Friday, August 22, 2014

எங்கள் வாசல் தேடிவந்த வசந்தமே...வா மழையே வா


ஆயிரம் குளங்கள்
கொட்டினாலும்
இப்படிக் குளிருமா ?
ஆறுகள்
பாதை மாறிவந்து
பாய்ந்தாலும்
புழுக்கம் மாறுமா ?
சூரியனை தழுவிக் கொண்டு
காற்று வந்து
தேகத்தை
தீண்டினால்
சுகம் வருமா
வியர்வை வருமா ?
அம்மம்மா...
நாளெல்லாம்
நளமாகராஜனாக
அடுப்படியில் வெந்ததுபோல்
வாட்டி எடுத்து விட்டதே
வெயில் !
வான்வெளியில்
நேற்று நடந்த
திடீர் புரட்சியில்
சூரியனை
சிறையிலடைத்துவிட்டு
வெடியும் இடியும் முழங்க
மழைக் கைதிகள்
வெளியே
சாடிவரும் காட்சி
அடடா...
மனதுக்கு மகிழ்ச்சியாகவல்லவா
இருக்கிறது !
சுதந்திரத்தின்
மாட்சியாகவல்லவா தெரிகிறது !

வா மழையே வா
மா மழையே வா...

நீ வந்தால்தான்
தரையெல்லாம் குளிர்கிறது
தலையெல்லாம் நனைகிறது !

நீ என்ன சாதாரணக் கொடையா
எங்களை குடை விரிக்க வைக்கும்
இறைவனின்
அருட் கொடையல்லவா !

எங்கள் வாசல் தேடிவந்த
வசந்தமே...
எங்கள்
உள்ளம் குளிர்வதுபோல்
நீயும் குளிர்ந்து
உன் கர்ப்பமும் வளர்ந்து
வளம் கொழிக்கட்டும்
வாழ்க ...வாழ்க !
கவிதை ஆக்கம் : அபு ஹசிமா வாவர் 

No comments: