்டு அதற்கு முன்னும்கூட சொற்களின் சுவைபார்த்துக் கோத்தெடுத்த கவிதைகளையே நேசித்தான். எதுகை என்றும் மோனை என்றும் அசை என்றும் சீர் என்றும் மொழியை அழகுபடுத்தினான். செவி ஒன்றைச் சரியாகக் கேட்டுப் பதிவு செய்துவிட்டால் அவன் உயிர்பிரிந்தாலும் அச்செவி அதை மறப்பதில்லை.

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ

என்று பாரதி சொல்கிறான். இதைக் கேட்டால், இறந்துபோன காதலிகூட மீண்டும் உயிர்பெற்று ஓடிவருவாளா இல்லையா? இதையே மொக்கையாய் எழுதினால் உயிரோடு இருக்கும் காதலியும் செத்துப் போவாள் ;-)

என்றும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காகவே ஒரு மொழி தன் இலக்கியத்தை வடிவமைத்திருக்கிறது என்றால் அது தமிழ்தான். ஒரு குறளைக் கேட்டுவிட்டால் அது மறக்காது. ஒரு பழமொழியைக் கேட்டுவிட்டால் அது மறக்காது. உதாரணம்...

அறுக்க முடியாதவ இடுப்புல
ஆயிறத்தெட்டு அறிவாள்

படிப்பறிவே இல்லாத மக்களும் தமிழின் சுவைகுன்றாது பாடுவார்கள். அப்படியான பின்னணியைக் கொண்டதுதான் தமிழ் மொழி. உதாரணம் இந்தப் பாட்டு. இதை வைரமுத்து ஒரு திரைப்பாடலுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்று நாமறிவோம்.

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடம் நானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்
ஏட்டிலே எழுதவில்லை
எழுதி நான் படிக்கவில்லை
வாயிலே வந்தபடி
வகையுடனே நான் படிப்பேன்

எத்தனைதான் நான் என் ஊரைப்பற்றி சொல்லி இருந்தாலும் இப்படிச் சொன்னதற்கு இணை என்று நான் எதனையும் கருதவில்லை

வானூறி மழைபொழியும்
வயலூறி கதிர்வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் உரந்தையில்...

ஆகவேதான் மேடையேறினால் நான் இயன்றவரை தமிழின் தனக்கே தனக்கான சொந்த நடையைப் பின்பற்றி எழுத முயல்வேன். பின் வந்த நடையிலும் தமிழின் சொந்த நடையைக் கலந்து சுவையேற்றி மேடையேற்றுவேன்.

நேற்று ஓர் மேடையேறினேன், அதில் நூலாசிரியரின் ஆற்றலைப் பாராட்டத் தோன்றியது. அதை இப்படி எழுதி ஏற்றினேன் மேடையில். இறுதி வரிகளில் பொதுமைப்படுத்துவதற்காக சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன்.

ஊற்றுநீர்
மண்ணுடைத்தே வெளியேறும்
உறவுநீர்
கண்ணுடைத்தே கரையேறும்
ஆற்றுநீர்
அலைமிதித்தே கடலேறும்
ஆற்றல்தான்
அனைத்துக்கும் மேலேறும்
ஏற்றவான்
ஏறிக் குடியேறும்
எஃகிரும்புக் கால்களே
ஏற்றந்தான்
மாற்றமே இல்லை
பூமி உங்கள் தோள்களில்
அன்புடன் புகாரி
நன்றி : http://anbudanbuhari.blogspot.in/

No comments: