Saturday, August 23, 2014

வேட்கை / தாஜ்

கண்களுக்குப் புலப்படாத
வெற்றிக் கம்பம்
எல்லோரையும் ஈர்க்கிறது
பலரும் கூடங்கூட்டமாய் ஓடினார்கள்
ஒருவரை ஒருவர் முந்த
இடித்து தள்ளியப் படிக்கு
ஆவேசம் கொண்டு ஓடினார்கள்
நானும் ஓட ஆரம்பித்தேன்.

சிராய்ப்பு கொண்டவர்களின்
இரத்தக்கறை
வழிநெடுக இரைந்து கிடக்க
முதிர்ந்து களைத்தவர்களும்
கால் ஒடிந்தவர்களும்
பாதையோரங்களில்
ஒதுங்கிக் கிடந்தார்கள்.

பெண் பார்வையாளர்களின்
கையசைப்புகள்
ஓட்டத்திற்கு உற்சாகம் தந்தது.
எல்லோரையும்
முந்தனும் என்றே ஓடினேன்.
என்னோடு ஓடிவந்த சிலர்
சகல சக்தியையும் கொண்டு
என்னை முந்தினர்
இன்னும் சிலர்
தன் மூதாதையர்கள் குவித்து வைத்திருந்த
பொன் முகட்டுகளில்
ஏறி நின்றுகொண்டு
வெற்றி வெற்றியென்றும் மார்தட்டினர்.

ஓட்டத்தில் எனக்கு
கல்லும் முள்ளும் குத்தியது
மேல்மூச்சு கீழ்மூச்சு எடுக்க
பிராண அவஸ்த்தை
ஓட்ட வெற்றியின் நுணுக்கங்களை
கற்ற நூல்கள் சொன்னதை அறிவேன்
ஓட்டப் படபடப்பில்
அதைப் பிடித்துக்கொண்டு
ஓடுதல் இயலவில்லை.

என் ஓட்டம் மெல்ல மெல்லக் குறைய
புதிதாய் ஓடிவரும்
இளைஞர்கள் பலர்
என்னை முந்திக்கொண்டு இருந்தார்கள்.
நானோ மேட்டில் காலிடறி
பள்ளத்தில் விழுந்தேன்
அங்கே தழைத்திருந்த
தத்துவமரம் நிழல்காக்க
சுய நினைவும் திரும்பியது.
வெற்றியினை
நிர்ணயிக்க கம்பம் இல்லாதிருப்பது
மீண்டும் தெளிவானது.

என்னை முந்தியவர்கள் மீதும்
முந்துபவர்கள் மீதும்
பெரிதாய் இரக்கம் கவிழ
எல்லாவற்றையும் தாண்டி
ஓடனுமென யோசித்தேன்.
சொந்தமும் பந்தமும் சுற்றங்களும்
என் வெற்றியை காண
விடாது உசுப்பினர்.
கொண்ட வலி குறைந்தவுடன்
எழுந்தேன்...
ஓடினேன்....
கூட்டத்தோடு கூட்டமாய்.
 
 
தாஜ்தீன் Taj Deen

No comments: