Tuesday, October 21, 2014

சீர்காழிக்கும் நாகூருக்கும் ஓர் இனிப்பான பந்தம்

மேடையில் சிவசிதம்பரத்துடன் எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், மா.பொ.சி. அரிய புகைப்படம்

ரவீந்தரைப்பற்றி எனது வலைத்தளத்தில் தொடர் எழுது வருகிற எனக்கு  “இன்பக்கனவு” நாடகம் சீர்காழியில் அரங்கேறியபோது அது எந்த இடத்தில் நடைபெற்றது என்ற துல்லியமான விவரம் தேவைப்பட்டது. காரணம் எம்.ஜி.ஆருக்கு கால்முறிவு ஏற்பட்டது சீர்காழியில் நாடகம் நடந்தபோதுதான். பதிவு செய்யப்படவேண்டிய முக்கியமான நிகழ்வு அது. அதைபற்றி அங்குள்ள ‘பெருசு’களிடம் விசாரிப்பதற்கு எனது நண்பர் சீர்காழி கவிஞர் தாஜ் அவர்களைத்தான் தொடர்பு கொண்டேன். அவரும் அதற்குரிய விவரங்களை உடனேயே சேகரித்துத் தந்தார். என் நண்பர் எழுத்தாளர் ஆபிதீனுக்கும் அப்படித்தான். தாஜ் என்றால் அப்படியொரு இஷ்டம். அவருடைய வலைத்தளமே அதற்கு சான்று பகரும்.
சீர்காழிக்கும் நாகூருக்கும் அப்படியென்ன ஒரு நெருக்கமான பந்தம் என்று புரியவில்லை.சீர்காழி கோவிந்தராஜனுக்கும், நாகூர் ‘இசைமணி’ யூசுப்பிற்கும் “இசைமணி” என்ற பட்டம், சென்னை அண்ணாமலை மன்றத்தில், தமிழிசை சங்கம் ஒரே மேடையில் வைத்து வழங்கியது. அப்போது சீர்காழி கோவிந்தராஜனுக்கு வெறும் 16 வயதுதான்.

அது போகட்டும். அதைவிட ஒரு மிக நெருங்கிய தொடர்பு ஒன்றுண்டு.

‘கணீர்’ என்ற வெண்கலக்குரலுக்கு சொந்தமானவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு நாகூர் பூர்வீகமாக கட்டாயம் இருக்கும் போல.

சிம்மக்குரலோன் நாகூர் ஹனிபாவைப் போன்று சீர்காழி கோவிந்தராஜனின் பூர்வீகமும் நாகூர்தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?

சீர்காழி கோவிந்தராஜனின் பெற்றோர் சிவசிதம்பரம் மற்றும் அவையாம்பாள். இவர்களது பூர்வீகம் நாகூரிலிருந்துதான் தொடங்குகிறது. தந்தையாரின் அதே பெயரைத்தான் தன் மகனுக்கும் சிவசிதம்பரம் என பெயர் சூட்டினார் சீர்காழி கோவிந்தராஜன்.

கம்பராமாயணத்தை பாமரரும் கேட்டுப் பரவசப்படும் வகையில் இசைப் பாடல்காளாக கீர்த்தனைகளாகப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.. இதற்காக அவர் தகுந்த ஆலோசனை பெற்றது நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் அவர்களிடமிருந்துதான்.

சீர்காழி கோவிந்தராஜனின் இசை வாரிசாக நாடெங்கும் புகழ் பரப்பி வரும் அவரது மகன் டாக்டர் சிவசிதம்பரம் கூறியதை அப்படியே இங்கே தந்திருக்கிறேன்.

    “எங்களுடைய முன்னோர் நாகூரில் வாழ்ந்தவர்கள். மிட்டாய் வியாபாரம். வியாபாரத்தைப் பெருக்க நகரங்களை நோக்கிச் சென்றார்கள். அப்படி நாங்கள் வந்தடைந்த இடம் சீர்காழி. நாகேஸ்வரா கோயில் அருகில் இந்தப் பகுதியில் முதல் மிட்டாய்க் கடை திறந்தவர்கள் நாங்கள்தான்.”

சீர்காழிக்கும் நாகூருக்குமிடயே நிலவும் இந்த இனிப்பான பந்தம் இன்னும் தொடரட்டும்.


- நாகூர் அப்துல் கையூம்
நன்றி http://nagoori.wordpress.com/

*********************************************************************************
என் ஊர்!
சோழ மண்ணின் நுழைவாயில்...

"எங்களுடைய முன்னோர் நாகூரில் வாழ்ந்தவர்கள். மிட்டாய் வியாபாரம். வியாபாரத்தைப் பெருக்க நகரங்களை நோக்கிச் சென்றார்கள். அப்படி நாங்கள் வந்தடைந்த இடம் சீர்காழி. நாகேஸ்வரா கோயில் அருகில் இந்தப் பகுதியில் முதல் மிட்டாய்க் கடை திறந்தவர்கள் நாங்கள்தான்."
-டாக்டர்  சீர்காழி சிவசிதம்பரம்

 நன்றி  விகடன் காம்
மேலும் படிக்க :http://www.vikatan.com/

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு! நன்றி!