Thursday, October 16, 2014

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2)

நாடக வாழ்க்கை

1951-ஆம் ஆண்டில்தான் ரவீந்தருக்கும்  எம்.ஜி.ஆருக்கும் இடையே இணையில்லாத ஒரு நெருங்கிய பந்தம் ஆரம்பமாகியது. எம்.ஜி.ஆருடன் ரவீந்தருக்கு தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதை இதற்கு முந்தைய பதிவில் நான் விளக்கமாக எழுதியிருந்தேன்.

1953-ஆம் ஆண்டு  “எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற  நாடகக் குழுவை எம்.ஜி.ஆர். தொடங்கினார்.  இம்முயற்சிக்கு  உறுதுணையாக  இருந்து செயல்பட்டவர்  ரவீந்தர்.  அதற்கான ஆயத்தப்பணிகளை முறையாக நிறைவேற்ற முழுஉத்வேகத்துடன் அயராது பாடுபட்டார். இவர்கள் இருவருக்குமிடையே  நிலவிய இந்த கலையுறவு பந்தம் இறுதிவரை நிலைத்திருந்தது.  கடைசிவரை எம்.ஜி.ஆரின் விசுவாசியாகவே இவர் காலம் தள்ளினார்.

விசுவாசம் என்பது நாகூர்க்காரர்களுக்கே உரித்தான உயர்ந்த குணம் போலும். எப்படி நாகூர் ஹனிபா இன்றுவரை திமுகவுக்கும், கலைஞருக்கும் அசைக்க முடியாத விசுவாசியாக இருக்கிறாரோ அதுபோல இறுதிமூச்சு வரைக்கும் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருந்தவர் ரவீந்தர்.
தன்னுடைய  சுகபோக நாட்களிலும் கடினமான சூழ்நிலையிலும் தனக்கு தோள் கொடுத்த ரவீந்தருக்கு எம்.ஜி.ஆர் நன்றிக்கடன் செலுத்தினார்.  ஆம். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு அவருக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது வழங்கி “கலைமாமணி”  பட்டம் தந்து  கெளரவித்தார். இப்பொழுதாவது தனது எழுத்தாற்றலுக்கு ஊரறிய அங்கீகாரம் கிடைத்ததே என உள்ளம் பூரித்தார் ரவீந்தர்.

(மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. “ஆனைப்பசிக்கு சோளப்பொறி” என்று. இந்த தருணத்தில் ஏன் அந்த பழமொழி என் ஞாபகத்திற்கு வந்து தொலைந்தது என்று எனக்கு புலப்படவில்லை)

எம்.ஜி.ஆரின் நாடக வாழ்க்கை அவரது  ஏழாவது வயதிலிருந்தே தொடங்கி விட்டது.  குடும்ப சூழ்நிலை காரணமாக அவரும், அண்ணன் சக்கரபாணியும் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பேனி’யில் சேர்ந்தனர். அதன்பின்  ‘கிருஷ்ணன்  நினைவு நாடக சபா’, ‘உறையூர் முகைதீன் நாடக கம்பெனி’  போன்றவற்றில் பணியாற்றிய  பிறகுதான் “ எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற பெயரில் இந்த நாடகக்குழுவை அவர் உருவாக்கினார். திரையுலகில் எம்.ஜி.ஆர். கால்பதித்து முன்னுக்கு வந்துக்கொண்டிருந்த நேரம் அது. எம்ஜிஆருக்கு பக்கபலமாக, நாடக சபாவின் வெற்றிக்கு கண்ணும் கருத்தாக இருந்து பாடுபட்டார்  ரவீந்தர்.

ரவீந்தரின் கைவண்ணத்தில்  உருவான “அட்வகேட் அமரன்”, “சுமைதாங்கி”, “இன்பக்கனவு” முதலான நாடகங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த நாடகங்கள் அரங்கேறி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது. சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ஆரின் “மணிமகுடம்” நாடகத்தையெல்லாம் ஓரங் கட்டி பெருத்த வரவேற்பைப் பெற்றது

[ரவீந்தரின் நாடகங்களைப் பற்றிய முழுவிவரங்களை நாம் அடுத்த பதிவில் விரிவாகக் காண்போம்].

அதே 1953-ஆம் ஆண்டில்  “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.  இந்த இரண்டு நிறுவனத்திற்கும்  ஆர்.எம். வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக எம்.ஜி.ஆர். நியமித்தார்.

ரவீந்தருக்கு ‘கிரகணம்’  பிடிக்கத் தொடங்கியதும் வீரப்பன் நுழைந்த பிறகுதான். “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மறுப்பதைப்போல” ரவீந்தரின் வாழ்க்கைக்கு பலவிதத்தில் முட்டுக்கட்டை போட்டார் வீரப்பன். “வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்ட கதை”யாகி விட்டதே என்று பின்னர் எம்.ஜி.ஆர். குடும்பத்தார்களும் வருந்தினர்.

வீரப்பனைப் போன்று “மஸ்கா, பாலீஷ்” கலையை ரவீந்தர் அறிந்து வைத்திருக்கவில்லை. “காக்கா” பிடிக்க அவருக்கு அறவே தெரியாது. நாடகக்குழு நிர்வாகி என்ற பொறுப்பையும், எம்.ஜி.ஆருடன் இருந்த பரஸ்பர நெருக்கத்தையும்  முழுவதுமாக பயன்படுத்தி  முழுபலனையும் அடைந்துக் கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். (அவர் ஆர்.எம்.வீ. ஆனதும்  இராம.வீரப்பன் ஆனதும் பிற்பாடுதான்)

‘பெரியவர்’ என்று அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் மைத்துனர் கே.என்.குஞ்சப்பன்தான் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர்.நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸின் பொறுப்பாளராக இருந்தார். (மேலேயுள்ள படத்தில் கடைசி வரிசையில் வலதுகோடியில் நிற்பவர்). கொஞ்சம் கொஞ்சமாக குஞ்சப்பனை எம்.ஜி.ஆரின் பரஸ்பர நெருக்கத்திலிருந்து அப்புறப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார் விரப்பன்.

1963-ஆம் ஆண்டு வீரப்பனுக்கு சொந்தமாக படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை  திடீரென்று முளைத்தது.  “நான் சொந்தத்தில் ஒரு படம் எடுக்கணும் அதில் நீங்களே நடிக்கணும். அந்த படத்திற்கு எல்லா பொறுப்புகளையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று நேரம் காலம் பார்த்து எம்.ஜி.ஆரிடம்  கோரிக்கை வைத்தார். கோரிக்கை வைத்தார் என்று சொல்வதைவிட ‘செக்’ வைத்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.  (எல்லா “பொறுப்புகளையும்” என்று சொன்னால் “முதலீடு” அனைத்தும் நீங்கள்தான் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்).”நீங்க அரிசி கொண்டு வாங்க, நாங்க உமி கொண்டு வருகிறோம். நாம இரண்டு பெரும் ஊதி ஊதி சாப்பிடலாம்” என்ற பழமொழியை எங்களூர்க்காரர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

மற்றவருடைய முன்னேற்றத்தில் தடை போடுபவரா எம்.ஜி.ஆர்? உடனே அவருக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார்.

எம்.ஜி.ஆருடைய பலத்தையும்,  பலவீனத்தையும்,  நன்கு அறிந்து வைத்திருந்தவர் வீரப்பன். எம்.ஜி.ஆர் தன் அன்னை சத்யா மீது அளப்பரிய பாசம் வைத்திருந்தார். அது வீரப்பனுக்கும் நன்றாகத் தெரியும். தினமும் தன் அன்னையின் படத்திற்கு முன்பு சற்று நேரம் நின்று தியானம் செய்துவிட்டுதான் தன் வேலையைத் தொடங்குவார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். அனுமதி கொடுத்த அடுத்த மாதமே  “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் சினிமா பட நிறுவனம்  ஒன்றை ஆரம்பித்து விட்டார் கெட்டிக்காரரான வீரப்பன். மளமளவென்று எம்.ஜி.ஆரை வைத்து படங்களைத் தயாரித்து பெரிய அளவில் சமூக அந்தஸ்த்தையும்  எட்டி விட்டார்.  பிறகென்ன?  அதன்பின் அரசியல்களத்தில் அவர் அடைந்த வெற்றிகள், பதவிகள், சாதனைகள் எல்லோரும்  நன்கு அறிந்ததே.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் ஆஸ்தான கதை வசனகர்த்தாவாக வெறும் ரூ 150/-ல்  தன் கலைப்பணியைத் தொடங்கி ரூ 1500- வரை எட்டிய சாதனையே  ரவீந்தர் அடைந்த மிகப்பெரிய  பலன்.  “காற்றுள்ளபோதே தூற்றுக்கொள்”ளத் தெரியாதவராக இருந்தார் ரவீந்தர்.

“நாடோடி மன்னன்”,  “அடிமைப் பெண்” , “உலகம் சுற்றும் வாலிபன்” ஆகிய மூன்று படங்களை எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்தது. இந்த மூன்று படங்களிலுமே மற்றவர்களின் பெயர்கள் Star Value-க்காக அலங்கரித்த போதிலும் போதிலும் கதையாக்கத்திலும், உரையாடல்களிலும்  ரவீந்தரின் பங்களிப்பே  நிறைந்திருந்தது. நாடோடி மன்னன் படத்திலாவது ரவீந்தரின் பெயர் கண்ணதாசனோடு இணைத்து பட டைட்டிலில் மட்டும் காட்டப்பட்டது. மற்ற இரண்டு படங்களிலும் அவருடைய பங்கு முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது.

கதை இலாகா

பெரும் படத்தயாரிப்பு நிறுவனங்கள் “கதை இலாகா” என்ற ஒன்றை ஏற்படுத்தி வைத்திருந்தனர். உதாரணமாக பக்தி படங்களையும், விலங்குகளை வைத்தும் படம் தயாரித்த சாண்டோ எம்.எம்.சின்னப்பா தேவரும்,  “சந்திரலேகா”, “ஒளவையார்”, “வஞ்சிக்கோட்டை வாலிபன்” போன்ற பிரமாண்டமான படங்களை தயாரித்த ஜெமினி எஸ்.எஸ்.வாசனும்,  மற்றும் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனமும் “கதை இலாகா” என்ற பெயரில் குழுவொன்றை நியமித்திருந்தனர்.

படக்கதையை எப்படி கொண்டு போனால் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைக்கும்?;  பாடல் காட்சியை எப்படி அமைக்கலாம்?, கிளைமாக்ஸ் காட்சியை எப்படி அமைத்தால் விறுவிறுப்பாக இருக்கும்?; சண்டைக் காட்சிகளில் என்னென்ன புதுமை நிகழ்த்தலாம்?  போன்ற  பல்வேறு விஷயங்களை விவாதிப்பது இந்த கதை இலாகாவினரின் தலையாய பணியாக அமைந்திருந்தது.

இரவு, பகல் என்று காலநேரம் பாராமல், விழித்திருந்து, ஊண் உரக்கமின்றி, முழுமூச்சாய் பாடுபட்டு கதை-வசனம் எழுதிய ரவீந்தரின் உழைப்பு பெரும்பாமையான படங்களில் புறக்கணிக்கப்பட்டு அவர் வஞ்சிக்கப்பட்ட நிகழ்வுகள் நம்மை கொதிப்படைய வைக்கின்றன. இப்படி திரைக்குப்பின்னால், எந்தவித சுயவிளம்பரத்தையும்  எதிர்நோக்காமல், படத்தின்  வெற்றியே  தன் குறிக்கோளாக எண்ணி தன்னை அர்ப்பணித்துக் கொண்ட   அப்பாவி மனிதர்தான் இந்த ரவீந்தர்.

கலைஞர் மு.கருணாநிதி, (முரசொலி) சொர்ணம்,  போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், கதை-வசனம் எழுதிய ரவீந்தருக்கு – சுவரொட்டிகளிலோ அல்லது டைட்டிலிலோ  அறவே கொடுக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதுபோன்ற பாரபட்சத்தையும், இருட்டடிப்பையும், பாகுபாட்டையும் ரவீந்தர்  தன் வாழ்நாளில் நிறையவே  சந்தித்திருக்கிறார்.  அவருடைய  பரந்த உள்ளம் இதனை  பொருட்படுத்தவும் இல்லை, அதற்காக ஒருபோதும் அவர் மனம் கலங்கியதும் இல்லை.  கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்தவர் அவர்.

திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த காலத்தில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்கு ஒருவிதமான அதீத மவுசு ஏற்பட்டது.   1940-ஆம் ஆண்டு சோமையாஜுலு வசனம் எழுதிய “மணிமேகலை”,  மற்றும் 1943-ஆம் ஆண்டு இளங்கோவன் வசனம் எழுதிய “சிவகவி” திரைப்படத்திற்குப் பின்னர்  வசனகர்த்தாவுக்கு சிறப்பான நட்சத்திர அந்தஸ்த்து கிடைக்கத் தொடங்கியது. இந்த வசன மோக அலை அடித்தபோது  சரியான நேரத்தில் பிரவேசித்து,  தக்க ஆதாயம் பெற்று,   திரைப்பட உலகத்தின் மூலம்  தங்களை தக்கவைத்து முன்னிறுத்திக் கொண்டவர்களின் பட்டியலில்  மு.கருணாநிதி  அவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இதில் பிழைக்கத் தெரியாதவர்களின் பட்டியலில் வேண்டுமானால் ரவீந்தரை முதன்மை  இடத்தில் வைத்துக் கொள்ளலாம் . தொடக்ககால முதல் இறுதிகாலம்வரை சினிமா உலகில் முடிசூடா மன்னராகவும், ஒரு மாநிலத்திற்கு மூன்றுமுறை முதல் அமைச்சராக இருந்த ஒருவருக்கு பாசத்திற்கும்,  நேசத்திற்கும் உரியவராக இருந்தும், எந்தவித பிரயோஜனமும் அடையாத ஒரே நபர் இவராகத்தான் இருக்க முடியும்.

உதவியை  எம்.ஜி.ஆரிடம் நாட எண்ணம் ஏற்பட்ட போதெல்லாம் தன்மானமும் சுயகெளரவமும்  அவரை தடுத்து விட்டது.  32 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருந்த போதிலும் ஒரு சொந்த வீடுகூட வாங்க முடியாமல் வாடகை வீட்டிலேயே அவர் தன் வாழ்நாளை கழிக்க நேர்ந்ததுதான் கொடுமையிலும் கொடுமை.

எம்.ஜி.ஆரின் உள்ளங்கவர்ந்த உன்னத மனிதராகவும், அபிமானியாகவும், விசுவாசியாகவும், 35 ஆண்டுகட்கு மேல் உடன் பணியாற்றியவர் ரவீந்தர். “அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும் உடையான் சடையன்” என்று கவிகம்பன் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்ததைப்போன்று , எம்.ஜி.ஆர், வீட்டுக் கதவுகள் ரவீந்தருக்காக எல்லா நேரமும் திறந்தே இருந்தன. எந்நேரத்திலும் எம்.ஜி.ஆர்.அவர்களை நேரில் சென்று சந்திக்கும் உரிமம் பெற்றிருந்தார் ரவீந்தர்.  தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு “எங்க வீட்டுப் பிள்ளையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.  அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கே “எங்க வீட்டுப் பிள்ளை”யாக வலம் வந்தவர் ரவீந்தர்.

கதை இலாகாவில் மூன்று பேருடைய ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ரவீந்தரை இவர்கள் மட்டம் தட்டியே வைத்திருந்தனர். அதில் முதன்மையானவர் ஆர்.எம்.வீரப்பன். “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின்” மேனேஜிங் டைரக்டர் அளவுக்கு உயர்ந்து விட்ட இவரை மீறி யாரும் அங்கே வாலாட்ட முடியாது என்ற சூழல் நிலவியது. எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸை பொறுத்தவரை  Deciding Authority இவராகத்தான் இருந்தார்.

இவருக்கு ரவீந்தரைப்போன்று ‘கிரியேட்டிவாக’ சிந்திக்க வராது. இருந்தபோதிலும் குறை சொல்லத் தெரியும்; மாற்றங்களைச் சொல்லத் தெரியும். ஒரு பெரிய கலைத்துறை மேதாவி போன்ற ஒரு இமேஜை இவர் எம்.ஜி.ஆரிடம்  தன்னைப்பற்றி உருவாக்கி வைத்திருந்தார். அங்கு இவர் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. எம்.ஜி.ஆரின் பிரியமான அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியையே பல தருணங்களில் எம்.ஜி.ஆரை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்ட ஆர்.எம்.வீரப்பனுக்கு ரவீந்தரை ஓரங்கட்டுவது பெரிய காரியமா என்ன?

1958-ஆம் ஆண்டு “நாடோடிமன்னன்” மாபெரும் வெற்றியைக் கண்டது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அதாவது 1963-ஆம் ஆண்டு ரவீந்தர் கதை-வசனம் எழுத “கலைஅரசி” படம் வெளிவந்தது. படம் வித்தியாசமான கதையமைப்பில் இருந்தபோதிலும், படம் சரியாக ஓடவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆர்.எம்.வீரப்பன்,  ரவீந்தரை ஒரு ராசியில்லாத கதாசிரியர் போன்ற ஒரு  பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தார். இது ரவீந்தரின் கலைத்துறை வாழ்க்கையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.

கதை இலாகாவில் இருந்த மற்றொரு முக்கிய நபர் வித்துவான் வே. இலட்சுமணன். இவர் சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த “நான் ஆணையிட்டால்” போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். எம்.ஜி.ஆர். நடித்து, சியமாளா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான “சிலம்புக்குகை” என்ற படத்திற்கு வசனம் எழுதியதும் வித்வான் வே.லட்சுமணன்தான். அந்தப்படம் தயாரிப்பு நிலையிலேயே நின்று போனது. படம் வெளிவரவே இல்லை. “இதயம் பேசுகிறது” மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் ஒன்றுசேர்ந்து “உதயம் புரொடக்‌ஷன்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினர். தனக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்கும்படி லட்சுமணன் எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வைக்க, உடனே அவர் சம்மதமும் தெரிவித்துவிட்டார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக  மணியன் கதை எழுதி “இதயவீணை” படம் வெளிவந்தபோது பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தந்தது.

ரவீந்தருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொருவரும் புரட்சி நடிகரின்  துணையால், “எம்.ஜி.ஆர்”. என்ற ஒரு மாபெரும் நட்சத்திரத்தை மட்டும் மூலதனமாக வைத்து, வெற்றிக்கனிகளைப் பறித்த வண்ணம் இருந்தனர். பொருளாதார ரீதியில் நல்ல நிலைக்கு எட்டியிருந்தனர். நம் ரவீந்தரைத் தவிர.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவில்  இருந்த மூன்றாவது முக்கியப் புள்ளி எஸ்.கே.டி.சாமி. இவர் எம்.ஜி.ஆரின் அந்தரங்க காரியதரிசியாகவும், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் பங்குதாரராகவும் இருந்தவர். எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர். படம் முடிந்தபிறகு “இந்த காட்சியை நீக்கிவிடுங்கள், இந்த காட்சி சரிப்பட்டு வராது” என்றெல்லாம் அதிரடி மாற்றங்களைச் செய்யச் சொல்லி எம்.ஜி.ஆரையே திக்குமுக்காடச் செய்தவர். ஓரளவு ஆளுமை பொருந்தியவர். இவரையும் ஓரங்கட்டினார் ஆர்.எம்.வீரப்பன்.

ரவீந்தர் மறைந்தபோது எந்த ஒரு  பத்திரிக்கையும் ஒரு பெட்டிச் செய்திகூட வெளியிடவில்லை. சினிமா உலகம் அவரது இழப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எத்தனையோ வெற்றிப் படங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்த இந்த வசனகர்த்தாவுக்கு சினிமா உலகம் இழைத்த மிகப் பெரிய துரோகம் இது.

“அடைந்தால் மகாதேவி;  இல்லையேல் மரணதேவி” என்று வசனம் எழுதிய ரவீந்தரின் மரணத்தின்போது  சினிமாக்காரர்கள் யாரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த  வரவேயில்லை.

எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த நடிகை மஞ்சுளாவுக்கு தாரை தாரையாக கண்ணீர் விட்ட சினிமாக்காரர்களில் ஒருவர்கூட – எம்.ஜி.ஆரின் கலைத்துறை வாழ்க்கையில், இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு, அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த – ரவீந்தரின் மரணத்திற்கு ஒரு சொட்டு கண்ணீர்கூட விடவில்லை.

எனது பாசத்திற்குரிய நண்பர் எழுத்தாளர் நாகூர் ரூமி இதற்கு முந்தைய பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். “ரவீந்தர் மாமாவுடைய அலைபேசி எண் இருந்தால் கொடுங்கள். நான் சென்னை போகும்போது நேரில் பார்த்து பேட்டி எடுத்து வருகிறேன்” என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது.காரணம் அவருடைய இறப்பு பற்றியச் செய்தி நாகூர்க்காரர்கள் கூட அறியாமல் இருந்ததுதான்.அந்த அளவுக்கு பத்திரிக்கை மற்றும் இதர ஊடகங்கள் அவரை மறந்தே போயிருந்தன.

2002 – ஆம் ஆண்டு,  தினமணி ஈகைப் பெருநாள் மலருக்காக பேட்டி காண்பதற்காக எனது அருமை நண்பர் புதுக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் முனைவர் ஹ.மு.நத்தர்சா அவர்களும், கம்பம் சாஹுல் ஹமீது அவர்களும் தேனாம்பேட்டையில் எல்லையம்மன் காலனியில் இருந்த அவருடைய வாடகை வீட்டிற்கு சென்றனர். “அந்த சந்திப்பு அனுபவம் எப்படி இருந்தது?” என்று நண்பர் நத்தர்சாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது ஒரு நிமிடம் கண்கலங்கி விட்டார்.

அவரது இல்லத்து வரவேற்பறை முழுவதும் அவருடைய துள்ளல் நிரம்பிய இளமைக்கால புகைப்படங்கள் காட்சிதர, குழிவிழுந்த கண்களுடன், வெளிர்ந்த முகமும், தளர்ந்த தேகமுமாய்,  முதுமை வரைந்த ஓவியமாய் காட்சி தருகிறார் ரவீந்தர். அப்போது அவருக்கு வயது எழுபத்தைந்து.

ஒரு மாபெரும் மனிதருக்கு பக்கபலமாக இருந்த இவர் இன்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசவும் முடியாமல் இப்படி திணறுகிறாரே என்று ஆடிப்போகிறார் பேட்டி காணவந்த நத்தர்சா. உற்சாகமாக கதை சொல்லி பழக்கப்பட்ட நாக்கு இன்று ஒன்றிரண்டு வார்த்தைகளைக்கூட கோர்வையாய் எடுத்துரைக்க தடுமாறுகிறதே என்று அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

இந்த நிகழ்வுக்குப்பின் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து அந்த எழுத்துலக வேந்தர் இவ்வுலகை விட்டுப் பிரிகிறார். யாருமே அறியாத வண்ணம் அந்த திரையுலக ஜோதி அணைந்து போகிறது.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

  இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”

என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள்  என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.


- நாகூர் அப்துல் கையூம்
- தொடரும்
எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)
நன்றி : http://nagoori.wordpress.com/

No comments: