Friday, November 28, 2014

OPEN DAY – Rafeeq / திறந்த நாள் - ரபீக்

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவை, உலகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் அவதானிக்கிறார்களோ இல்லையோ, ஆடை வடிவமைப்பாளர்கள் நேரிலோ அல்லது தொலைக்காட்சியின் வழியாகவோ பார்ப்பதற்கு குவிந்திருப்பார்கள். பார்வையைக் குவித்திருப்பார்கள்.

முதல் பெண்மணியான அதிபரின் மனைவியின் உடையின் வடிவமைப்பு மற்றும் அதனை வடிவமைத்த நிபுணர்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே அதன் காரணம்.

2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில், முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமா அணிந்துவரும் உடைபற்றி, அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களின் தயாரிப்பில் உருவான பல ஆடைகள் அவரின் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றிரவு விழாவின் மேடையில் தோன்றும் வரையிலும் தேர்ந்தெடுத்த உடைபற்றிய தகவலை மிச்செல் ஒபாமா வெளியிடவில்லை.

பிறகு, அவர் அணிந்துவந்த ஆடையின் வடிவமைப்பிற்குச் சொந்தக்காரர் 27 வயதே ஆன ஜாஸன் வூ எனும் கலைஞர் என்று தெரிந்த பிறகு அனைவரும் வியந்தனர்.
திருமதி. ஒபாமா அணிந்திருந்த உடைபற்றி நமக்கு அக்கறையில்லை. ஆனால், 27 வயதில் உலகத்தில் உள்ள ’ஃபேஷன் டிசைனர்கள்’ அனைவரும் போற்றும்படியாக வளர்ந்திருக்கிறார் ஜாஸன். எப்படி? இந்த இளம் சாதனையாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது யார்? என்பதே நம் சிந்தனை. விரிவாகப் பார்ப்போம்!

அன்று OPEN DAY. அந்த ஐந்து வயது சிறுவன் மதிப்பெண் குறைவாக எடுக்கிறான் என்ற குற்றச்சாட்டு இல்லை. மாறாக, ”உங்கள் பையன் எப்பொழுது பார்த்தாலும் ஒரு பொம்மையினை வைத்துக் கொண்டு விளையாடுகிறான். அதற்கு உடை உடுத்துகிறான் பிறகு மாற்றுகிறான். பாடங்களைக் கவனிக்கத் தவறுவது மட்டுமன்றி அடுத்த சிறுவர்களின் கவனத்தையும் சிதறச் செய்கிறான்.” இவையே அந்தச் சிறுவனின் தாயிடம் ஆசிரியை சொன்ன முறையீடுகள். மேலும் ஒரு சிறுவன் பெண் பிள்ளைபோலப் பொம்மை வைத்து விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே முதலில் இந்தப் பழக்கத்தை அவனிடமிருந்து நிறுத்துங்கள். படிப்பில் அதிகக் கவனம் செலுத்தும்படி செய்யுங்கள் என்று கட்டளையுமிட்டார்.

ஒரு சிறிய பையன் பொம்மைகளை வைத்து விளையாடுகிறான் என்பது ஒன்றும் குற்றமில்லைதான்; ஆனால், பள்ளிக்கூடத்திலிருந்து இதுபோலொரு எச்சரிக்கை வந்தால் நாம் என்ன செய்திருப்போம். உடனே இருக்கிற விளையாட்டுச் சாமான்களையெல்லாம் எடுத்துப் பரணில் போட்டிருப்போம். குழந்தை கண்ணில் படும் நேரமெல்லாம் “என்ன படித்தியா?, வீட்டுப்பாடம் செய்தாயா?” என்று மிரட்டும் பெற்றோராய் மாறியிருப்போம். புரியாத வயதிலேயே ’புரஃபெஷனல்’ படிப்பு பற்றியெல்லாம் பேச ஆரம்பித்திருப்போம். ”அந்தப் பையனைப் பார் முதல் ரேங்க் வாங்குகிறான், நீ இப்படி இருந்தால் எப்படி டாக்டர் ஆவது? கைநிறைய சம்பாதிப்பது??” என்று ஒப்பிட்டுப் புலம்பியிருப்போம். இயற்கையிலேயே துளிர்விடும் திறமைகளைக் கிள்ளி எறிந்திருப்போம். இல்லையா?

ஜாஸன் வூ என்ற அந்தத் தைவான் நாட்டுச் சிறுவனை அவனது தாய் அப்படியெதுவுமே சொல்லவில்லை. அவனிடம் இருந்த திறமையினைக் கண்டு ஆச்சர்யமடைந்திருக்கிறார் இந்தச் சிறு வயதிலேயே அவனிடமிருந்த ஆடை வடிவமைக்கும் திறன் கண்டு வியந்திருக்கிறார். நாமெல்லாம் செய்வதற்கு நேர்மாறாக, ஒரு மாணவனிடம் ஒளிந்திருக்கும் திறமையினைக் கண்டுகொள்ளாத பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதால் என்ன பயன் கிடைத்துவிடும்? என்று பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தினார். ஜாஸனுக்கு வீட்டிலேயே ஆரம்பக்கல்வி ஆரம்பமானது.

நம் போன்ற பெற்றோர்கள்போல் நினைத்திருந்தால் அவனையும் ஒரு மதிப்பெண் பெறும் இயந்திரமாக மாற்றியிருக்க முடியும் ஆனால், ஒரு சாதாரணத் தொழிலோ அல்லது துறையோ அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படும்போது அத்துறையில் பிரகாசமாய் ஒளிர முடியும் என்று நம்பியவர் அவர், ஆகையினால் தன் ஒன்பது வயது மகனிடம் இருக்கும் தனித்திறமையினை மேம்படுத்தும் நோக்கில், சிறுவயதினருக்கு ’ஃபேஷன் டிசைன்’ கற்றுத்தரும் பள்ளியைத் தேடி, மகனுடன் கனடாவிற்கு குடிபெயர்கிறார். அங்கு முறையான பயிற்சி, தொழில்நுட்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற பெயரும் புகழும் மேற்சொன்ன நிகழ்வின் மூலம் கிடைக்கிறது.

சரி, நம் எல்லோரினாலும் நாடு விட்டு நாடு சென்று பயிற்றுவிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆயினும், நம்மில் எத்துனை பேர் நம் குழந்தைகளின் திறன்களை உற்று நோக்கியிருக்கிறோம்? அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம்? அவர்களிடம் இயற்கையாய் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோம்?

நம்பிள்ளைகளைப் பற்றி பள்ளிகளில் தரும் Report மட்டுமே முழு மதிப்பீடுகள் அல்ல. ”எல்லோருமே அறிவாளிகள்தான். ஆனால் நீந்தக்கூடிய திறமை பெற்றிருக்கும் மீனைப் பிடித்து மரம் ஏறுவதற்குக் கற்றுக்கொடுப்பவன் முட்டாள்” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியது போல யாருக்கு எந்தத் திறமையுண்டு என்பதறிந்து அவர்களை அவர்கள் வழி உயர்த்துவோம்!
Rafeeq Friend 
பி.கு: துபையில் நம் தமிழ்ச் சிறுவர்களுக்காக இயங்கும் தமிழ்த்துளி அமைப்பின் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் பேச அழைத்தபொழுது (ஜனவரி 2013) பெற்றோர்கள் முன்பாகப் பேசியதன் சாரம் இது.

No comments: