Friday, September 19, 2014

திருக்குர்ஆனும் திருக்குறளும்

மனிதன் இறைவழியை விட்டுத் திசைமாறிச் சென்றபோதெல்லாம் அவனைச் சரியான வழியில் செலுத்த அவ்வப்போது இறைத்தூதர்கள் இத்தரைக்கு அனுப்பப்பட்டுக்கொண்டே இருந்தனர். ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஒவ்வோர் இறைத்தூதரை அல்லாஹ் அனுப்பிவைத்தான். அந்த இறைத்தூதர்கள் அந்தந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் அவர்களின் மொழியைப் பேசுபவர்களாகவும் இருந்துள்ளனர். அவரவர்களுக்கெனத் தனிப்பட்ட வேதங்களையும், ஆகமங்களையும் இறைவன் வழங்கியே வந்துள்ளான்.

அனைத்துச் சமுதாய மக்களுக்கும் இறைவன் தன் தூதர்கள் மூலம் அனுப்பிய செய்தி, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதேயாகும். கொள்கையளவில் அனைத்துச் சமுதாயத்தாருக்கும் ஒரே செய்திதான். ஆனால் சட்டதிட்டங்களோ ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒவ்வொருவிதமாகவே இருந்தன. ஒரு சமுதாயத்துக்குத் தடைசெய்யப்பட்டவை மற்றொரு சமுதாயத்திற்கு ஆகுமாக்கப்பட்டன. ஒரு சமுதாயத்திற்கு ஆகாதவை வேறொரு சமுதாயத்திற்கு ஆகுமானவையாக இருந்தன. குறிப்பாக, வணக்க வழிபாட்டு முறைகளிலும், புனித நாள் என்பதிலும் மாற்றங்கள் இருந்தன.

ஒவ்வொரு மொழி பேசுபவருக்கும் அவர்தம் மொழியைப் பேசக்கூடிய தூதரை நாம் அனுப்பிவைத்தோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் இறைத்தூதர் வந்திருக்கலாம்தானே? அவருக்கென ஒரு வேதம் வழங்கப்பட்டிருக்கலாம்தானே? அந்த இறைத்தூதர் திருவள்ளுவராக இருக்க வாய்ப்புண்டா? அந்த மறை திருக்குறளாக இருக்கலாமா? இது பற்றிய ஆராய்ச்சியை அறிஞர்கள் பலர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தூதர் எந்தக் காலத்தில் வந்திருப்பார்? இந்த மறையை யார் எழுதியிருப்பார்? திருக்குறளைப் பொறுத்தவரை இஸ்லாமியக் கொள்கைக்கு முரணான கருத்துகள் என்று எதையும் குறிப்பிட்டுக் கூற இயலாது. அதேநேரத்தில் இறைமறையின் மூலமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமும் கூறப்பட்டுள்ள கருத்துகள் சிலவற்றிற்கு முரணாக இருந்தாலும் பல்வேறு கருத்துகள் முஹம்மது (ஸல்) அவர்களின் கருத்துகளுக்கு ஏற்பவே இருப்பதைக் காணமுடிகின்றது.

இது ஓர் இறைவேதம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை. 1. சுருங்கக் கூறி நிறைந்த பொருளைத் தருவது 2. சிந்தனைக்கேற்ற பொருள்கொள்ளத்தக்க முறையில் விரிந்துகொடுத்தல், 3. ஈராயிரம் ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருதல், 4. இலக்கிய நயமான முறையில் அமைந்திருத்தல்-இவை போன்ற காரணங்களால் திருக்குறள் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் இறைவேதமாக இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குவதில் வியப்பில்லை.

அது மட்டுமின்றி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி முந்தைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். கல்கி புராணம், தவ்ராத், இஞ்சீல் போன்ற வேதங்களிலும் முஹம்மது நபியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த வரிசையில் திருக்குறளும் இடம்பெறுகிறது. இதிலும் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளார் வள்ளுவர்.

தோன்றின் புகழொடு தோன்றுக -அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று. (பொருள்: இவ்வுலகில் பிறந்தால் முஹம்மது நபியின் சமுதாயத்தில் தோன்றுக. அவ்வாறில்லையெனில் இவ்வுலகில் தோன்றாமல் இருப்பதே மேல்). இதிலுள்ள புகழ் எனும் பதம் புகழுக்குரியவர் எனும் பொருள்கொண்ட முஹம்மது நபியைக் குறிக்கிறது என்று கூறலாம்.

நான் நபியாக இருப்பதைவிட முஹம்மது நபியின் சமுதாயத்தில் ஒருவராக இருப்பதையே விரும்புகிறேன் என்று மூசா (அலை) கூறினார்கள். முஹம்மது நபியின் சமுதாயம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை மூசா நபியின் வார்த்தையின் மூலம் நாமறிவதைப் போலவே திருவள்ளுவர் மூலமும் நாம் தெரிந்துகொள்ளலாம். ஆக, இவையெல்லாம் இது ஓர் இறைவேதமாக இருக்கலாம் என்ற கருத்துக்கு வலுசேர்க்கின்றன.
இறைநம்பிக்கையின் அடிப்படைகள் ஏழுக்குள், “அவனுடைய வேதங்களையும் நான் நம்பிக்கை கொள்கிறேன்” என்பதும் அடங்கும். அந்த அடிப்படையில், இதைத் தனியாகக் குறிப்பிட்டு, இந்த இறைவேதத்தை நம்புகிறேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும் அவனுடைய வேதங்களை நம்புகிறேன் என்ற சொற்றொடருக்குள்-இது இறைவேதமாக இருந்தால்-இதுவும் அடங்கிவிடும் என்பதில் ஐயமில்லை.
இதை வலுப்படுத்தும்விதமாக புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பில் 7542ஆம் எண்ணில் ஒரு நபிமொழி காணப்படுகிறது. வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம். (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் சந்ததியருக்கும் அருளப்பட்டதையும், மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்டதையும் மற்றும் நபிமார்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம் என்று கூறுங்கள்” எனக் கூறினார்கள். (திருக்குர்ஆன்: 2: 136)

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்குமுன் உயர்ந்தோன் அல்லாஹ் உலக மக்கள் யாவருக்கும் பொதுவான இறைத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளிய வேதமாகும். இது முப்பது பகுதிகளையும், 114 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. இதில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் 6666 இறைவசனங்கள் உள்ளன. எங்கெல்லாம் முஸ்லிம்கள் உள்ளனரோ அங்கெல்லாம் திருக்குர்ஆன் பிரதி கண்டிப்பாக இருக்கும். இது முஸ்லிம்கள் நாள்தோறும் தொழுகின்ற ஐங்காலத் தொழுகையில் ஓதப்படுவதோடு, பிற நேரங்களிலும் இது ஓதப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

திருக்குறள்

திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது 23 நூற்றாண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட நூலாகும். இது உலகப் பொதுமறை என்று தமிழர்களால் அழைக்கப்படுகிறது. இது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று அத்தியாயங்களைக் கொண்டது. 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரத்திலும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்களைக் கொண்டதாகும். இதில் சிறிது பெரிது என்ற வித்தியாசமின்றி அனைத்துமே ஈரடிகளைக் கொண்டதாகும்.

குர்ஆனும்-குறளும்

இஸ்லாத்தின் அடிப்படையே ஏகத்துவம்தான். அல்குர்ஆனுக்கு முன்னர் வழங்கப்பட்ட வேதங்களிலும், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏகத்துவப் பரப்புரை செய்த இறைத்தூதர்கள் வலியுறுத்தியதும் ஏகத்துவம்தான். அதுபோல் திருக்குறளில் உள்ள முதல் குறளும் ஏகத்துவம் பற்றியதுதான். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி-பகவன் முதற்றே உலகு (1) (பொருள்: எல்லா மொழி எழுத்துகளும் அ எனும் ஓசையுடைய எழுத்தையே முதலாகக் கொண்டுள்ளது. அதுபோல் இவ்வுலகத்தின் தொடக்கம் இறைவன் ஆவான்.)

இக்குறளைப் படிக்கின்றபோது, அல்இக்லாஸ் அத்தியாயத்தின் பொருளாகிய, அல்லாஹ் ஒருவன்; அவன் தேவையற்றவன்; அவன் (யாரையும்) பெற்றெடுக்கவுமில்லை; அவனை (யாரும்) பெறவுமில்லை; அவனுக்கு நிகராக யாரும் இல்லை என்று நபியே நீர் கூறுவீராக!-என்பதுதான் ஞாபகம் வருகிறது.

ஏகத்துவத்தில் தொடங்கி, படிப்படியாக மனித வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளும் ஒழுக்கங்களும், பண்புகளும் போதிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள பொய்யாமை, புறங்கூறாமை, களவாமை, சினங்கொள்ளாமை, பொறுமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவு நிலைமை போன்ற எண்ணற்ற நற்பண்புகள் திருக்குறளிலும் போதிக்கப்படுகின்றன.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்-நிலமிசை நீடுவாழ் வார் (2) (பொருள்: அடியாரின் உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவார்.) இக்குறளைப் படிக்கின்றபோது, அல்லாஹ்வின் நினைவைக்கொண்டே உள்ளங்கள் அமைதியடைகின்றன (13: 28) எனும் திருக்குர்ஆன் வசனம் ஞாபகம் வருகிறது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்-மெய்ப்பொருள் காண்ப தறிவு (423) (பொருள்: எச்செய்தியை எவரிடமிருந்து கேட்டாலும் அது உண்மையா, பொய்யா என ஆராய்ந்தறிவதுதான் அறிவுடைமையாகும்.) அறிவுடைமை எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோது (49: 06) இறைநம்பிக்கைகொண்டோரே! தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டுவந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிடாமல் இருப்பதற்காக (அதன் உண்மையை அறிவதற்காக அதைத் தீர விசாரித்துத்) தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள் (49: 06) எனும் திருக்குர்ஆன் வசனத்தை ஞாபகப்படுத்துகிறது.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை-அடுத்தூர்வது அஃதொப்பது இல். (621) (பொருள்: துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் புன்முறுவல் செய்துவிடு; ஏனென்றால் அதனை அடுத்து வருவது இன்பமே ஆகும்.) இடுக்கணழியாமை எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோது, திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பமே. திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பமே (94: 5-6) எனும் திருக்குர்ஆன் வசனங்களை ஞாபகப்படுத்துகிறது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்-அறங்கூறும் ஆக்கம் தரும். (183) (பொருள்: பிறரைப் பற்றிப் புறங்கூறி, பொய்சொல்- வாழ்வதைவிடத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோவது மேல்) இதன்மூலம் புறங்கூறுவதின் கடுமையை நாம் விளங்கிக்கொள்ளலாம். புறங்கூறாமை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, உங்களுள் ஒருவர் மற்றொருவரைப் புறம்பேச வேண்டாம். உங்களுள் ஒருவர் தம் சகோதரரின் இறைச்சியை, அவர் இறந்துபோன நிலையில் (அதிலிருந்து பிய்த்து) உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுப்பீர்கள் (49: 12) என்ற இறைவசனமே நினைவில் வந்து நிழலாடுகிறது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்-உள்ளத் தனைய துயர்வு (595). (பொருள்: நீர்ப்பூக்களின் தண்டுகள் நீரின் ஆழத்தைப் பொறுத்து நீளும். அதுபோல் மக்களின் ஊக்கத்தைப் பொறுத்ததே அவர்களின் உயர்ச்சி). ஊக்கமுடைமை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, ஒவ்வொருவரும் தத்தம் எண்ணப்படியே செயல்படுகிறார்கள் என்று நபியே நீர் கூறுவீர் (17: 84) எனும் இறைவசனம் நினைவுக்கு வருகிறது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து-நோக்கக் குழையும் விருந்து (90). (பொருள்: மிகவும் மெல்லிய அனிச்சம்பூ மோந்து பார்த்தாலே வாடிவிடும். அதுபோல் விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடிவிடுவர்.) விருந்தோம்பல் எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, அல்அஹ்ஸாப் அத்தியாயத்திலுள்ள 53ஆம் இறைவசனம் ஞாபகம் வருகிறது.

இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டு, அதற்கு அனுமதிக்கப்பட்டாலே தவிர, அது தயாராவதை எதிர்பார்க்காமல் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளுக்குள் நுழையாதீர்கள். எனினும் நீங்கள் அழைக்கப்பட்டால், அப்போது நுழையுங்கள். பின்னர் நீங்கள் உணவை உண்டுவிட்டால், (அங்கிருந்துகொண்டே) பேசுவதில் விருப்பம் கொண்டவர்களாக ஆகிவிடாமல் கலைந்து சென்று விடுங்கள். திண்ணமாக இது நபிக்குத் தொந்தரவு கொடுப்பதாக உள்ளது. ஆகவே (அதை) அவர் உங்களிடம் கூற வெட்கப்படுகிறார். உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (33: 53)

தம் இல்லத்துக்கு விருந்துண்ண வந்தவர்களை, “நீங்கள் உணவுண்டுவிட்டால் செல்ல வேண்டியதுதானே?” என்று முகத்தில் அறைந்தாற்போல் எப்படிக் கூறுவது என்ற கையறு நிலையில் இருந்த நபி (ஸல்) அவர்களைப் பார்த்த இறைவன் விடுத்த கட்டளையே இந்த வசனம். நபியின் அழகிய விருந்தோம்பல் பண்பு இதிலிருந்து வெளிப்படுகிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு-என்புதோல் போர்த்த உடம்பு (80). (பொருள்: அன்புடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர். அஃது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே ஆவார்.) அன்புடைமை அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, ஆலுஇம்ரான் அத்தியாயத்திலுள்ள 159ஆம் இறைவசனம் ஞாபகம் வருகிறது.

(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (அன்புள்ளவராக) நடந்துகொள்கிறீர். (3: 159) மேலும், “நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அன்பாளராகவே அனுப்பியுள்ளோம்” என்ற இறைவசனத்தின் மூலம் நபி (ஸல்) அவர்கள் மக்கள்மீது மிக்க அன்பாளராக இருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்-சொல்லிய வண்ணம் செயல் (664). வினைத்திட்பம் எனும் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோதெல்லாம், அஸ்ஸஃப் எனும் அத்தியாயத்தில் உள்ள இறைவசனமே ஞாபகம் வருகிறது: இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கின்றீர்கள்? (61: 2)

ஆக, திருக்குறளில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துகள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தழுவி உள்ளன என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

பொய்யாநபியின் பொய்யாமொழிகள்

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையாக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொய்யாமொழிகளும் அதன் கருத்துகளும் திருக்குறளின் கருத்துகளோடு இயைந்து அமைந்துள்ளதை நாம் காணமுடிகிறது.
இனிய உளவாக இன்னாத கூறல்- கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100). (பொருள்: இனிய சொற்கள் இருக்க, அவற்றை விடுத்துக் கடும் சொற்களைக் கூறுவது பழம் இருக்கின்றபோது காயைக் கடிப்பதைப் போன்றதாகும்). இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் கூற்றே ஞாபகம் வருகிறது.

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டுள்ளாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும். (நூல்: புகாரீ-6138)

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த-நன்மை பயக்கும் எனின் (292). (பொருள்: பிறருக்கு நன்மை பயப்பதாக இருந்தால் பொய்யும் பேசலாம். அதுவும் வாய்மையே.) வாய்மை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் கூற்றே நெஞ்சில் நிழலாடுகிறது.

மூன்றில் தவிர பொய் ஆகுமானதில்லை. 1. ஒருவன் (தன்) மனைவியிடம், அவளைத் திருப்திப்படுத்துவதற்காகப் பொய்சொல்லுதல். 2. போரில் பொய் சொல்லுதல், 3. மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகப் பொய்சொல்லுதல். (நூல்: திர்மிதீ-1862)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு-மாடல்ல மற்றவை யவை (400). (பொருள்: என்றும் அழியாத செல்வம் கல்வியே. மற்றவை எல்லாம் உண்மையான செல்வம் ஆகா.) கல்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோது, “கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமை” என்று அண்ணல் நபியவர்கள் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன. (இப்னுமாஜா-224)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண-நன்னயம் செய்து விடல் (314). (பொருள்: தனக்குத் தீமை செய்தவர்களுக்கும் அவர்கள் வெட்கப்படுமாறு நன்மை செய்வதே அவர்களுக்குரிய தண்டனையாகும்). இக்குறளைப் படிக்கின்றபோது தீமை செய்தவருக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

அதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், உம் உறவைத் துண்டித்தவரோடு நீ சேர்ந்து வாழ்; உனக்கு(க் கொடுக்காமல்) தடுத்துக்கொண்டவருக்கு நீ கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு. (நூல்: அஹ்மத்-16810)

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே-நாவினால் சுட்ட வடு (129). (பொருள்: ஒருவரைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும். ஆனால் அவனது நாவால் சுட்ட சுடுசொல் என்றும் மாறாமல் அவனை வேதனைப்படுத்திக்கொண்டே இருக்கும்). அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, நாவினால் ஏற்படும் தீமையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இக்கருத்தை ஒட்டி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைக் காணும்போது நாவின் உச்சக்கட்ட விபரீதத்தைப் புரிந்துகொள்ளலாம். அல்லாஹ்வின் தூதரே! என்னில் தாங்கள் மிகவும் அஞ்சக்கூடிய உறுப்பு எது? என்று நான் வினவினேன். அதற்கவர்கள், தம் நாவைப் பிடித்துக்கொண்டு, இது என்று கூறினார்கள் என சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: திர்மிதீ)

ஆக, திருக்குறளைப் படிக்கின்றபோது திருக்குர்ஆனின் கூற்றுகளையும், திருத்தூதரின் பொய்யாமொழிகளையும் சார்ந்த எண்ணற்ற கருத்துகளை நாம் தெரிந்துகொள்ளலாம். நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் நாம் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். “ஞானம் நிறைந்த சொல் ஓர் இறைநம்பிக்கையாளரின் காணாமல் போன சொத்து. அது எங்கு கிடைக்கப்பெறினும் அதை எடுத்துக்கொள்ள அவர் முற்றிலும் தகுதியுடையவர்” (திர்மிதீ-2611) என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய கூற்றை நினைவில்கொண்டு அறிவைத் தேடுவோம். வெற்றியடைவோம்!

Note : Not my own essay..

Sakthi Vel T

source :
1)http://hadi-baquavi.blogspot.in/2012/11/blog-post_21.html
ref :
2)https://docs.google.com/file/d/0Bz1OumJznV7ubzRlTmJiZkFvTEU/edit
3)http://nidurseasons.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D
4)http://nagoori.wordpress.com/2010/01/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/
5)http://www.newbooklands.com/new/product1.php?catid=26&&panum=11457





No comments: