Thursday, September 11, 2014

அம்மாவின் கல்யாணப் பட்டுப்புடவை

காலப்பெட்டகத்தின் சீரான
நினைவு அடுக்குகளை
வரிசைப்படுத்துவது போல
மடிப்பாக..
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
அந்தப் பட்டுப்புடவை!

மாப்பிள்ளையைத் தேடியதற்குச்
சற்றும் குறையாமல்
தேடி வாங்கிய புடவையென
எடுக்கும் போதெல்லாம்
பெருமிதத்தோடு அம்மா சொல்வாள்!

எத்தனை வருடம் ஆனாலும்
அதை அணியும்போதெல்லாம்
அம்மாவின்
நினைவுகளிலும்,நடத்தையிலும்
ஒரு மணமகள் வந்து
கூச்சத்தோடு அமர்ந்துகொள்கிறாள்!

கடந்து செல்லும்
காலத்தின் மீதான
மிச்சம் இருக்கும்
காற்றின் வாசமாய்
அந்துருண்டைகளையும்
வாசனைத் திரவியங்களையும்
தன் மேல் சுமந்து அவள்
நினைவுகளுக்கு நறுமணமூட்டுகிறது!

அம்மாக்களின்
கல்யாணப் புடவைகளைப்
பார்க்கும் ஒவ்வொரு முறையும்...
அப்பாக்களின் பட்டுவேட்டிகளை
நாம் பார்த்ததே இல்லை என்ற
உண்மை சற்று ஓங்கி
அறைந்துவிட்டுச் செல்கிறது!

No comments: