Sunday, September 14, 2014

இது ...விலை முடியும் காலம் ! கருத்தம்மா ...இனி நீதான் வெளுத்தம்மா !

இது ...
விலை முடியும் காலம் !

கருத்தம்மா ...
வாய்மை தவறு !
பணத்தை
விலைக்கு வாங்கு !
வெள்ளையடி !
இனி நீதான்
வெளுத்தம்மா !

நீதியின்
விரலை ஒடி !
ஊனமான விரலுக்கு
ஆளுநர் மோதிரம் அணி !
நியாயத்தின்
லட்சணம் பல்லிளிக்கும் !

எதிரிகளை துரத்து
வேட்டையாடு
வழக்குப்போடு
அலைய வை
அலற வை !
அத்தனை அவதூறுகளுக்கும்
அசரவில்லையென்றால்
அணைத்துக்கொள்
அதன்பிறகு
அனைத்தையும் கொல் !

ஆயுதங்களுக்கு ஆசீர்வாதம் செய்
ரத்தத்தில் குளி
சமாதிகளில் நின்று
அகிம்சை மொழி
இன்னொரு மகாத்மா என்று
அடைமொழி ஒன்றை
உன் பெயரோடு
ஒட்டிக் கொள்
இறந்தவன் ஆத்மா
ஆசீர்வதிக்கும் !

கால்களில் விழு
வஞ்சகத்தோடு எழு
வெற்றிகொள்
உன்னை விழ வைத்தவனை
உன் காலில் விழ வை
அவன் தலை நிமிர விடாமல் மிதி
இதுதான்
அரசியல் விதி !

அழைப்பு விடு
வரும் நேரம் கதவடை
காத்திருப்பவன்
கண்ணியத்தை
ஊடகத்தில் பறக்க விடு
நடை பயணம் போனால்
பாதையை பள்ளமாக்கு
மீறி நடந்தால்
கால்களை காயமாக்கு
கலிங்கத்துப் பாடிகளை
பட்டிக்குள் கட்டி வை
வால்கள் நன்றி ஆட்டும் !

எங்கேயும்
எப்போதும்
சிரி
வஞ்சத்தை
வன்மத்தை
துரோகத்தை மறைத்து சிரி !
அந்த ஆனந்தச் சிரிப்பை
வீதி ஓரங்களில் ஒட்டி வைத்து
மக்களுக்குப்
படம் காட்டு
மற்றவர்களையெல்லாம்
ஓரம் கட்டு
ஏமாளிகளைக் கொண்டு
கோட்டைக் கட்டு !

வழக்குகளை
இமயம் வரை
இழுத்தடி
நீதிபதிகளின்
நெருப்படிகளை
உன் செருப்படிகளால் மிதி
நீதிக்குத் தலைவணங்கியென்று
உலகமே
உன்னை வாழ்த்தும் !

அவனை
தீவிரவாதியென்றும்
இவனை
போராளியென்றும்
சமூகத்துக்கு சொல்லி வை
பணத்துக்கு சோரம் போன
அந்த வேசித்தனத்தை
பத்திரிகை தர்மமென்று
உளறி வை
நாய்களும்
நரிகளும் பாராட்டும் !

பேசு...
உலக மொழிகளல்லாம் பேசு
பேச்சில் மயங்காதவர்களை
மதுவால் மயங்க வை
தேசம்
சேதமானாலும்
நடமாடும் தெய்வமென்று
ஜால்ராக்கள் இசை பாடும் !

எல்லாம் தெரியுமென்று
பிதற்று !
வரலாறுகளை மாற்று !
கொலைகாரனை
அவதாரமாக்கு
நவீன சிற்பியென்று
உன்னைச் சொல்
"ஆமாம் " என்று
ஊடகங்கள் ஊளையிடும் !

மக்கள் மறந்தாலும்
இந்த
விலையுதிர் காலத்தின்
வெட்கக் கேடுகளை
வரலாறு மறக்காது !
வரலாறு மறக்காது !

கவிதை யாத்தவர் :அபு ஹ்ஷீமா வாவர் 
                                              நன்றி அண்ணன்  அபு ஹ்ஷீமா வாவர்   அவர்களுக்கு         
                                                                        Abu Haashima Vaver

No comments: